Tuesday, February 2, 2016

மிதுனம்: 2016 பிப்ரவரி மாத பலன்கள்

மிதுனம்:

மாதம் முழுவதும் எட்டு, ஒன்பதாம் இடங்களில் ராசிநாதன் புதன் இருக்கும் நிலை ஏற்பட்டாலும் மேற்கண்ட பாவங்கள் புதனுக்கு நட்பு ஸ்தானங்கள் என்பதாலும் மறைந்த புதன் நிறைந்த பலன் தருவார் எனும் பழமொழிபடியும் பிப்ரவரி மாதம் மிதுன ராசிக்கு மனத்திற்கு நிறைவான பலன்கள் நடக்கும் மாதமாக இருக்கும்.

பிற்பகுதி மாதத்தில் உங்கள் யோகாதிபதி சுக்கிரன் நட்புநிலை பெற்று உங்கள் ராசிநாதனுடன் இணைவது இந்த மாதம் உங்களின் அந்தஸ்து, கவுரவம் உயர்வது போன்ற நிகழ்ச்சிகளும், பெண்களால் லாபங்களும் இனிமையான சம்பவங்களும் இருக்கும் என்பது காட்டுகிறது. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும்.

கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

ஆறாமிடம் வலுப்பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல் படுவது நல்லது. அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

3,4,5,11,12,13,19,20,21,25 ஆகிய நாட்கள் பணம் வரும் நாட்கள். 7-ம்தேதி அதிகாலை 1 மணி முதல் 9-ந்தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்டம தினங்கள் என்பதால் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

No comments :

Post a Comment