ஏற்கனவே செவ்வாயைப் பற்றிய பகுதியில் செவ்வாய் எவ்வாறு சுபத்துவம் அடைகிறார் என்று விளக்கும் போது சனியைப் பற்றியும் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.
இப்போது சனியின் சில நிலைகளை விரிவாகப் பார்க்கலாம்.முதலில் ஒரு கிரகத்தின் சுபத்துவம் என்பது அந்தக் கிரகம் மனிதனுக்கு நன்மை
    செய்யும் அமைப்பில் இருப்பது என்று பொருள்படும்.சுப ஒளி பொருந்திய கிரகங்களே
    மனிதனுக்கு தேவைப்படும் நன்மைகளைத் தரும் தகுதிகளை பெறுகின்றன.
சுபக் கதிர்கள் இல்லாத கிரகங்கள் பாபக் கிரகங்கள் எனவும், அவை மனிதனுக்கு
    நன்மை செய்ய இயலாத தீய செயல்பாடுகளை கொண்டவைகளாகவும் ஞானிகளால் நமக்கு
    பிரித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஒளியிழந்த நிலையில் இருக்கும் பாபக் கிரகங்கள் சுபக் கோள்களிடம் இருந்து
    ஒளியைப் பெறும் போது மட்டும் மனிதனுக்கு நன்மை தரக்கூடிய சுபத்துவம் எனும்
    நிலையை அடைகின்றன. அதாவது பாபக் கிரகங்கள் சுபரின் பார்வையைப் பெறும் போதும்,
    அவர்களுடன் சேரும் போதும் சுபத்துவமடைந்து தங்களின் இயல்பு நிலை மாறி
    மனிதனுக்கு நன்மைகளைச் செய்கின்றன.
இந்த சுபத்துவ நிலையிலும் ஒரு நுணுக்கமான சூட்சும நிலையாக,
பாபர்கள் தங்களின் அருகில் இருக்கும் சுபரிடம் இருந்து ஒளியைப் பெறும் போது
    மட்டுமே அதிக நன்மைகளைத் தரும்.
செவ்வாய் தனக்கு அருகில் இருக்கும் ஒளி பொருந்திய கிரகமான சந்திரனின் தொடர்பை
    பெறும்போது மட்டுமே அதிக நன்மைகளைச் செய்வார். தன்னிடமிருந்து அதிக தூரத்தில்
    இருக்கும் குருவின் பார்வையை விட அருகே இருக்கும் சந்திரனின் பார்வை மற்றும்
    இணைவு மட்டுமே செவ்வாயை அதிக சுபத்துவம் அடையச் செய்யும்.
அதேநேரத்தில் இந்த சுபத்துவம் என்பது சந்திரனின் வலுவைப் பொருத்தது. அதாவது
    சந்திரன், பவுர்ணமி தினத்தை நெருங்கி அதிக ஒளியுடன் வளர்பிறைச் சந்திரனாக,
    சூரியனுக்குக் கேந்திரங்களில் இருந்து செவ்வாயைப் பார்க்கும் போதோ, அல்லது
    இணையும் போதோ செவ்வாய் அதிக சுபத்துவம் அடைவார். பூரண பவுர்ணமிச் சந்திரனின்
    தொடர்பைப் பெறும் செவ்வாய் முழுச் சுபராகும் தகுதி படைத்தவர்.
செவ்வாய் சுபத்துவம் அடையும் நிலைகளில் தனது உண்மையான இயல்பான ரவுடித்தனம்,
    ஆயுதம் தூக்குதல், முரட்டு சுபாவம், முன்கோபம், முன்யோசனை இல்லாமல் எதையும்
    செய்தல் போன்ற குணங்களை மாற்றி ஜாதகரை காவல்துறை, ராணுவம், விளையாட்டு,
    மருத்துவம், கட்டுமானத் துறை, அதிகாரப் பணி போன்ற துறைகளில் ஈடுபடுத்துவார்.
    ரியல் எஸ்டேட் துறையில் பணம் தருவார்.
காவல் துறையில் பணி புரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் உள்ளிட்ட
    சீருடைத் துறையினர் அனைவரும் செவ்வாயின் சுப ஆதிக்கத்தில் உள்ளவர்களே.
    செவ்வாயின் சுபத்துவ நிலைகளைப் பொறுத்து அவர்களின் பணி நிலைகள் அமைகின்றன.
