ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8870 99 8888
மகரம்:
மகர ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார்.
உங்கள் ராசிக்கு இதுவரை குருபகவான் ஜீவன ஸ்தானமான பத்தாமிடத்தில் இருந்தார். இந்த அமைப்பினால் பெரும்பாலோருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியமும், தொழில்துறை உயர்வும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்தக் குருப் பெயர்ச்சியின் மூலம் இந்த நிலைமை மாறி தொழில் அமைப்புகளில் இனிமேல் சாதகமான பலன்கள் நடக்க ஆரம்பிக்கும்.
ஆயினும் ஒரு மிக முக்கிய பலனாக மகர ராசிக்கு இப்போது ஏழரைச் சனி அமைப்பு நடக்கிறது. கோட்சாரக் கிரக நிலையில் ஏழரைச்சனி நடக்கும் போது சனியின் ஆதிக்கமே ஒருவருக்கு மேலோங்கி நிற்கும் என்பதால் என்னதான் லாப ஸ்தானக் குரு என்றாலும் அவரது பலன்கள் கட்டுக்குள்தான் இருக்கும்.
லாப ஸ்தானத்தில் இருக்கும் குருபகவான் தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் வலுப் பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.
குருபகவானின் மூன்றாமிடப் பார்வையால் எதையும் சமாளிக்கும் மனதைரியம் வரும். உண்மையில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். சகோதர வழியில் உங்களுக்கும் உதவிகளும், நன்மைகளும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.
பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் இருக்கிறது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம் பெண்களுக்கு தாலி பாக்கியமும், திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.
கீர்த்தி ஸ்தானம் சுபத்துவம் பெறுவதால் மகர ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். ஜோதிடத்தில் மூன்றாமிடம் பிரபலமடைவதைக் குறிக்கும் என்பதால் நவீன யுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் மகர ராசிக்காரர்களால் சாதிக்க முடியும்.
கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள்.
குருபகவான் தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத், கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய சந்தர்ப்பம் வரும்.
ஷீரடி மகான், ராகவேந்திரர், மகாபெரியவர், பகவான் ரமணர், சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும்.
கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும்.
குருபகவான் சாதகமான இடத்தில் இருந்தாலும், மற்ற ராகு,கேது, சனி போன்ற நிலைகள் சாதகமாக இல்லாததால் அரசு, தனியார் துறைகளில் பணி புரிபவர்கள் அனைத்து விஷயங்களிலும் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம். உடன் பணி புரிபவர்கள் எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் கருத்து வேற்றுமை ஏற்படலாம். மற்றவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.
மேலதிகாரிகளிடம் மோதல் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்தரங்கமான விஷயங்களை அனாவசியமாக யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.
சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ, கவனக் குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்புவது இப்போது சரிப்பட்டு வராது.
எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் கிரகங்களின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம்.
சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் கிடைக்கும். லஞ்சம் கொடுத்து வேலை வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித் தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவீர்கள்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள் தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது.
சுயதொழில் செய்பவர்களுக்கு நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது. சம்பந்தமில்லாத இடத்தில் இருந்து தொழிலுக்கு இடையூறுகள் வரக்கூடும். வியாபாரிகள் கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.
புதிதாக தொழில் ஆரம்பிப்பது, இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவது, அதிக பணம் முதலீடு செய்து ஒரு வியாபாரம் ஆரம்பிப்பது போன்றவைகளை இப்போது செய்ய வேண்டாம். இப்போது செய்து கொண்டிருக்கும் வேலை அல்லது தொழிலை கவனத்துடன் அக்கறையாக செய்து கொண்டிருந்தாலே போதும். எக்காரணம் கொண்டும் யாரை நம்பியும் அகலக்கால் வைத்துவிட வேண்டாம்.
பொதுவாக மகர ராசியினர் நடுநிலை தவறாதவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். எதற்கும் விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும், நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள்.
பெண்களுக்கு இது வேலைச் சுமையைத் தரும் காலமாகும். அலுவலகத்தில் ஒரு முட்டாள்தனமான மேலதிகாரியோடு நீங்கள் போராட வேண்டியிருக்கலாம். அங்கே அப்படி தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால் வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது இருக்கும்.
எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற மகர ராசிக்காரர்களுக்கு வளமான எதிர்காலத்திற்கான மாற்றங்கள் இப்போது நடைபெறும்.
பரிகாரங்கள்:
ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.
No comments :
Post a Comment