Friday, February 1, 2019

KANNI : 2019 - RAHU KETHU PEYARCHI கன்னி : 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கன்னி 

(உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

கன்னி ராசிக்கு தற்போது மாற இருக்கும் ராகுவிற்கான பத்தாம் இடமும், கேதுவிற்கான நான்காம் இடமும் நன்மையைத் தரும் இடங்களாக நமது மூலநூல்களில் சொல்லப்படவில்லை. 

பத்தாமிடத்திற்கு மாறும் ராகு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளையும், நான்காமிடத்திற்கு மாறும் கேது வீடு, வாகனம், தாயார், சுகம் போன்ற அமைப்புகளையும் பாதிப்பார் என்று நமது மூலநூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. 

ஆனால் தான் நுழைந்த ராசிக்கான பலன்களை பெயர்ச்சியின் பிற்பகுதியில் கொடுக்கும் வழக்கம் கொண்டவை ராகு,கேதுக்கள். வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் ராகு, குருவின் பார்வையையும், கேது குருவின் இணைவையும் பெறப் போவதால் கன்னிக்கு கெடுபலன்கள் எதுவும் இம்முறை இருக்காது. 

ஏற்கனவே அர்த்தாஷ்டம சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான கன்னி ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம், வீடு, குடும்பம் போன்றவைகள் மந்தமான நிலைகளில் இருந்து கொண்டிருக்கும் போது இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியால் நன்மைகள் இருக்கலாமே ஒழிய தீமைகள் இருக்கப் போவது இல்லை. 

எனவே தற்போது பத்தாமிடத்திற்கு மாறும் ராகுவாலும், நான்காமிடத்திற்கு மாறும் கேதுவாலும் தீமைகள் என்று எதுவும் சொல்வதற்கு இல்லை. தீமைகள் எதுவும் உங்களுக்கு ராகு-கேதுக்களால் நடக்கவும் செய்யாது. 

இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடனும் இருக்கும். 

உங்களில் பெரும்பாலோருக்கு இதுவரை வேலை தொழில் வியாபாரம் போன்ற விஷயங்களில் மனதிற்குப் பிடிக்காத சம்பவங்களும், உழைப்பிற்கேற்ற ஊதியமும், நியாயமான பதவிஉயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு இனி பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். 

தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். 

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எல்லாத்துறையினருக்கும் இனிமேல் நல்லபலன்கள் நடக்கும். 

வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். 

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும். இதுவரை புத்திரபாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறக்கும். 

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். 

இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்க வாய்ப்பு இருப்பதால் உங்களுக்கு காதல் வரக்கூடும். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். 

வயதானவர்களில் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வீடு வாங்குவதற்கு இருந்த தடை நீங்கி வீடு வாங்கவோ கட்டவோ முடியும். 

குறிப்பிட்ட ஒரு பலனாக உங்களில் சிலர் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்யும்படி இருக்கும். சகோதரிகளால் செலவு உண்டு. 

முதல் ஆறு மாதங்கள் ராகுவிற்கு சனியின் பார்வை மட்டும் இருப்பதால் வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. 

கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மீண்டும் உங்களிடம் தலையெடுத்து அனைத்து பிரச்னைகளையும் நீங்கள் தனியொருவராகவே சமாளித்து தீர்க்கப் போகிறீர்கள். 

யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக கடல் தாண்டி வெளிநாடு செல்வீர்கள். குறிப்பாக ஆன்மிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் ஏற்படும். வெளிநாடு சம்பந்தமான முயற்சிகள் வெற்றியாகும். 

மொத்தத்தில் கன்னி ராசிக்கு இந்த ராகு, கேது பெயர்ச்சியால் துன்பங்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. 

பரிகாரங்கள் 

ராகுபகவானால் ஏற்பட இருக்கும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள சலவைத் தொழிலாளி ஒருவருக்கு சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் அவர் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று அடுப்புக்கரியினை ஏழு கிலோவிற்குக் குறையாமல் தானம் செய்யுங்கள்.

No comments :

Post a Comment