Friday, September 21, 2018

மீனம்:2018 குருபெயர்ச்சி பலன்கள் - MEENAM :2018 GURUPEYARCHI PALANGAL.

ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி

கைப்பேசி:8870998888

மீனம்:

மீன ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குருபகவான் தற்போது ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால் மீனத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும். 
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

முக்கியமான ஒரு பலனாக இதுவரை இருந்த மந்த நிலைமைகள் மாறி சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வாழ்க்கை இனி அதிர்ஷ்டகரமாக அமையும். பெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

இந்தக் குருப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள் என்பது உறுதி.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது. 

பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப் போகும் காலம் இது. உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். 

நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்ல நேரம். 

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்லவிதமாக அமையும். வேலையில் இருந்து விலகியவர்களுக்கு அதைவிட நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

இளைய பருவத்தினருக்கு ஏமாற்றமும், மன அழுத்தமும் இருக்காது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த குழப்பங்களையும், காரியத் தடைகளையும், துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

அரசாங்க முதன்மைத் தேர்வுகளான ஐ. ஏ. எஸ், மற்றும் குரூப் ஒன் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட போன்ற தேர்வுகளில் வெற்றி உண்டு. ஏற்கனவே தேர்வுகள் எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு இம்முறை அதிகாரப் பதவி தேடி வரும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.

முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். திருமணம் தள்ளிப் போய் இருந்தவர்களுக்கு உடனடியாக வரன்கள் நிச்சயிக்கப் பட்டு சுபகாரியங்கள் குடும்பத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று நடக்கும்.

குழந்தை பாக்கியம் தாமதமானவர்களின் வீட்டில் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலும், மழலைச் சத்தமும் கேட்டு தாத்தா, பாட்டிகளின் மனம் குளிரப் போகிறது. கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் குருபகவான் தன் வலுவான பார்வையால் உங்களின் ராசி மற்றும் மூன்று, ஐந்தாமிடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவதால் அந்த பாவங்களின் தன்மைகள் வலுப் பெறுகின்றன. 

குருபகவானின் மூன்றாமிடத்துப் பார்வையால் உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்துப் பிரச்னைகளையும் நீங்கள் தனி ஒருவராகவே சமாளித்து தீர்க்கும் அளவிற்கு ஆற்றல் பெறுவீர்கள். மூன்றாமிடம் சகாயஸ்தானம் என்பதால் எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும்.

குருபகவானின் ஐந்தாமிடப் பார்வையால் உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். 

பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள் புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும். ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். 

இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். 

கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். வெளிநாட்டுப் பயணத்திற்கு தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

மீனராசிப் பெண்களுக்கு என்று தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. கணவர் மற்றும் பிள்ளைகளின் நலன் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கும் ஆளாக இருப்பீர்கள் நீங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சுயநலம் போலத் தெரியும். பொறுப்புள்ள குடும்பத்தலைவி இருக்கும் குடும்பத்தில் சிக்கல்களுக்கு இடமில்லை.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடி கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக் குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். மீன ராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி விடியலைத் தந்து வழியையும் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பரிகாரங்கள்: 

குருபகவானால் கிடைக்க இருக்கும் நன்மைகளை அதிகப் படுத்திக் கொள்ளவும், அவரது திருவருளை முழுமையாகப் பெறவும் உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமையன்று குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் முன் கூட்டியே கேட்டு அதன்படி உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள். 

No comments :

Post a Comment