Tuesday, March 1, 2016

கும்பம்: 2016 மார்ச் மாத பலன்கள்

கும்பம்:

தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய்பகவான் இன்னும் சில மாதங்களுக்கு பத்தாமிடத்தில் நிலை கொள்ள இருப்பதால் மார்ச்மாதம் முதல் இந்த வருடம் முழுவதும் கும்பராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப்பெற்று அனைத்திலும் வருமானம் கிடைக்கும் மாதமாக இது இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எடுக்கும் முயற்சிகள் யாவும் பரம்பொருளின் அருளினால் சுலபமாக முடிந்து நன்மைகளும், லாபங்களும் கிடைக்கும்.

உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். ராசியை செவ்வாய் வலுவுடன் பார்ப்பதால் கோபத்தைக் குறைத்து கொள்வது நல்லது. எந்த ஒரு வார்த்தையையும் பேசும் முன் யோசித்து பேசுவது நன்மை தரும். குறிப்பாக, வேலை செய்யும் இடங்களில் நிதானமும் எச்சரிக்கையும் தேவை.

இந்த மாதம் தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கும்பராசிக்காரர்களுக்கு இப்பொழுது வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு இருக்கும் ஊரை விட்டு டிரான்ஸ்பர் ஆகுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல், வீடு மாற்றுதல் போன்ற பலன்கள் இப்போது நடக்கும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். இளையபருவத்தினருக்கு முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள்.

1,2,4,8,10,13,15,17,18,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம்தேதி இரவு 11 மணி முதல் 25-ம்தேதி பகல் 11.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப்பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

No comments :

Post a Comment