Thursday, January 28, 2016

வலுப்பெற்ற சனி என்ன செய்வார்? - C - 037 - Valupettra Sani Yenna Seivar ?



ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

சிலர் சனி உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், சனி உச்சத்தில் இருக்கும் போது பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் கணிக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.லக்னாதிபதியாகவே சனி வரும் நிலையில் கூட அவர் தனித்து லக்னத்தில் ஆட்சி பெறுவதோ அல்லது உச்சம் பெறுவதோ நல்ல நிலை அல்ல. மிக நுண்ணிய சூட்சுமமாக, நமது ஞானிகள் ஒரு ஜாதகத்தில் இயற்கைச் சுப கிரகங்கள் வலுப் பெற வேண்டும், இயற்கைப் பாபர்கள் வலுவாக இருக்கக் கூடாது என்று சொன்னது சனிக்கு மிகவும் பொருந்தும்.

தனித்து எவ்வித சுபத் தன்மையும் பெறாமல் ஆட்சி, உச்சம் பெறும் நிலையில் சனி தன் தசையில் தாங்க முடியாத கொடிய பலன்களைச் செய்வார். சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் குருவின் பார்வையையோ தொடர்பையோ அல்லது மற்ற சுபக் கிரகங்கள் அல்லது லக்ன சுபர்களின் சம்பந்தத்தையோ பெற்றிருக்க வேண்டும்.

உச்சத்தில் வக்ரம் போன்ற உச்ச பங்கம் பெற்று முற்றிலும் நீச நிலையாக வலிமை இழந்து, சுபர் பார்வை பெற்ற சனி மிகப் பெரிய சொகுசு வாழ்க்கையைத் தருவார்.

சனி நேர்வலுப் பெற்றால் அவரது காரகத்துவப்படி உடலால் உழைத்துப் பிழைக்க வேண்டியிருக்கும். அவர் வலிமையிழந்தால் உடலால் உழைக்கத் தேவையில்லாத பணக்கார வாழ்க்கை கிடைக்கும் அவ்வளவே...!

ஒரு ஜாதகத்தில் தனித்து வலுப் பெறும் நிலையில் சனி அவரது தீய வழிச் செயல்களை தனது தசையில் வலுவாகச் செய்வார். மனிதனுக்கு வேண்டாத தீய காரகத்துவங்களின் மூலம் மட்டுமே அந்த மனிதனுக்கு நன்மைகளைச் செய்வார்.

அதேநேரத்தில் சனி லக்னாதிபதியாகி நேர்வலு எனப்படும் ஆட்சி, உச்சத்தை அடைகையில் லக்னம் வலுப் பெறத்தான் செய்யும். ஆனால் சனியின் குணங்கள் ஜாதகருக்கு இருக்கும். சனியின் வேண்டாத செயல்பாடுகளை ஜாதகரிடம் கண்கூடாகக் காணலாம்.

ஒரு மனிதனுக்கு தேவையில்லாத அனைத்தையும், குறிப்பாக துர்க் குணங்கள் அனைத்தையும் தருபவர் சனி என்பதால் அவர் லக்னாதிபதியாக அமைந்தாலும் லக்னத்தோடு சம்பந்தப்படாமல் இருப்பதே யோகம். அப்படி அவர் லக்னத்தோடு சம்பந்தப்பட்டிருந்தாலோ, லக்னாதிபதியாகி உச்சம் பெற்றிருந்தாலோ சுபத்துவமாகியோ அல்லது சூட்சும வலுப் பெற்றோ இருந்தால் மட்டுமே நல்ல பலன்கள் இருக்கும்.

(சனி சூட்சும வலுப் பெற்று லக்னம் அல்லது ராசியோடு தொடர்பு கொள்கையில் ஜாதகரை மிகச் சிறந்த ஆன்மிக வாதியாக்குவார். அதற்கு அந்த ஜாதகத்தில் குருவும், கேதுவும் நல்ல நிலையில் இருந்து ஒத்துழைக்க வேண்டும். சனி தரும் இந்த உன்னத ஆன்மிக நிலையினை வரும் அத்தியாயங்களில் விளக்குகிறேன்.)

