ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கும்பம்:
கும்பத்திற்கு இந்த புதுவருடம் மாற்றங்களைத் தந்து தொழிலிலும், சொந்த வாழ்க்கையிலும் சில விஷயங்களைப் புரிய வைக்கும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக 2021 நிதானமான பலன்கள் நடக்கும் ஆண்டாக இருக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் தடைகளுக்குப் பின் நிறைவேறும் வருடம் இது.
இந்த வருடத்தின் கிரகநிலைகளை எடுத்துக்
கொண்டால் வருடம் முழுவதும் ராகு சுக்கிரனின் வீட்டில் குருவின் பார்வையில் இருப்பது
உங்களுக்கு யோகம் தரும் அமைப்பு. எனவே வருடம் முழுவதுமே ராகுவின் மூலமாக நல்ல
பலன்கள் இருக்கும்.
அதேநேரத்தில் உங்களின் ராசினாதனான சனி
பகவான் தற்போது நன்மைகளை தர இயலாத அமைப்பில் விரையச்சனியாக இருப்பதால் உங்களுடைய
வேலை, தொழில், வியாபாரம் போன்ற
ஜீவன அமைப்புகளில் மந்தமான பலன்கள்
நடக்கும். பணவரவு குறையும். ஆகவே எதுவும் புதியதாக ஆரம்பிப்பதற்கு இந்த
வருடம் ஏற்றதல்ல.
சனிபகவான் நம்முடைய மனதைக் குழப்பி புதிய
முயற்சிகளில் இறங்க வைத்து அதில் சிக்கல்களை உருவாக்கி ஒன்றை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலி வாலைப் பிடித்தது போன்ற ஒரு நிலையை உருவாக்குவார்
என்பதால் இந்த வருடம் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
சனியின் வேலையே ஆசை காட்டி மோசம்
செய்வதுதான் என்பதால் யாராவது ஒருவரை அறிமுகப்படுத்தியோ அல்லது ஒரு தொழில் துவங்க
ஆர்வம் கொடுத்தோ, அல்லது ஒரு லட்சம் போட்டால் பத்து லட்சம் எடுத்து விடலாம்
என்று தவறான ஆலோசனை சொல்லியோ, உங்களை ஏதாவது தொழில் விஷயத்தில் இழுத்து
விட்டு தலைவலிகளை ஏற்படுத்துவார்.
இந்த வருடம் செய்யப்போகும் ஒரு காரியத்தால்
கும்ப ராசியினர் புலிவாலை பிடித்த நிலைமை உண்டாகி, அதை நடத்தவும்
முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்கு
உள்ளாவீர்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்பும், தொழில் தொடங்கும் முன்பும், வேலை மாறும் முன்பும், ஒன்றுக்கு நூறுமுறை நீங்கள் யோசிக்க வேண்டிய வருடம் இது.
மேலும் ஏதேனும் ஒரு சொத்தை விற்றோ, அடமானம் வைத்தோ, கொலட்ரால் கொடுத்தோ தொழில் எதுவும்
ஆரம்பிக்க வேண்டாம். அதேபோல உங்களின் சேமிப்புகளையும் ரிஸ்க்கான துறைகளில் முதலீடு
செய்ய வேண்டாம். இந்த ஒரு பலனை தவிர்த்து
2021 புத்தாண்டு உங்களுக்கு நல்ல அமைப்புகளையே தரும். எனவே கும்ப ராசிக்காரர்கள்
இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது
நல்லது.
ஒரு சிறப்புப் பலனாக எந்தக்காரணம்
கொண்டும் எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில்
செய்வது இப்போது செய்யாதீர்கள். அது சரியாக வராது. அதுபோலவே இருக்கும் வீட்டை
விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம்.
சிலருக்கு இப்போது இருப்பதை விட்டு
பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசைவந்து அதைப் பறந்து பிடிக்கப் போய் “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா”
கதை வரும் என்பதால்
வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இருக்கும் வேலையை விடுத்து அடுத்த
வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு
முயற்சி செய்ய வேண்டும். அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு இருக்கும்
வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த
வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி.