காவல் துறையில் கான்ஸ்டபிள் முதல் டி.ஜி.பி வரை அதிகார நிலை அடுக்கு உள்ளது.
    இதில் சிலர் காவலராக பணியில் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று
    ஓய்வு பெறுகிறார்கள். இன்னும் சிலர் சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்து
    மாவட்ட உயரதிகாரி வரை பதவி வகித்து ஓய்வு பெறுகிறார்கள்.
மிகச் சிலர் மட்டும் பணியில் சேரும் போதே மாவட்ட உயரதிகாரியாக அதாவது ஐ.பி.எஸ்
    அதிகாரியாக சேர்ந்து அதன் உச்ச நிலையான டி.ஜி.பி வரை சென்று ஓய்வு
    பெறுகிறார்கள்.
காவல் துறை என்றாலே செவ்வாய் சுபத்துவமாக இருக்க வேண்டும் எனும் நிலையில் இந்த
    பணி நிலை வேறுபாடுகள் செவ்வாயின் சுபத்துவத்தைப் பொருத்தே அமைகின்றன.
ஒருவர் கடைசி வரை காவலராகவே இருக்க, இன்னொருவர் மட்டும் அதே துறையில் காவலர்
    தலைவனாக, டி.ஜி.பியாக எப்படி இருக்கிறார் எனும் கேள்விக்கு செவ்வாயின் சுப
    வலுவும், அதனை சுபத்துவப்படுத்தும் சந்திரன் மற்றும் குருவின் ஒளியளவுகளின்
    ஏற்ற இறக்கங்களே இந்த வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நான் ஆதாரப்
    பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.
ஜோதிடப்படி விளக்கமாகவும், விஞ்ஞான ரீதியில் விரிவாகவும் இதை என்னால் சொல்ல
    முடியும்.
சந்திரன் மற்றும் குருவுடன் தொடர்பு கொள்ளும் செவ்வாய், சுபத்துவம் அடைந்து
    தனது சுப காரகத்துவங்களை, அதாவது மனிதனுக்குத் தேவையான நல்ல செயல்பாடுகளைச்
    செய்வார். இதில் பூரணச் சந்திரனாக பவுர்ணமிக்கு அருகில் அல்லது பவுர்ணமியாக
    இருந்து செவ்வாயை நிலவு பார்க்கும் நிலையில், இன்னொரு சுபரான குருவின்
    தொடர்பும் கிடைக்கப் பிறந்தவர் மிக உயர் நிலைக்குச் செல்வார்.
சந்திரன் வளர்பிறையின் ஆரம்ப நிலையிலோ, வேறு கிரகங்களால் பாதிக்கப்பட்டு
    குறைவான ஒளியோடு இருக்கும் அமைப்பிலோ, குருவும் அதுபோல ஒளிநிலை பாதிக்கப்பட்டு
    குறைவான ஒளியோடு, செவ்வாயோடு தொடர்பு கொள்ளும் நிலையில் பிறந்தவர் காவலர்
    பணியில் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டராக ஒய்வு பெறுவார்.
இதுவே சுபத்துவத்தின் சூட்சுமம்.
ஏராளமான காவல் துறை உயரதிகாரிகளின் ஜாதகங்களை தெளிவாக ஆராய்ந்துள்ள என்னால்
    இதனை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.
இந்த சுபத்துவ நிலைகளில் சனியைப் பற்றி பார்ப்போமேயானால், சனி, சந்திரன்
    மற்றும் தனது நண்பரான சுக்கிரனின் பார்வையைப் பெறுவதை விட தனக்கு அருகில்
    இருக்கும் குருவின் பார்வை எனும் ஒளி வீச்சினை பெறும் போது மட்டுமே அந்த
    மனிதனுக்கு நன்மைகளைத் தரும் தகுதியை பெறுவார்.
குருவுக்கு அடுத்து அவர் சுக்கிரனின் பார்வையாலும், சேர்க்கையாலும்,
    அதனையடுத்து தனித்த புதனின் பார்வையாலும், அதனையடுத்து வளர்பிறைச் சந்திரனின்
    பார்வையாலும் பாபத் தன்மை நீங்கி சுபத்துவம் எனப்படும் நன்மை தரும் அமைப்பைப்
    பெறுவார்.
