Friday, September 21, 2018

கன்னி:2018 குருபெயர்ச்சி பலன்கள் - KANNI :2018 GURUPEYARCHI PALANGAL.


ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி

கைப்பேசி: 8681 99 8888

கன்னி:

கன்னி ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குருபகவான் தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும்.
பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குருபகவான் தனது சுபப் பார்வைகளால் கணவன் அல்லது மனைவி ஸ்தானமான ஏழாமிடத்தையும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாபங்கள் தரும் இடமான பதினொன்றாமிடத்தையும் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இனங்கள் மூலமாக இப்போது நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.

மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசா, புக்திகள் நடக்கும் கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த கோட்சாரக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நல்ல பணவரவும், வருமானங்களும் இருக்கும், பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இனி இருக்கப் போவது இல்லை. 

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும். 

அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் காலம் வந்து விட்டதால் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளைய பருவத்தினர் ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவார்கள். இளைய தலைமுறைக்கு இந்த குருப் பெயர்ச்சி யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதாலும், அவரே உங்கள் ராசிக்கு ஐந்துக்குடையவனாகி பார்ப்பதாலும் வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. செய்யும் தொழில் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் செல்ல முடியும். 

குருவின் ஏழாமிடப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.

திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு திருமணம் நடக்கும். கன்னி ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப் பெயர்ச்சியால் ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு. குருபகவான் புத்திர காரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும். 

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து, வாழ்க்கை கோணலாகி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு குரு இரண்டாவது வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும். சில கன்னி ராசிக்காரர்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். 

குருபகவானின் ஒன்பதாமிடப் பார்வையால் தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வட மாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக் கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார்.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுப காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். 

கன்னி ராசிப் பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும். 

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். 

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் கன்னி ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும் போதே கர்ணனின் கவச குண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன், அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

பொதுவாக கன்னி ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரங்கள்:

வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருப் பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். சென்னையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் சேக்கிழார் பெருமான் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குரு ஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவில் ஸ்ரீதட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

No comments :

Post a Comment