ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குருபகவான் தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
இதுவரை ஜென்ம ராசியில் இருந்து அனைத்திலும் தடைகளை ஏற்படுத்திக் கொண்டு இருந்த குரு, தன ஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு மாறி உங்களுக்கு சிறப்பான பலன்களையும், நல்ல பணவரவையும் தரப் போகிறார்.
இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
இரண்டாமிடத்திற்கு வரும் குருவால் அளவற்ற தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் அனைத்தும் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். குரு இருக்கப் போகும் இடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் என்பதால் உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.
வருடக் கிரகங்களான சனியும், குருவும் தற்போது துலாம் ராசிக்கு மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால் துலாத்தினர் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல புத்திசாலிகள் என்பதாலும், உருவாக்கும் வேலை எனப்படும் கிரியேட்டிவ் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும் இந்த மாற்றத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள்.
வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.
பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருபகவானின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.
சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.
தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.
விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.
தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.
தனம், வாக்கு குடும்பஸ்தானம் எனப்படும் இரண்டாமிடத்தில் குருபகவான் இருக்கப் போவதால் துலாம் ராசிப் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.
துலாம் ராசிப் பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.
வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.
குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.
மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.
இரண்டில் அமரும் குருபகவான் தனது சுபப் பார்வையால் உங்கள் ராசிக்கு ஆறு எட்டு பத்து ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஒரு சுபகிரகம் வலுவடைந்து பார்க்கும் பாவங்கள் வலுப்பெறும் என்ற ஜோதிட விதிப்படி குருவின் பார்வையால் உங்கள் ராசியின் ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுவடையும். இது நல்ல நிலை அல்ல.
ஆறாமிடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய விஷயங்களை சுட்டிக் காட்டும் பாவமாகும். குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் நீங்கள் தொழில் ரீதியாகவோ, அல்லது வீடு கட்டுவது மற்றும் குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்காகவோ கடன் வாங்க வேண்டியது இருக்கலாம். கடன் வாங்கித்தான் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கூட கடன் வாங்கும்படி குருபகவான் செய்வார் என்பதால் அவசியமற்ற ஆடம்பரங்களுக்காக கடன் வாங்காதீர்கள்.
உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
துலாம் ராசிக்கு அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொட்டது துலங்கும். மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்கால முன்னேற்றத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும். பரம்பொருளின் அருளினால் இதைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.
பரிகாரங்கள்:
குரு தரும் நன்மைகளை முழுமையாகப் பெற புகழ்பெற்ற குருபகவானின் திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.
No comments :
Post a Comment