Tuesday, March 1, 2016

மகரம்: 2016 மார்ச் மாத பலன்கள்

மகரம்:

எட்டுக்குடைய சூரியன் இரண்டாம் வீட்டில் அமர்ந்து குருபகவான் எட்டில் அமர்ந்திருப்பது மகரராசிக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் மாதம் முழுவதும் ராசியின் யோகக்கிரகங்களான சுக்கிரனும் புதனும் ராசியிலும் நல்ல இடங்களிலும் அமர்ந்து ராசிநாதன் சனியும் ராசியைப் பார்ப்பதால் மார்ச்மாதம் மகரத்திற்கு மனச்சுமைகள் எதையும் கொடுக்காத நல்லமாதமாகவே இருக்கும். எட்டாமிடம் வலுப்பெறுவதால் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகளில் ஓரளவு வருமானம் உள்ள மாதமாகவும் இருக்கும்.

அலுவலகத்தில் வீண்பேச்சுகளைத் தவிருங்கள். அவற்றால் தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி மனதில் உள்ளதை வெளிப்படையாக பேச வேண்டாம். அரசுத்துறையினருக்கு வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது உங்களுக்கு கிடைக்கும்..

வியாபாரிகளுக்கு இது அருமையான மாதம். குறிப்பாக, ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கும், அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினருக்கும் இந்த மாதம் முன்னேற்றமான மாதமாக இருக்கும். வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இந்த மாதம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

3,5,8,9,10,12,13,14,15,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20-ம்தேதி பகல் 11.30 மணி முதல் 22-ந்தேதி இரவு 11 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவுடன் இணைவதால் கெடுதல்கள் எதுவும் நடக்காது. ஆயினும் இந்த தினங்களில் புதிய முயற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம்.

No comments :

Post a Comment