Thursday, February 28, 2019

மிதுனம் - 2019 மார்ச் மாத ராசி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி:8681 99 8888

மிதுனம்: 

ராசிநாதன் புதன் நீசமாக இருந்தாலும் வக்ரமாகி நீசபங்க ராஜயோக அமைப்பில் இருப்பது மாதத்தின் முதல் பகுதியில் பின்னடைவுகளையும், 15-ம் தேதிக்குப் பிறகு எதிலும் வெற்றியை தரும் அமைப்பு என்பதால் மார்ச் மாதம் உங்களுக்கு மாற்றங்களை தருகின்ற மாதமாக இருக்கும். ஏழில் இணையும் சனி, கேது உங்களில் சிலருக்கு வட மாநில பிரயாணங்களையோ, சிலருக்கு வெளிமாநில வெளிநாடு வேலை மாறுதல்களையோ தருவார் என்பதால் மிதுன ராசிக்காரர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்கின்ற மாதம் இது. ஒரு சிறு பயணமாவது இப்போது உங்களுக்கு இருக்கும். 

ஏழில் சனி, கேது இணைந்து, ராசியில் ராகு அமர்வது சுற்றியிருப்பவர்கள் உங்களை வெறுப்பேற்றி கோபம் வரவழைக்கும் ஒரு அமைப்பு. எனவே பேச்சிலும் செயலிலும் நிதானம் வேண்டும். எதற்கும் பொறுமை இழந்து எரிச்சல் படுவீர்கள். நிதானமாக இருங்கள். குரு பத்தாமிடத்தில் நீசனாக இருக்கும் ராசிநாதன் புதனைப் பார்ப்பது தொழில் அமைப்புகளில் நல்ல பலன்களைத் தரும் என்பதால் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் லாபத்தை தரும். பொருளாதாரச் சிக்கல்கள் தீரும். வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். 

மாதம் முழுவதும் சுக்கிரன் நட்பு வீடுகளில் இருப்பது சிறந்த அமைப்பு. பாபக் கிரகங்களான சனி, கேது, ராகு ராசியோடு சம்பந்தப்படுவதால் உங்களில் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். இந்த நிலைமை இந்த மாதம் மட்டும்தான். மாத இறுதி நாளில் குருபகவான் அதிசார நிலையில் இந்தக் கிரகங்களுடன் இணைவதால் மிதுனத்திற்கு அடுத்த மாதம் முதல் மிக நல்ல பலன்கள் உண்டு. மூன்றாமதிபதி சூரியன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைவதால் நியாயமாகக் கிடைக்க வேண்டிய உதவிகள் கூட பொறாமை கொண்டவர்களால் தடுக்கப்பட்டு கிடைக்காமல் போகும். இருந்தாலும் சுக்கிரன் சகாய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தனி ஒருவராகவே சாதித்துக் காட்டுவீர்கள். மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்க மாட்டீர்கள். எதிர்பாராத பணவரவு இருக்கும் என்பதால் மார்ச் மாதம் சோதனைகளைக் கொடுக்காத மாதம்தான். 

2,3,7,8,9,12,13,22,27,29 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 2-ம்தேதி மதியம் 12.39 முதல் 5-ம்தேதி அதிகாலை 1.44 வரையும், மாதக் கடைசியில் 29-ம் தேதி இரவு 7.23 மணி முதல் 1-ம்தேதி காலை 8.21 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் வெகுதூர பிரயாணங்களை தள்ளி வைப்பது நல்லது. புதிய முயற்சிகளும், ஆரம்பங்களும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment