Friday, September 21, 2018

கும்பம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் - KUMBAM:2018 GURUPEYARCHI PALANGAL.

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி

கைப்பேசி: 8870 99 8888

கும்பம்:

கும்ப ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குருபகவான் பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. 

இந்தக் குருப் பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் தேக்கம், மந்தநிலை, தடைகள் போன்றவற்றை ஏற்படுத்தும் என்பதோடு அலைச்சல்களையும், தூரப் பயணங்களையும் உண்டாக்கும். அதேநேரத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு யோகாதிபதி இல்லை என்பதால் நிச்சயமாக உங்களுக்கு கெடுபலன்கள் இருக்காது. 

கும்ப ராசியினர் உழைப்பை மட்டுமே நம்ப வேண்டிய காலம் இது. உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம். 

செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளிப் போகலாம். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும்.

எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும். அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும்.

அரசு, தனியார் துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். 

கூடுமானவரை நேர்வழியிலேயே செல்ல முயற்சி செய்யுங்கள். குறுக்கு வழி வேண்டாம். அரசுத்துறை, தனியார்துறை ஊழியர்கள் வருமானத்திற்கு ஆசைப்பட்டு விதிகளை மீறி யாருக்கும் சலுகை காட்ட வேண்டாம். மேலதிகாரிகளுக்கு தெரியாமல், அவர்களின் எழுத்துப் பூர்வமான அனுமதி இல்லாமல் எதுவும் செய்யாதீர்கள். பின்னால் தொந்தரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக கும்ப ராசிக்காரர்கள் எதிலும் கணக்குப் போட்டு வாழ்வீர்கள். கொஞ்சம் சுயநலமும், பிடிவாதமுமாக இருப்பீர்கள். ஒரு முடிவு எடுத்து விட்டால் அது தவறானது என்று தெரிந்தாலும் பின் வாங்க மாட்டீர்கள். மகா பிடிவாதக்காரர்கள் நீங்கள். ஊரோடு ஒத்துப் போக மாட்டீர்கள். ஏமாறுவதைப் போல நடிப்பீர்களே தவிர ஏமாறக் கூடியவர்கள் அல்ல. உங்களை இளித்தவாயர்களாக நினைப்பவர்கள் அவர்களே அப்படியாகிப் போவது நிஜம்.

வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

குருபகவான் இருக்கும் வீட்டை விட, பார்க்கும் வீட்டையே பலப்படுத்தி நன்மைகளைத் தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பத்தில் அமரும் குரு தனது புனிதப் பார்வையால் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் வலுப் பெறும். 

குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. 

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. 

குருபகவான் நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். 

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். 

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

சனி நல்ல அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலருக்கு அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம். 

ராசிநாதனின் வலுவால் சிலர் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

குரு பத்தில் அமர்வதால் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மொத்தத்தில் நல்லபலன்கள் அதிகம் உள்ள பெயர்ச்சியாக இது இருக்கும்.

பரிகாரங்கள்: 

குருபகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை குரு ஹோரையில் குருவை நிகர்த்த பெரியோர்களை சாஷ்டாங்கமாக வணங்கி ஆசி பெறுங்கள். 

No comments :

Post a Comment