முப்பது வயதுகளில் இருப்பவர்கள் செட்டிலாக
விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள்
இருக்கும். பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு நான் மேலே
சொன்ன சாதகமற்ற பலன்கள் இருக்காது.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு
அதிகம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருப்பது கடினம். மறைமுக
எதிரிகள் உருவாவார்கள். முதுகுக்குப் பின்னே பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக
இருங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அவர்களுடைய
ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.
மேலதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது.
வேலை செய்யும் இடங்களில் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சம்பளம்
தவிர்த்த ‘இதர’
வருமானங்கள் வரும்
துறைகளில் இருப்பவர்கள் எங்கும் எதிலும் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டியது
அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம்.
பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து
கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை
செய்யும் துறையினருக்கு இந்த வருடம் அலைச்சலான இடத்திற்கு மாறுதல்களும் அதிகமான
வேலை இருக்கும் நிலைகளும் உண்டு.
தொழிலாளர்களுக்கும் வேலைசெய்யுமிடத்தில்
வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.
பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு
வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்த ஆண்டில் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே
சிலருக்கு அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
தொலைக்காட்சி சினிமாத்துறை போன்ற
ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத் துறையினர், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த ஆண்டு எதிர்கால நல்வாழ்விற்கு தேவையான அடிப்படை
கட்டமைப்புக்கள் நடக்கும்.
சிலர் கோவில் திருப்பணிகளில் ஆர்வம்
காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின்
அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பாக்கியம் கிடைக்கும். ஷீரடி
மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திருவிடம் போன்ற
புனிதத்தலங்களுக்குப் போக முடியும்.
நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது
பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள
இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால்
ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.
வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான
அலைச்சல்கள் இருக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப
வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது
என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண்
எப்போதும் இருக்கட்டும்.
இளைஞர்கள் காதல் விவகாரங்களில் திசை
திரும்புவீர்கள். மன அழுத்தம் தரக் கூடிய விஷயங்கள் இப்போது நடக்க வேண்டும்
என்பதால் இந்த வயதிற்கே உரிய விஷயங்களில் உங்கள் கவனம் செல்லும். காதலித்து, பிறகு அதில் தோல்வியைக் கொடுத்து எதிர்பாலினத்தவரை புரிந்து கொள்ளும்
அனுபவங்கள் இப்போது நடக்கும். எனவே எதையும் திடமான மனதுடன் அணுகுவது நல்லது.
மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கள்.
இந்த வருடம் அரியர்ஸ் வரும் வாய்ப்பு இருக்கிறது. காலேஜிற்கு கட் அடிக்காதீர்கள்.
காலேஜ் உங்களைக் கட் அடித்து விடலாம். இளைய பருவத்தினர் தங்களின் ஆக்க சக்தியை
கேளிக்கை உல்லாசம் போன்றவைகளில் வீணடிக்காமல் எதிர்கால முன்னேற்றத்தில் கவனம்
செலுத்த வேண்டிய வருடம் இது.
படிப்பு, மற்றும் வேலைக்காக
வெளிநாடு போகவும் வாய்ப்பு இருக்கிறது. வேற்று மதத்தினர் உதவுவார்கள். சிலருக்கு
தொழில் விஷயமாக இஸ்லாமிய நாடுகளுக்குச் செல்வதும், கிறிஸ்துவ, இஸ்லாமிய நண்பர்கள் பங்குதாரர்கள் மூலமாக நன்மைகள் நடப்பதும் உண்டு.
இதுவே ஜாதகர் இஸ்லாமியர் அல்லது கிறித்துவராக இருந்தால் அவருக்கு இந்து மத
நண்பர்கள் மூலம் மேன்மைகளும் உதவிகளும் இருக்கும்.
மறைமுகமான வழிகளில் சிலருக்கு வருமானம்
உண்டு. குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள்
போன்றவர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும்
இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும்
அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த
காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால்
எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன்
இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த
முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.
இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல்
குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில்
இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக்
கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும்
கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட
செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
மொத்தத்தில் இந்த ஆண்டு கும்பத்திற்கு சில
கசப்பான மாற்றங்களைக் கொடுத்து அதன் மூலம்
எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.
No comments :
Post a Comment