சுபர் பார்வையின்றி அல்லது வேறு எந்த வகையிலும் சுபத்துவமோ, சூட்சும வலுவோ பெறாத சனி, லக்னத்தோடு சம்பந்தப்பட்டால் ஜாதகரை வறட்டுப் பிடிவாதக்காரராக ஆக்குவார். உயரம் குறைந்தவராகவும், அதிர்ஷ்டம் இல்லாதவராகவும், யாருடனும் ஒத்துப் போகாதவராகவும் இருக்க வைப்பார். சுயநலம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களும் ஜாதகரிடம் இருக்கும்.

ஒன்றும் தெரியாதவராக இருந்தும் தன்னை மிகப் பெரிய மேதாவியாக நினைக்க வைப்பவரும் சனிதான். சிலர் எதிலுமே குதர்க்க வாதம் பேசுபவர்களாகவும், எதற்கும் நேரிடையாக பதில் சொல்லாமல் எதிர்க் கேள்வி கேட்பவராகவும், எப்போதும் “நெகடிவ் தாட்ஸ்” எனப்படும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராகவும் இருப்பார்கள். இதுவும் சனியின் வேலைதான்.

விஷயமே இல்லாமல் ஒருவர் “வளவள” வென்று பேசிக் கொண்டிருக்கிறாரா? அவர் முழுக்க முழுக்க சனியின் நேர்வலுவில் உள்ளவராக இருப்பார். அதேபோல ஒருவர் குள்ளமாக இருக்கிறார் என்று “பளிச்” சென்று தெரிந்தாலே சனியின் தீவிர ஆதிக்கத்தில் இருக்கிறார் என்றும் கண்டு பிடித்து விடலாம்.

அதேநேரத்தில் இது போன்று சனி சுபத்துவம் அடையாமல் நேர்வலு மட்டும் பெற்றவர்கள் ஏதேனும் ஒரு மெக்கானிச வேலையில் மிகவும் கெட்டிக்காரராகவும் இருப்பார்கள். மிகச் சிறந்த வாகன மெக்கானிக்குகளையும், ஆலையில் ஸ்பானரை கையில் பிடித்து நுணுக்கமான வேலைகளைச் செய்பவர்களையும் சனிதான் உருவாக்குகிறார்.
சுபத்துவம் பெறாமல் நேர்வலு மட்டும் அடைந்த சனி, ஒருவரை ஒரு வாகனத்தை அல்லது இயந்திரத்தை அக்கு, அக்காகப் பிரித்து மீண்டும் பொருத்தும் வேலைகளில் நிபுணர் ஆக்குவார். அதாவது அழுக்கு ஆடைகளை உடுத்திக் கொண்டு, துணிகளை கறைப் படுத்திக் கொண்டு, ஆயில், கிரீஸ் போன்றவைகளுக்கு மத்தியில் இரும்புக் குப்பைகளுக்குள் தன்னை மறந்து முழுமையான ஈடுபாட்டுடன் உடலால் உழைக்க வைப்பார்.

கிரகங்களின் உச்ச நிலையைப் பற்றி நுணுக்கமாகச் சொல்லப் போனால், உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நமக்கு நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுப கிரகங்கள், பாபக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கிரகங்களின் காரகத்துவங்களை சுபம், அசுபம் எனவும் நமக்கு வகைப்படுத்திக் காட்டியிருக்க வேண்டியதும் இல்லை. கிரகங்கள் வலிமை பெற்றால் நல்லது செய்யும் என்று பொதுவாக சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

நமது மூலநூல்களில் ஞானிகள், வலுப்பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு நன்மையைக் செய்யும் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்லை. வலிமை பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்கள் எனும் செயல்பாடுகளை ஜாதகருக்கு வலுவுடன் தரும் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியானால் ஆயுளைத் தவிர்த்து மனிதனுக்கு கெடுதல் செய்பவைகளான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமை வேலை, உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலை போன்றவற்றைத் தரும் சனி உச்ச வலிமை பெற்றால் என்ன பலன்களைத் தருவார்?

மற்ற சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சனி, செவ்வாய் உள்ளிட்ட பாபக் கிரகங்களுக்கு கிடையாது.

