சிம்மம்:
நவம்பர் மாத முற்பகுதியில் ராசிநாதன் சூரியன் இரு பெரும் சுபர்களான குரு,
சுக்கிரனுடன் இணைந்து மூன்றாம் இடத்தில் நீசமாக இருக்கிறார். அவர் நீச
நிலையில் இருந்தாலும் சுக்கிரனால் நீச பங்கமும், குருவினால் சுபத்துவமும்
பெறுவதால் சிம்மத்திற்கு கெடுபலன்கள் எதுவும் நடக்காமல் நன்மைகள் மட்டுமே
நடக்கின்ற மாதம் இது. அதே நேரத்தில் எந்த ஒரு காரியமும், ஆரம்பத்தில்
தடைகளுடன் துவங்கி உங்களின் கடும் முயற்சிக்கு பிறகுதான் நிறைவேறும்.
மாத பிற்பகுதியில் ராசிநாதன் சூரியன் நீச நிலை விலகி நட்பு பலம் பெறுவதும்
புதனுடன் இணைவதும் நல்ல அமைப்புகள் என்பதால் சிம்மத்திற்கு சந்தோஷங்களும்,
குடும்பத்தில் நன்மைகளும், தொழிலில் மேன்மைகளும் உள்ள மாதமாக இது இருக்கும்.
சமீபகாலமாக வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலை மாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு
பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள்
இருக்கும். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த
முன்னேற்பாடுகள் உண்டு.
சொத்துப் பிரச்சனைகள் உள்ளவருக்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு தீர்த்த
யாத்திரை, குலதெய்வ வழிபாடு, காசி, கயா போன்ற புனித ஸ்தலங்களை பார்த்தல் போன்ற
ஆன்மீக நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதமாக இருக்கும்.
குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். இளைய பருவத்தினரை
பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். அவர்கள் ஏதாவது
வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நல்ல பணவரவு இருக்கும்
என்பதால் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து விடுவீர்கள். அதிலும் தொழில்
ஸ்தானாதிபதி சுக்கிரன் ஆட்சி பெறுவது நல்ல அமைப்பு. வீண்செலவு செய்யாதீர்கள்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.
1,2,5,6,11,12,19,20 ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ம் தேதி காலை 11.15 முதல்
30-ம் தேதி மாலை 4.12 வரை சந்திராஷ்டமம் என்பதால் இந்த நாட்களில் புதிய
முயற்சிகள் எதையும் துவங்க வேண்டாம். மேற்கண்ட தினங்களில் அறிமுகமாகும்
நபர்கள் பின் நாட்களில் தொந்தரவுகளை கொடுப்பவர்களாக மாறுவார்கள் என்பதால்
எதிலும் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம்.

No comments :
Post a Comment