ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8870 99 8888
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குருபகவான் தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.
குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.
அதன்படி ஒருவருக்கு கடுமையான ஜென்மச்ச்சனி நடக்கும் போது சனியின் கெடுபலன்கள் மட்டுமே முன்னே நிற்கும். மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும் கூட அதை சனி தடுப்பார். எனவே இந்தக் குருப்பெயர்சியின் மூலம் நன்மைகளோ தீமைகளோ தனுசுக்கு பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.
தனுசு ராசிக்கு எப்போதுமே இரண்டு பிரிவாகத்தான் நான் பலன் சொல்கிறேன். இப்போதும் அப்படித்தான். இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் இளைஞர்களுக்கு சாதகமற்ற பலன்களும், ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு நல்ல பலன்களும் நடக்கும்.
இளைய பருவத்தினர் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் காதல் போன்ற விஷயங்கள் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.
எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் இந்த காலகட்டத்தில் இளைய பருவத்தினருக்கு கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.
போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.
அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். தனுசு ராசிக்காரர்கள் இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது.
அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ, வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ இப்போது வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.
முதலீடின்றி தனது திறமையை மூலதனமாக வைத்து சொந்தத் தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுய தொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் வராது. இந்தப் பிரிவினருக்கு நெருக்கடிகள் இருக்குமே தவிர நஷ்டங்கள், கஷ்டங்கள் எதுவும் இருக்காது.
அரசு, தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.
பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.
குருவின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப் பெற்று அந்த பாவங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ, ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.
பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க தடங்கல்கள் விலகும்.
குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.
எட்டாமிடம் வலுப் பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு நல்ல தொகை கைக்கு கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.
டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியால் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.
தனுசுவினர் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். இந்தக் குருப்பெயர்ச்சி சில மாற்றங்கள், அலைச்சல்களைக் கொடுத்தாலும் அனைத்தும் உங்களின் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.
பரிகாரங்கள்:
தனுசுவினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.
No comments :
Post a Comment