ரிஷப, துலாம் லக்னங்களுக்கு சனி, ராஜயோகாதிபதியாக அமைவார். அதிலும் துலாத்திற்கு பாதகாதிபத்தியம் பெறாமல் பூரண ராஜயோகாதிபதியாக வருவார். அந்த நிலையில் கூட லக்னத்தில் தனித்து உச்சம் பெற்று சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடையாத சனி தீய பலன்களையே தருவார்.
உச்ச சனி தசையில் இரும்பு சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் சாதாரண தொழிலாளியாகவோ அல்லது மெக்கானிக்காகவோ, மிகக் குறைந்த வருமானம் பெறுபவராக, சாதாரண வாழ்க்கைதான் ஜாதகருக்கு இருக்கும்.

பெரும்பாலான நிலைகளில் சனி சங்கடங்களை மட்டுமே தருபவர் என்பதால்தான் வேறு எந்த கிரகத்திற்கும் இல்லாமல், சனியை வழிபடுவதற்கு மட்டும் பிரசாதங்களை வீட்டுக்கு எடுத்து வராதே, திரும்பி பார்க்காமல் போ போன்ற கட்டுப்பாடுகள் நமது ஞானிகளால் விதிக்கப்பட்டன.

அனைத்து தெய்வ வழிபாடுகளின் போது பிரசாதங்களை வீட்டிற்கு எடுத்து வரும் நாம் சனியை வழிபட்டுத் திரும்பும் போது மட்டும் அவரின் பிரசாதத்தையோ அல்லது அவர் சம்பந்தப்பட்ட எதையுமோ வீட்டிற்கு எடுத்து வருவதில்லை. அதாவது சனி சம்பந்தப்பட்ட எதையும் நாம் வீட்டுக்குள் சேர்க்க கூடாது என்பதையே இது காட்டுகிறது.

இன்றும் தமிழகத்தின் ஏராளமான பழமையான கோவில்களில் சனியை நாம் நேருக்கு நேர் நின்று தரிசித்து, அவரின் பார்வை நம் மீது விழுந்து விடக் கூடாது என்பதனால் சனியின் சன்னதிக்கு முன் குறுக்காக ஒரு அமைப்பு போடப் பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இன்றும் நிறையக் கோவில்களில் சனியை ஓரமாக நின்றுதான் வணங்குகிறார்கள்.

அவ்வளவு ஏன்? ஒரு தாய் தன் குழந்தையை அளவு கடந்த வெறுப்பில் திட்டுவது கூட அவரின் பெயரைச் சொல்லித்தான்...!

உண்மையில் சனியை வழிபட்டு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கும்படி நமது எந்த புனித நூல்களும் சொல்லவில்லை. உதாரணமாக குருவை வழிபடும் போது என்ன கேட்பீர்கள்? “எனக்கு குழந்தை பாக்கியம் தா... நிறைய பணம் தா” என்று கேட்கலாம்... அவரிடம் இவைகள் இருக்கின்றன. அதனால் அவரால் கொடுக்க முடியும்.

சுக்கிரனிடம் “நல்ல மனைவியைத் தா... வீடு கொடு ... உல்லாச வாழ்க்கை தா...” என்று கேட்கலாம். அவர் தருவார். புதனிடம் “அறிவைத் தா” என்று கேட்கலாம். சந்திரனிடம் “திடமான மனம் கொடு.. ஆற்றல் தா” என்று கேட்கலாம்.

சனியிடம் என்ன கொடு என்று கேட்பீர்கள்..?

“எனக்கு தரித்திரத்தைக் கொடு.. கடனைக் கொடு.. நோயைக் கொடு.. உடல் ஊனத்தைக் கொடு” என்றா..?

ஆயுளைத் தவிர வேறு என்ன இருக்கிறது அவரிடம் தருவதற்கு..?

மீந்து போன வெறும் பழைய சாதம் மட்டுமே என்னிடம் இருக்கும் நிலையில், நீங்கள் எனக்கு தலைவாழை இலை போட்டு, அறுசுவை உணவு கொடு என்று கேட்டால் நான் எங்கே போவேன்?

சரி.. மேற்சொன்ன அசுபங்களை எல்லாம் எனக்குத் தராதே என்று சனியிடம் கேட்கத்தான் அவரை வழிபடுகிறேன் என்றால் அதற்கு நீங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மாவே இருந்து விடலாமே?

ஒருவர் உங்களைப் போட்டு அடித்து, மிதித்து, துவைத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவரை விட்டு விலகி ஓட முயற்சிப்பீர்களா ? அல்லது அவருடனே ஒட்டி உறவாடுவீர்களா?

