Thursday, December 31, 2020

Meenam: 2021 New Year Palangal - மீனம்: 2021 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 9768 99 8888

மீனம்:

மீன ராசிக்கு 2021-ம் ஆண்டு நற்பலன்களை தருகின்ற ஆண்டாக இருக்கும். வருடம் முழுவதும் உங்கள் ராசிநாதன் குரு பதினோராம் இடத்தில் நிலை கொண்டு, நீச்ச பங்க நிலையில் இருப்பது சிறந்த அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் இந்த வருடம் உங்களுக்கு சிறப்புகளை சேர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

கூடுதலாக லாபாதிபதி சனி குருவுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் இந்த வருடத்தில் உங்களுக்கு அந்தஸ்து, கவுரவம் கூடும்படியான அமைப்புகள் இருக்கும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் நடக்கும். இளைய வயது காரர்களுக்கு அவரவர்கள் வயதுக்கேற்றப்படி படிப்பு, வேலை, திருமணம், புத்திர பாக்கியம் ஆகியவை கிடைக்கும் வருடம் இது.

நடுத்தர வயதுக்காரர்களை இதுவரை தொல்லைப் படுத்தி கொண்டு வந்த கடன் தொல்லைகள், குடும்பச் சிக்கல்கள், வழக்குகள் வருடத்தின் ஆரம்பத்திலேயே சாதகமான முடிவுக்கு வரும்.

ஒரு சிறப்பு பலனாக வருடம் முழுவதும் ராகுவும் மூன்றாமிடத்தில் இருக்கிறார். உப செய ஸ்தானத்தில் சர்ப்பக்கிரகங்கள் இருப்பது எதிர்பாராத அதிர்ஷ்டங்களை தரும் என்பதால் உங்களுடைய பொருளாதார உயர்வு இந்த வருடம் மிகவும் நன்றாக இருக்கும்.

சனி பதினொன்றில் அமர்ந்தால் செல்வம் வரும் என்பது ஜோதிட விதி. பிறந்த ஜாதகத்திற்கும் கோட்சார அமைப்பிற்கும் இது பொருந்தும். அதன்படி இந்த வருடம் சுபத்துவ சனியின் மூலம் மறைமுகமான வழியில் உங்களுக்கு பண வரவும், தனலாபங்களும் இருக்கும்.

பதினோராமிட சனியால் இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு வெற்றிகள் இருக்கும். விரும்பிய தேசத்திற்குச் செல்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு வெளி மாநிலம் மற்றும் தூரமான இடங்களில் பணி அமையும். இன்னும் சிலருக்கு இருக்கும் இடத்தை விட்டு வெகு தொலைவு இடங்களுக்கு போய் வாரா வாரம் திரும்புவது போன்ற வேலைகள் கிடைக்கும்.

சென்ற வருடம் முதல் மீனத்திற்கு கோட்சார ரீதியில் கிரக நிலைகள் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனாலும் பிறப்பு ஜாதகத்தின்படி நல்ல தசாபுக்தி அமைப்பு இல்லாத மீனத்தினருக்கு சென்ற வருடம் கஷ்டங்கள்தான் இருந்து வந்தன. அதுபோன்றவர்களுக்கு கூட இந்த வருடம் நன்மைகள் இருக்கும்.

எனவே பிறக்க இருக்கும் புத்தாண்டு வாழ்க்கை, தொழில், வேலை, நட்பு, குடும்பம் ஆகியவற்றில் பெரிய மாற்றங்களைக் கொடுக்கும். ஆரம்பத்தில் அவை கஷ்டமாகத் தோன்றினாலும் வருடத்தின் இறுதிப் பகுதியில் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என்பது உங்களுக்குத் தெரிய வரும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இந்த வருடம் இருக்காது என்பது உறுதி.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் இப்போது நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

இதுவரை  சரியான வேலை, தொழில் அமைப்புகள் எதுவும் நடைபெறாத முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த வருடம் திருப்தியாக அனைத்தும் நடக்கும். தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

இதுவரை திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு தற்பொழுது குருபலம் வந்து விட்டதால் நல்லபடியாக திருமணம் நடக்கும்.  மீன ராசிக்காரர்கள் வீட்டில் நிச்சயமாக இந்த வருடம் ஒரு சுபகாரியம் உண்டு. இதுவரை குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண் குழந்தைகள் மட்டும் இருந்து ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு இம்முறை ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து வாழ்க்கை கோணலாகி போய் துன்பத்தில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் இரண்டாவது வாழ்க்கை நல்லவிதமாக அமையும். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும்.

வயதான மீன ராசிக்காரர்கள் தற்பொழுது தாத்தா, பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் உங்கள் ஆலோசனைகளையும் பேச்சையும் கேட்டு நடந்து கொள்வார்கள். ஆரோக்கியக் குறைவுகள் கட்டுக்குள் இருக்கும். ஏற்கனவே இருக்கும் உடல்நலக் கோளாறுகள் குணமடையத் துவங்கும். புதிதாக எந்த வித மருத்துவச் செலவும் இந்த வருடம் இருக்காது.

செய்கின்ற தொழிலில் முழுமையான லாபம் கிடைக்கும். இதுவரை வியாபாரம் நன்றாக நடந்தாலும் கையில் காசைக் காணோமே பணநெருக்கடி இருந்து கொண்டே இருகிறதே என்ற நிலைமை மாறி தாராளமான பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்.

பணத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருந்தாலே பாதிப்பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இந்த முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். செய்கின்ற தொழில் வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாபநிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு இருக்கப் போவது இல்லை.

குறிப்பிட்ட சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன் அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம். மாமியார் மாமனாருடன் கருத்து வேறுபாடுகளும் தந்தையுடன் உடன் பிறந்த அத்தைகளுடன் சிறிய பிரச்னைகளும் வரலாம்.

இதுவரை கடன் தொல்லையில் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். கடனை அடைப்பதற்கான வழிகள் தெரியும். கடன் தீர்ந்தே ஆகவேண்டும் என்பதால் வருமானமும் கூடும். இதுவரை உங்களை விரோதியாக நினைத்தவர்கள் மனம் மாறி நட்பு பாராட்டுவார்கள்.

நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு வீட்டுக்கனவு நனவாகும். பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து  ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.

பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்வோருக்கு இந்த வருடம் மிகவும் நல்ல பலன்களைத் தரும். எனவே சோம்பலை உதறித்தள்ளி சுறுசுறுப்பாக காரியம் ஆற்ற வேண்டியது அவசியம். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள்.

எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பாவர்கள் மிகுந்த முன்னேற்றம் அடைவீர்கள். எனவே அதற்கேற்ப திட்டங்கள் தீட்டி வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுங்கள். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். மறைமுகமான வழிகளில் லாபம் கிடைக்கும்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும்.

எல்லா வகையிலும் நல்ல மாறுதல்கள் இருக்கும் வருடம் இது. பெண்கள் சம்பந்தப்பட்ட இனங்கள், சிற்றுண்டி விடுதி, லாட்ஜிங், வாகனங்கள், வாடகை, கலைத்துறை, டெக்ஸ்டைல்ஸ் போன்றவைகளில் சிலருக்கு வருமானம் வரும்.

அரசு ஊழியர்களுக்கு நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்லபலன்கள் நடக்கும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரும்.

இதுவரை எந்த விஷயத்தில் தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும். எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த புத்தாண்டில் தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

மீனத்திற்கு மேன்மை தரும் வருடம் இது.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment