Tuesday, February 2, 2016

கும்பம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

கும்பம்:

மாதம் முழுவதும் ராசியை பார்க்கும் குருவின் பார்வையும், மாதத்தின் பிற்பகுதியில் ராசியில் அமர போகும் புதனின் வலுவும் இந்த மாதம் கும்ப ராசிக்காரர்களை மன உறுதியுடன் தெளிவான சில முடிவுகளை எடுக்க வைக்கும் என்பதால் பிப்ரவரி மாதம் நல்ல மாற்றங்களை உங்களுக்கு தரும் மாதமாக இருக்கும்.


மாத ஆரம்பத்தை விட மாதத்தின் பிற்பகுதி இந்த மாதம் நன்மைகளைத் தரும் மாதமாக அமையும். ராசிநாதன் சனிபகவானுடன் மூன்றாம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் இணைவது எதையும் சமாளிக்கும் ஆற்றலையும், திறமையையும் உங்களுக்கு தரும் என்பதால் இந்த மாதம் சங்கடங்கள் இல்லாத சாதனை மாதமாக இருக்கும்.

புதனும் சுக்கிரனும் இணைந்துள்ளது யோகம் என்பதால் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். ராஜகிரகங்கள் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்ட நாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு உடனடியாக திருமணம் உறுதியாகும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இந்த மாதம் நல்ல செய்தி உண்டு. கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள்.

1,2,3,4,5,11,12,17,18,20 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 24-ந்தேதி மாலை 4.30 மணி முதல் 27-ந்தேதி அதிகாலை 5 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூரப் பிரயாணங்களையும் புதிய முயற்சிகளையும் தள்ளி வைப்பது நல்லது.

2 comments :