Sunday, January 1, 2023

கும்பம்: 2023 புத்தாண்டு பலன்கள்#astrologeradityagurujinewyearpalan

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

கும்பம்:

கும்ப ராசிக்கு ஜென்மச் சனி வரப்போகும் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. தற்போது உங்களுக்கு முந்தைய மகர ராசியில் இருக்கும் சனி, வரும் ஜனவரி மாதம் 17 ஆம் தேதி முதல் உங்களுடைய ஜென்ம ராசிக்குள் நுழைந்து, உங்களுக்கு. ஜென்மச்சனி என்கின்ற அமைப்பை தர இருக்கிறார்.

உங்களில் நாற்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். குறிப்பாக அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரத்தினருக்கு பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்தச் சனி பொங்கு சனியாகி நன்மைகளைச் செய்யும். அவர்களுக்கு கெடுதல்கள் இருக்காது. மாறாக. வேலை, தொழில், வியாபார அமைப்புகளில். லாபங்களும், நன்மைகளும், வீடு, வாகன, ஆபரண சேர்க்கை போன்ற சுப நிகழ்வுகளும் இருக்கும்.

கும்பராசி இளைய பருவத்தினருக்கு 2023-ம் வருடம் மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது. முதலில் கசப்பை சனி தந்தாலும் பிறகு அளவற்ற இனிப்பைத் தருவார். என்ன இருந்தாலும் இளைஞர்களுக்கு 2023-ம் ஆண்டு சமாளிக்கக் கூடிய வருடம்தான்.

இளைய பருவத்தினர் இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஜென்மச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட கும்ப ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது. மேலும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் ஏற்படும் என்பதால் அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

ஒரு முக்கிய பலனாக கும்ப ராசி இளைஞர்கள் இந்த ஜென்மச்சனி காலத்தில் குடிக்காதீர்கள். கூடுமானவரை மனக் கட்டுப்பாட்டுடன் இருங்கள். குடி நிலையத்திற்கு சென்றால் உங்களிடம் சண்டை இடுவதற்கென்றே ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். இதுநாள்வரை. கட்டிக்காத்து  வந்த நற்பெயரை. ஒரு நிமிடத்தில் தொலைக்கும் பணியை ஜென்மச்சனி செய்வார்.

அதைப்போலவே. இந்த வயதிற்கே உரிய. காதல் உணர்வுகளில் நேரத்தை விரயம் செய்யாதீர்கள். இப்போது வருகின்ற காதல் மன அழுத்தத்தை மட்டுமே தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜென்மச்சனியில் அறிமுகம் ஆகின்ற. காதல். நிறைவேறாது, அல்லது மிக பெரிய சிக்கலில் கொண்டுபோய்விடும் என்பது அனுபவ பாடம். கும்ப ராசி இளம் பெண்களுக்கு திருமணத்திற்கு முன்பு இழக்கக் கூடாதது, காதல் என்ற பெயரில் இப்போது இழக்கப்படும் என்பதால் அவர்கள் கூடுதல். கவனத்தோடு இருக்க வேண்டும்.

புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் இந்த வருடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக என்னிடம் திறமை இருக்கிறது, இது போன்ற ஒரு திட்டம் இருக்கிறது, இந்த திட்டத்திற்கு நீங்கள் பணமுதலீடுகள் செய்தால் இதன் மூலம் பலமடங்கு லாபம் அடையலாம் என்று உங்களை உசுப்பேற்றுபவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள். இந்த வருடம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிக்கல்களைத் தரும் என்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

இந்த வருடம் உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். 

ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில், வியாபாரம் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

உங்களில் நடுத்தர வயதினர் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.

ஏப்ரல். மாதத்திற்கு மேல் தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும். 

கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில்ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் விரயங்கள்.இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற யூக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படும். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது.

பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள்  இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். குலதெய்வ அருளினால் எதையும் சமாளிப்பீர்கள்.

கும்ப ராசி இளையவர்கள் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கான அடிப்படை நிகழ்வுகள் இந்த ஆண்டு நடக்கும். கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். அதேநேரத்தில் 50 வயது தாண்டிய கும்பத்தினருக்கு இரண்டாவது சுற்று பொங்கு சனியாக இந்த வருடத்தில் அனைத்துமே நல்லபடியாக, லாபகரமாக, எதையும் சாதிக்கக்கூடிய விதமாக, மிகவும் சந்தோஷமாக இந்த புத்தாண்டு அமையும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888,  8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment