ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குருபகவான் நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார். நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் உங்கள் ராசிக்கு யோகாதிபதியான குருபகவான் நான்கில் அமர்ந்து தனது புனிதப் பார்வையால் பத்தாம் இடத்தைப் பார்க்கப் போகிறார். இதன் மூலம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று உங்களின் பொருளாதார நிலை மேம்படும். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியினால் சிம்ம ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அனைத்தும் மேன்மை அடைந்து நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
குருபகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தைப் வலுப்படுத்துவார் எனும் விதிப்படி உங்கள் ராசிக்கு 8, 10, 12ஆம் பாவங்களை குரு பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட ராசிகள் முழுவலிமை பெறும்.
எட்டாம் பாவமும், பனிரெண்டாம் பாவமும் வெளி மாநிலம், வெளிநாடு இவைகளை குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநில வேலை வாய்ப்புகளையும், அது சம்பந்தமான தொழில்களில் இருப்போருக்கு நல்ல லாபங்களையும் தரும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.
இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குருபகவான் ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.
நான்காமிட குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் சிம்ம ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.
அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.
வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.
பத்தாமிடத்தைக் குரு பார்க்கப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.
கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.
கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட சிம்ம ராசியினர் அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.
சுபக்கிரகமான குருபகவான் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பலநாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.
சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்லபடியாக நடைபெறும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.
இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.
ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் இப்போது ஓரளவு கை கொடுக்கும். எட்டாமிடம் என்பது புதையல், லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் கிடைக்கும்.
கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச் செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும்.
குருபகவான் நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.
குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ, நிலமோ விற்ற பணம், விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு இப்போது சாதகமான தீர்ப்பு வரும்.
குருபகவானின் பார்வையால் எட்டாமிடம் வலுப் பெறுகிறது. ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவத்தின் கெட்ட பலன்கள் அதிகமாக நடக்கும் என்பதால் உங்களுக்கு எதிர்மறையான செயல்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் நடக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது.
பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.
கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.
பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.
பரிகாரம் :
ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து பின் அதை புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன்தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத்தரும்.
No comments :
Post a Comment