சனி முற்றிலும் வலிமை இழந்திருக்கும் நிலையில், அதாவது எந்தக் கெடுதலும் செய்ய விடாமல் அவரின் கைகள் கட்டப்பட்டிருக்கும் நிலையில், குருவின் பார்வையைப் பெற்றும், இதர வழிகளில் சுபத்துவமும் அடைந்திருக்கும் நிலைகளில், சூட்சும வலு பெற்றிருக்கும் அமைப்பில் மட்டுமே, அவர் அவரின் காரகத்துவங்களின் வழிகளில் பெரும் பொருள் அளிப்பார்.

சுப கிரகங்கள் தரும் அதிர்ஷ்டத்தினால் வரும் பணத்தை தைரியமாக வெளியே சொல்ல முடியும். ஆனால் பாப கிரகங்கள் மூலம் கிடைக்கும் பணம் வந்த வழியைப் பற்றி வெளியே கௌரவமாக சொல்லிக் கொள்ள முடியாது.
துலாம் லக்னத்திற்கு மேஷத்தில் நீசம் பெற்று திக்பலம் பெறும் சனி, குரு பார்வை பெறும் நிலையில் நீச வழிகளில் பெரும் பொருள் வரவையும் சொகுசு வாழ்க்கையையும் தன் தசையில் தருவார்.

பிறந்த ஜாதகத்தில் சனி வலிமை பெற்றிருக்கும் நிலையில், கோட்சாரத்தில் ஏழரைச் சனி காலம் வரும் போது கொடிய பலன்கள் நடக்கும். பிறப்பில் சனி வலிமை இழந்திருந்தால் மட்டுமே ஏழரைச் சனி காலத்தில் அவரால் தீமைகளை செய்ய முடியாது.

ஜாதகத்தில் சனி வலிமை இழக்க, இழக்க ஜாதகரின் வாழ்க்கை மேம்பாடான நிலையில் இருக்கும். அவர் முற்றிலும் வலிமை இழந்து சூட்சும வலு பெறும் நிலையில் மிகச் சிறந்த சொகுசு வாழ்க்கை ஜாதகருக்கு கிடைக்கும்.

இதை நான் ஏற்கனவே எழுதிய “பாபக் கிரகங்கள் எப்போது பலன் செய்யும்?” என்ற கட்டுரையில் ஒரு பெரும் கோடீஸ்வரரின் உதாரண ஜாதகத்துடன் விளக்கியிருக்கிறேன்.

எந்த ஒரு ராஜயோக ஜாதகத்திலும் சனி தனித்து பலம் பெற்றிருக்கவே மாட்டார். அவர் உச்சம் அடைந்திருந்தால் வக்ரம் பெற்று உச்ச பங்கமாகி நீச நிலையை அடைந்திருப்பார். அல்லது வேறுவகையில் சுபத்துவமோ சூட்சும வலுவோ பெற்றிருப்பார். இது உறுதி.

( அக் 29 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

7 comments :

  1. Ayya vanakkam
    Thirukollikadu kuchchanur nachiyar kovil arugil kudumba saniswarar thala puranam avarai vanangum podu nanmai mattume tharuvar endru irukiradu. Angu valipadalama?

    ReplyDelete
  2. அய்யா
    வணக்கம் .
    வேறு வழியில் சுபத்துவமோ சூட்சும வலுவோ என்பதற்கு உதாரணம் தந்தீர்களானால் இன்னும் சற்று சுலபமாகப் புரியும்..

    ReplyDelete
  3. Your analysis is simple & superb. Obviously your experience in Astrology is awesome since it is backed by a very sharp analytical mind. There r many who write any Astrology but you stand out.
    Ramanathan

    ReplyDelete
  4. Iyya yenaku sani utcham nan yenna seivathu? My date of birth 1.8.1985.time:2am. Place:karur

    ReplyDelete
  5. ஐயா ராசியில் சனி மகரத்தில் ஆட்சி வக்ரம். ஆனால் அம்சத்தில் நீச்சம். இங்கு சனியின் பலம் என்ன?

    ReplyDelete
  6. Sir , my chart says " first house laminam simarasi sun aadchi. And third house Thulam satrun,moon,ragu. Six house guru, 11 house sukiran, 12 house puthan,sevvai. Please I am thula rasi, swatti nadchathira,4patha, please tell me something about my future life, please I am begging you plwase

    ReplyDelete