இதில் ஒரு முக்கிய சூட்சுமமாக சனியை சுபத்துவப் படுத்தும் சுப கிரகம்
    முழுப்பார்வைத் திறனுடனும், வலிமையுடனும் இருக்கும் பட்சத்தில் சனி பூரண
    நன்மைகளைச் செய்வார். இல்லையெனில் சம்பந்தப்படும் சுபக் கோளின் வலுவுக்கேற்ப
    சனியின் சுபத்துவம் இருக்கும்.
அதாவது சனியுடன் தொடர்பு கொள்ளும் சுபக் கோள் தனது முழுத் திறனுடன் இருக்க
    வேண்டும். உதாரணமாக, விருச்சிகத்திலோ அல்லது சிம்மத்திலோ அசுபத் தன்மையுடன்
    இருக்கும் சனியை குரு, தனுசிலோ, மீனத்திலோ ஆட்சி பெற்று தனது ஒன்பதாம்
    பார்வையாக திறனுடன் பார்க்கும் போது சனி நன்மைகளைத் தரக்கூடிய சுபத் தன்மை
    பெறுவார்.
ஆனால் பார்வை தரும் குரு தனித்திராமல், அவருக்கு எதிரான வேறு கிரகங்களுடன்
    இணைந்தோ, சூரியனுடன் இணைந்து அஸ்தமனமாகியோ, ராகுவுடன் சேர்ந்து பலவீனம் பெற்றோ
    அல்லது இது போன்ற வேறு சில பலவீனமான அமைப்புகளில் இருந்தோ, சனியைப்
    பார்த்தாரானால் சனி சுபத்துவம் அடைய மாட்டார். சனியால் நன்மைகள் இருக்காது.
    சனி கொடூரமான பலன்களை செய்வார்.
மேற்கண்ட ஏதாவது ஒரு நிலையில் குரு வலுவிழந்திருக்கும் போது, மேம்போக்காக அந்த
    ஜாதகத்தில் குரு ஒன்பதாம் பார்வையாக சனியைப் பார்க்கிறார் என்று தோன்றினாலும்,
    குருவுக்கே பார்வை இல்லாத நிலையில் நமது கணிப்பு தவறும்.
எனவே ஒரு பாபக் கிரகம் சுபத்துவம் அடைந்திருக்கிறதா என்று கணிப்பதற்கு முன்பு
    அதனை சுபத்துவப் படுத்தும் அந்த சுபக் கோள் வலிமையுடன் இருக்கிறதா என்று ஆராய
    வேண்டியது அவசியம்.
மாய்ந்து மாய்ந்து, மறுபடி மறுபடி நான் விளக்கும் இந்த சுபத்துவ நிலைகளை
    தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் கிரகங்கள் தரும் சில மாறுபாடான
    பலன்களுக்கும்,. மனிதர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுக்கும் ஜோதிட ரீதியான
    அர்த்தம் புரியும்.
மேலும் பிளஸ் டூ படிக்கும் தனது மகனை, எந்தத் துறையில் கொண்டு செல்லலாம் என்று
    கேட்க வந்த தகப்பனிடம், உங்கள் மகன் இன்ன வருடம் இந்த மாதம் ஐ.ஏ.எஸ்
    அதிகாரியாவான் என்று பலன் சொல்லி, அந்த மகன் தந்தையுடன் நேரில் வந்து “அய்யா..
    உங்கள் வாக்குப்படி நாளை நான் சப்- கலெக்டராகப் பதவி ஏற்கிறேன்” என்று நேரில்
    வந்து ஆசி வாங்கும் போது ஏற்படும் பூரிப்பையும் அனுபவிக்க முடியும்.
பலன் சொல்வதில் முழுமையாக்குவது மற்றும் துல்லியமாக்குவது கிரகங்களின்
    சுபத்துவமும், சூட்சும வலுவும் தான்.
அடிக்கடி நான் சொல்லும் இந்த சூட்சும வலுவைப் பற்றி விளக்குமாறு இப்போது
    நேரிலும், தபாலிலும் ஏராளமானவர்கள் கேட்கிறீர்கள். ஏற்கனவே “பாபக் கிரகங்களின்
    சூட்சுமவலு தியரி”யைப் பற்றி மாலைமலரிலும், பாலஜோதிடத்திலும் தனிக் கட்டுரைகள்
எழுதியிருக்கிறேன்.    www.adityaguruji.in எனப்படும்
    எனது இணைய தளத்திலும் அந்தக் கட்டுரை உள்ளது.
