Tuesday, March 1, 2016

கடகம்: 2016 மார்ச் மாத பலன்கள்

கடகம்:

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து சனியுடன் இணைந்து நீசநிலையை அடைந்தாலும் அவயோகக் கிரகங்கள் எட்டில் மறைவதாலும் தனாதிபதி தன் வீட்டையே பார்ப்பதாலும் மார்ச்மாதம் கடக ராசிக்கு தனலாபங்களும், மரியாதை, அந்தஸ்து கூடும் சம்பவங்கள் நடக்கும் மாதமாகவும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் அந்நிய இன, மத, மொழிக்காரர்களால் லாபங்களும், உதவிகளும் கிடைக்கும் மாதமாகவும் இருக்கும்.

மனம் உற்சாகமாக இருக்கும். முகத்தில் எந்த நேரமும் புன்னகை தவழ காட்சி தருவீர்கள். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார்.

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இந்த மாதம் ஏற்படலாம். குறிப்பிட்ட சிலருக்கு சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.குழந்தைகள் விஷயத்தில் செலவுகளோ, விரயங்களோ வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, பெண் குழந்தைகளை சற்று அக்கறையுடன் பார்த்து கொள்வது நல்லது.

1,4,5,11,12,13,19,20,21,24 ஆகிய தினங்களில் பணம் வரும். 7-ம்தேதி மதியம் 3 மணி முதல் 9-ம்தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இந்த நாட்களில் அலைச்சல் தரும் வேலைகளைச் செய்ய வேண்டாம். வெகுதூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

No comments :

Post a Comment