துலாம்
(சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
துலாம் ராசிக்கு தற்போது நிலை கொண்டிருக்கும் பத்தாமிடத்தில் இருந்து ஒன்பதாமிடத்திற்கு ராகுவும், நான்காமிடத்தில் இருந்து மூன்றாமிடத்திற்கு கேதுவும் மாற இருக்கிறார்கள்.
இம்முறை ராகுவைவிட கேது நன்மைகளைத் தரும் இடத்திற்கு மாற இருப்பதால் துலாம் ராசியைப் பொறுத்தவரையில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நன்மைகளைத்தான் அதிகம் தரும் என்பது நிச்சயம்.
இன்னும் ஒரு கூடுதல் பலனாக ஒன்பதாமிடத்திற்கு மாறும் போது பெயர்ச்சியின் மத்தியில் வரும் நவம்பர் மாதம் முதல் ராகு குருவின் பார்வையைப் பெறுவார். பார்க்கும் கிரகத்தின் பலனை ராகு எடுத்துச் செய்வார் எனும் விதிப்படி ராகு குருவுக்கு இணையான பலம் கொண்ட கிரகமாக மாறி உங்களுக்கு நல்ல பலன்களைச் செய்வார்.
மேலும் கேது என்பவர் அதிரடியான பலன்களை தரும் ஒரு நிழல்கிரகம். அவர் நல்ல பலன்களைச் செய்ய வேண்டுமெனில் ஒரு சுபக் கிரகத்தோடு தொடர்பு கொள்ள வேண்டும் என்பது ஜோதிடவிதி. இந்தப் பெயர்ச்சியின் மூலம் நவம்பர் முதல் கேது இயற்கைச் சுபரான குருவுடன் அவர் இணைவதால் 2019-ம் வருடம் நவம்பருக்குப் பிறகு ராகு கேதுக்களினால் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் இருக்கும். மொத்தத்தில் இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி நல்லவைகளைத் தவிர்த்து அல்லவைகளைச் செய்யாது என்பது உறுதி.
ராகு ஒன்பதாமிடத்திற்கு வர இருப்பதால் துலாம் ராசிக்காரர்களுக்கு அன்னியமத, இன, மொழிக்காரர்களால் மிகுந்த நன்மைகளும், பொருளாதார மேன்மைகளும் இருக்கும். குறிப்பாக ராகுதசை, ராகுபுக்தி, குருதசை குருபுக்தி நடந்து கொண்டிருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகள் சற்றுக் கூடுதலாகவே இருக்கும்.
கடந்த காலத்தில் பத்தாமிடத்து ராகுவால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முடக்கங்களையும், தடைகளையும், கெடுபலன்களையும் சந்தித்தவர்கள் இப்போது அவை நீங்கி எந்த விஷயங்களில் தடைகள் இருந்தனவோ அதே அமைப்புகள் நல்லபடியாகக் கை கொடுப்பதை உணரமுடியும்.
கேது மிகவும் நல்ல பலன்களைத் தரும் மூன்றாமிடத்திற்கு தற்போது மாறி இருப்பது மிகவும் சிறப்பு. இதனால் ஏற்கனவே அவர் பாதித்துக் கொண்டிருந்த நான்காமிடத்தின் சிறப்பு நிலைகளான வீடு, வாகனம், தாயார், உயர்கல்வி போன்றவைகளில் இனிமேல் துலாம் ராசிக்கு நல்ல பலன்கள் நடக்கும்.
மேலும் மூன்றாமிடத்துக் கேதுவின் பலனாக துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத வகையில் மன தைரியம் அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் ஆற்றல் பெருகும். மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உங்களுடைய முழு வீரியமும் உங்களுக்கே தெரியவரும் காலகட்டம் இது.
சகாய ஸ்தானம் வலுப்பெறுவதால் அடுத்தவர்களிடமிருந்தும், தொழில் நிறுவனங்கள், அரசாங்க அமைப்புகள் போன்றவற்றில் இருந்தும் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தாராளமாக கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களைப் பிடிக்காத எதிரிகள் கூட தன்னை அறியாமல் ஒருவகையில் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
மூன்றாமிடம் கீர்த்தி, புகழ் எனப்படும் ஒரு மனிதனின் செயலுக்காக அடுத்தவரிடம் பாராட்டுகளைப் பெறும் இடம் என்பதால் சிலருக்கு தனி மனிதரிடமிருந்தும் சிலருக்கு சமுதாயத்திடமிருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கும். 2020-ம் வருடத்தில் உங்களில் சிலர் சாதனைகளைச் செய்வீர்கள். அந்த சாதனைகளுக்காக என்றென்றும் நினைவு கூறப்படுவீர்கள்.
இந்தப் பெயர்ச்சிக் காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
மூன்றாமிடத்தில் குரு,சனி,கேது இணையப் போவதால் சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். துலாம் ராசிக்காரர்கள் இம்முறை சிவன் அருள் கிடைக்கப் பெறுவீர்கள்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில துலாம் ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும். கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்வீர்கள்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.
இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெயர்ச்சியாக இது இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், செயல் திறமைக்கும் சவால்கள் இருக்கும். மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இப்போது செயல்படுத்தி சோதனை செய்வீர்கள். சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடக்கும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் தடங்கலாகி இருக்கும் தங்கை தம்பியின் திருமணத்தை நல்லபடியாக நடத்துவீர்கள்.
பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் போன்றவைகள் நடக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்லபலன்கள் உண்டு. வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய்தந்தையைப் பார்க்க தாய்நாடு வந்து திரும்புவீர்கள். இருக்கும் நாட்டில் சுமுகநிலை இருக்கும். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள்.
புனித யாத்திரை செல்வீர்கள். மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.
மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதமின்றி செய்து கொடுக்க முடியும். எதிர்பாராத தனலாபங்கள் இருக்கும்.
இந்தப் பெயர்ச்சியினால் ஆரம்பத்தில் இருந்தே. ஏதேனும் ஒரு வகையில் பணம் வந்து போய்க் கொண்டிருக்கும் என்பதோடு வருமானக் குறைவு என்பது இருக்கவே இருக்காது என்பதால் இந்த ராகு, கேது பெயர்ச்சியை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
பரிகாரங்கள்
கேதுபகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயத்தில் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அன்றோ அல்லது ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையன்றோ அபிஷேகம் செய்யுங்கள். இயலாதவர்கள் செவ்வாய்தோறும் விநாயகப் பெருமானுக்கு விளக்கேற்றுங்கள்.

No comments :
Post a Comment