ரிஷபம்:
மார்ச் மாத பிற்பகுதியில் ராசிநாதன் சுக்கிரன் வக்கிர நிலையில் இருக்கும் புதனுடன் இணைந்து பத்தாமிடத்திற்கு மாறுவது ரிஷப ராசிக்கு சில திருப்தியற்ற நிலைகளைத் தரும் என்பதால் ஏற்றுக் கொள்ள முடியாத சில முடிவுகளை நீங்கள் செயல்படுத்த வேண்டிய மாதமாக இது இருக்கும். உங்களில் சிலருக்கு பிடிக்காத ஒன்றை சகித்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற நிலைமையும் ஏற்படும். என்ன இருந்தாலும் ராசிக்கு குரு பார்வை இருப்பதால் சமரசங்களிலும், நீங்கள் நிறைவுகளை பெறுகின்ற மாதம் இது.
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் நட்புநிலையில் ஒன்பதாம் வீட்டில் தனித்திருப்பது யோக அமைப்பு. எனவே மாதத்தின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு எதிலும் சிக்கல்கள் இருக்காது. குறிப்பாக கடன் தொல்லைகள் எதுவும் இந்த மாதம் இருக்காது. பணவரவிற்கு காரணமான புதன் நீசமாக இருந்தாலும் வக்கிர அமைப்பில் இருப்பதால் பணவரவு இருக்கும். பிரச்னைகளை சமாளிப்பீர்கள். முற்பகுதியிலும், பின்னாலும் இருவேறு எதிர் கிரக நிலைகளை கொண்ட மாதம் இது என்பதால் அனைத்திலும் நன்மைகளும் தீமைகளும் கலந்து நடக்கும். என்ன இருந்தாலும் ராசிநாதன் வலிமையாக இருப்பதால் எதையும் சமாளித்தும், ஜெயித்தும் காட்டுவீர்கள்.
ஏடிஏம்மில் பணம் நிரப்புவது போன்று பெரியஅளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள், பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. பருவ வயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். சுக்கிரனின் நட்பு பலம் நல்லவைகளைத் தரும். சிலருக்கு அதிகமுயற்சி இல்லாமலே சில காரியங்கள் நடந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் நல்லபடியாக நடக்கும். சிலருக்கு வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் பணிந்து போவது நல்லது. வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பமில்லாத அமைப்பில் வேலை கிடைக்கும். ஆன்மிகம் சம்மந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் நடைபெறும்.
5,6,7,10,11,16,18,19,20,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 27-ம்தேதி காலை 8.19 மணி முதல் 29-ம் தேதி இரவு 7.23 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்டதூர பிரயணங்கள், புதிய முயற்சிகளை இந்த நாட்களில் தள்ளி வைப்பது நல்லது.

No comments :
Post a Comment