Tuesday, March 1, 2016

ரிஷபம்: 2016 மார்ச் மாத பலன்கள்

ரிஷபம்:

மாதம் முழுவதும் இருபெரும் பாபக்கிரகங்களான செவ்வாயும், சனியும் ராசியைப் பார்ப்பதால் இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களின் சீக்கிரமாக முடியவேண்டிய வேலைகள் கூட இழுத்துக் கொண்டே போய் எரிச்சலை ஏற்படுத்துகிற மாதமாக இருக்கும். அதேநேரம் நான்காமிடத்தில் இருந்து இதுவரை வீடு, வாகனம், கல்வி, ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் உங்களை நிம்மதி இழக்கச் செய்து கொண்டிருந்த குருபகவான் தற்போது ராகுவுடன் இணைந்து பலவீனமாவது ரிஷப ராசிக்கு நன்மைகளைத் தரும் என்பதால் எட்டுக்குடைய குருவால் நடந்து கொண்டிருந்த கெடுதலான விஷயங்கள் இனிமேல் ரிஷபராசிக்கு இருக்காது.

சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு கெடுதல்கள் நடக்காது. ராசிநாதனை சனி பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல்போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம்.

1,2,7,8,9,14,15,16,21,22 ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம்தேதி அதிகாலை 4.30 மணி முதல் 5-ம்தேதி பகல் 11.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் பெரிய தொல்லைகள் எதுவும் இருக்காது. ஆயினும் மனம் ஒருநிலையில் இருக்காது என்பதால் புது முயற்சிகளைத் தவிர்க்கவும்.

No comments :

Post a Comment