Thursday, November 2, 2017

Danusu : 2017 November Month RasiPalangal – தனுசு : 2017 நவம்பர் மாத பலன்கள்

தனுசு:

அதிர்ஷ்டத்தை சுட்டிக் காட்டும் ஐந்துக்கதிபதி செவ்வாய் ஐந்தாமிடத்தையும் ராசியையும் பார்ப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல மாதம் இது. குறிப்பிட்ட சிலருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வருவதும், வெளிநாடு சம்பந்தப்பட்ட தொழில்கள் லாபம் தருவதும் இப்போது உண்டு. பிறந்த இடத்தை விட்டு வெளியிடங்களில் இருப்பவர்கள் நல்லபலன்களை அனுபவிப்பீர்கள். அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்கவேண்டும். ஜென்மச் சனி நடப்பதால் பதவியில் சிக்கல்கள் வரலாம்.

ராசியை செவ்வாய் பார்ப்பதால் கடுகடுப்பாக இருப்பீர்கள். தேவையின்றி எரிந்து விழுவீர்கள். மற்றவர்கள் உங்களைக் கண்டு பயந்து விலகுவதற்கு சந்தர்ப்பம் இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். பாக்கியஸ்தானம் நீசபங்க வலுப்பெறுவதால் பூர்வீக சொத்து விஷயங்களில் நன்மைகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். அப்பாவின் அன்பு கிடைக்கும். எதிலும் பற்றாக்குறை இருக்காது. சிலருக்கு இளைய சகோதர்களால் வீண்விரயங்களும் செலவுகளும் இருக்கும். வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள். வனத்துறையில் வேலை செய்பவர்கள், காடுகளில் பயணம் செய்பவர்கள் மிகுந்த கவனமுடன் இருங்கள். மாணவர்கள் மற்ற விஷயங்களை தள்ளி வைத்து விட்டு படிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

எட்டில் இருக்கும் ராகு ஸ்பெகுலேஷன் துறைகளில் ஆசையைத் தூண்டி விட்டு சிக்கலில் மாட்டி விடக் கூடும். கண்களையும், காதுகளையும் கூர் தீட்டி வைத்துக் கொண்டு கவனமாக இருங்கள். சூதாட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் இடையே கருத்துவேற்றுமைகள் வரவிருப்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல்நலத்தில் அக்கறை காட்டவேண்டி இருக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

4,5,6,13,14,15,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 9-ம் தேதி காலை 8.02 முதல் 11-ம் தேதி காலை 11.43 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment