ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8870 99 8888
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்த குருபகவான் இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்ம குருவாக மாறுகிறார். ஏழரைச் சனியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விடியலைக் காட்டும் பெயர்ச்சியாக இது அமையும்.
இருள் கிரகமான சனி உங்கள் ராசியில் அமர்ந்ததால் கடந்த சில ஆண்டுகளாக விருச்சிகத்தினர் சொல்ல முடியாத அவஸ்தையில் இருந்தீர்கள். 2012 ம் ஆண்டிலிருந்தே விருச்சிக ராசிக்காரர்கள் கடுமையான சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவரவர் வயது, இருப்பிடம், சூழ்நிலைக்கேற்ப கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நீங்கள் விருச்சிக ராசியாக இல்லாவிட்டாலும் உங்கள் வீட்டில் ஒரு விருச்சிகம் இருந்தாலே அந்தக் குடும்பத்தில் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. குறிப்பாகச் சொல்லப் போனால் இளைய பருவத்தினர் விரக்தியின் விளிம்பில் நிற்கிறீர்கள். கடந்த நான்கு, ஐந்து வருடங்களாக நடந்த எந்தக் குருப்பெயர்ச்சியும் விருச்சிக ராசிக்கு நல்ல, கெட்ட பலன்களைத் தரவில்லை என்பதே உண்மை. அந்த அளவிற்கு ஏழரைச் சனியின் சாதகமற்ற பலன்கள் மட்டும்தான் விருச்சிகத்திற்கு முன்னே நின்றது.
இன்னும் சொல்லப்போனால் கடந்த ஒன்பதாமிட, பதினோன்றாமிட குருப் பெயர்ச்சிகளும் விருச்சிகத்திற்கு நன்மைகளைத் தரவில்லை. அந்த ஆண்டுகளிலும் விருச்சிகத்தினர் சோதனைகளைத்தான் அனுபவித்தீர்கள். ஆனால் உங்களை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருந்த ஜென்மச் சனி அமைப்பு விலகி விட்டதால் இனி குருவால் நன்மைகள் மட்டுமே இருக்கும்.
இந்த பெயர்ச்சி மூலம் இதுவரை இழந்த, இழந்து கொண்டிருக்கும் அனைத்தையும் விருச்சிக ராசிக்காரர்கள் திரும்ப பெறப் போகிறீர்கள். கடுமையான சோதனைக் காலம் இன்னும் சில வாரங்களில் முடிய இருக்கிறது. இனி நடக்க இருக்கும் அனைத்து கிரகப் பெயர்ச்சிகளும் உங்களுக்கு சுப விஷயங்களை மட்டுமே தரும்.
குருவின் அமர்வால் உங்கள் ராசி ஒளி பெறுகிறது. அதாவது நீங்கள் ஒளி பெறப் போகிறீர்கள். உங்களைச் சுற்றி ஒரு பாசிடிவ் எனர்ஜி உருவாகப் போகிறது. இனிமேல் நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள். இந்த அமைப்பால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் உங்களுக்கு வருமானம் மிகவும் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். மேலும் இம்முறை உங்களுக்கு தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குருபகவான் அளிப்பார்.
குரு, சனி மாற்றங்கள் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் விலகும்.
வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும்.
இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதமாகிப் போனவைகள் கிடைக்கும். மாறும் கிரகநிலைகள் இப்போது மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.
சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.
ராசியில் ஜன்மகுரு இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப் பெயர்ச்சியால் இருக்கும். அடிக்கடி ஞாபகமறதி வரும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
ராசியில் அமரும் குருபகவான் தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப் படுத்துவார் என்பதால் அந்த பாவங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
குருவின் ஏழாமிட பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குரு பகவானால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.
பெண்களுக்கு இந்தப் பெயர்ச்சியில் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
விருச்சிக ராசியினருக்கு மகன், மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு அருள் புரிவார்.
காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.
குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். புத்திரதோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்தநேரத்தில் எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.
இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.
மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுதல்கள் எதுவும் இல்லாமல் எதிர்காலத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டியதற்கான அடிப்படை விஷயங்களைச் செய்யும்.
பரிகாரங்கள்:
மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப் போய் உதவி செய்து அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப் பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக் குறைவான பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருபகவானால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.
No comments :
Post a Comment