மேலே சொன்னபடி குரு, சுக்கிரன், தனித்த புதன், வளர்பிறைச் சந்திரன் ஆகியோரின்
    பார்வையைப் பெறும் சனி புனிதமடைந்து, அந்த ஜாதகருக்கு ஆதிபத்திய சுபராக
    இருக்கும் பட்சத்தில் தனது தீய செயல்பாடுகளில், அதாவது தனது காரகத்துவங்கள்
    எனப்படும் தீய செயல்பாடுகளின் வழியே ஒரு மனிதனுக்கு நன்மைகளைத் தருவார்.
இங்கே சனியின் தீய செயல்பாடுகள் என்று நான் குறிப்பிடுவது ஒரு மனிதனுக்குத்
    தேவையற்ற அவனை அழிக்கக் கூடிய சாராயம், மது போன்றவைகளை விற்பது, உயிரினங்களைக்
    கொன்று இறைச்சி வியாபாரம், தோல் பொருட்கள், நீசத் திரவங்கள், பெட்ரோல்,
    கருப்பு நிறமுள்ள பொருட்கள், பிறரை நம்ப வைத்து ஏமாற்றுவது, குப்பை
    கழிவுப்பொருட்கள் போன்றவற்றைக் குறிக்கும்.
சூரியன் அரைப்
     
    பாபர் என்று சொல்லப்பட்டது ஏன்?
    
ஜோதிடத்தின் அடிநாதமே பூமி மையக் கோட்பாடுதான் என்பதையும், இதை நவீன
    விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதையும் முன்னர் சொல்லியிருந்தேன்.
அதன்படி ஜோதிடத்தில் சில நிலைகளில் சூரியன் என்ற வார்த்தையை பூமி என்று
    மாற்றிப் போட்டால் சில விஷயங்கள் பிடிபடும். சில புரியாத விஷயங்கள்
    தெளிவாகும்.
இன்னும் தெளிவாக சொல்லப் போனால், சூரியனின் ஒளியளவுகளில் ஒருபோதும் ஏற்றத்
    தாழ்வு உண்டாகாத நிலையில், சூரியன் உச்சம் என்று நம்மால் சொல்லப்படும்
    சித்திரை மாதத்தில், சூரியனின் தகிக்கும் ஒளியை நாம்தான் உணருகிறோம். ஆனால்
    சூரியன் நிலையானது. அதன் ஒளியளவு எல்லா மாதங்களும் ஒரே மாதிரியாகத்தான்
    உள்ளது.
சூரியனின் ஒளியைப் பெறும் பூமியின் நிலை மாறுவதாலேயே கோடையில் வெப்பம்
    கூடுதலாக நமக்குத் தெரிகிறது. அதே போல ஐப்பசி மாதம் சூரியன் நீசம் என்றால்
    சூரியன் எங்கும் ஒடி ஒளிந்து கொள்ளவில்லை. அது அங்கேதான் இருக்கிறது. சூரிய
    ஒளியைப் பெறும் பூமியின் நிலைதான் மேக மூட்டங்களால் மாறி சூரிய ஒளியைப் பெற
    முடியாமல் போகிறது.
இந்த நிலையை சூரியனின் அரைப் பாபர் நிலையோடு பொருத்திப் பார்த்தோமேயானால்,
    நமது பூமி சூரிய ஒளியைப் பெறும் விஷயத்தில் ஒரே நாளில் இரண்டு நிலைகளாக
    அமைவதால், அதாவது ஒரே நாளில் பூமி சூரிய ஒளியைப் பெற்று பகலாகவும், அதே நாளில்
    ஒளியை இழந்து இரவாகவும் இருப்பதால், சூரியன் நிலையாக இருக்க நாம் அதன் ஒளியை
    உணரும் நிலை மாறுவதால், பூமியின் நிலையை ஒட்டி சூரியன் அரைப் பாபராகவும் மீதி
    சுபராகவும் சொல்லப்பட்டார். இதுவே சூரியனுடைய சுப, அசுப சூட்சுமம்.
(அக் 22 - 2015 மாலைமலர்
நாளிதழில் வெளிவந்தது.)
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...
https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537
 

 
ஐயா,
ReplyDeleteசுபஔி இல்லாத பாபகிரகங்கள் சுபகிரகங்களின் நட்சத்திரசாரம் பெற்றால் சுபத்துவம் அடைவார்களா
உண்டு
Delete