Tuesday, January 7, 2020

MAKARAM : 2020 SANI PEYARCHI - மகரம் : 2020 சனிப்பெயர்ச்சிப் பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : 9768 99 8888

மகரம்- கொஞ்சம் கவனம்

மகரம்

(உத்திராடம் 4ம் பாதம், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.

மகர ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏழரைச்சனி அமைப்பில் ஜென்மச்சனி எனும் நிலையை அடைகிறீர்கள். இதன்மூலம் சனிபகவான் முயற்சிகள் பலனளிக்காத சாதகமற்ற பலன்களை இனி உங்களுக்குத் தர இருக்கிறார்.


ஆயினும் ஜென்மச்சனியின் பலன்களை நான் இரண்டு விதமாக பிரித்துச் சொல்வேன். ஐம்பது வயதிற்கு மேலானவர்களுக்கு இந்த சனி இரண்டாம் சுற்று என்கிற அமைப்பில் பொங்கு சனியாக செயல்பட்டு நல்ல பலன்களை தரும். ஆகவே நடுத்தர வயது மகரத்தினருக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். நிச்சயமாக கெடுபலன்கள் இருக்கவே இருக்காது.

ஜென்மச்சனி என்பது ஒருவருக்கு எதிர்மறை அனுபவங்களின் மூலம் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் என்பதால் மகர ராசி இளையவர்களுக்கு சில சாதகமற்ற பலன்களைச் செய்து அதன் மூலம் எதிர்கால வாழ்க்கையை எப்படி நல்லவிதமாக அமைத்துக் கொள்வது என்கிற படிப்பினையை சனி இந்தப் பெயர்ச்சியின் மூலம் தருவார்.

எனவே நடுத்தர வயதைக் கடந்தவர்கள் குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இளம் பருவத்தில் ஏழரைச்சனியை 1991, 1992, 1993-ம் ஆண்டுகளில் கடுமையாக உணர்ந்தவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பொங்குசனியாக நல்ல பலன்களைச் செய்து வாழ்க்கையில் சுபிட்சத்தை தரும். எனவே சனியைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

இன்னும் சொல்லப் போனால் சனிபகவானே உங்களின் ராசி அதிபதி என்பதாலும், தற்போது அவர் ஆட்சி நிலைக்கு வருகிறார் என்பதாலும், அடுத்தவருடம் குருவின் இணைவின் மூலம் சுபத்துவம் அடைவார் என்பதாலும் தனது வீடான மகரத்திற்கு நல்லவைகளுக்கான அனுபவங்களை மட்டுமே தருவார் என்பது விதி. மற்ற ராசிகளுக்கு தரும் கெடுபலன்களை அவர் எப்பொழுதுமே மகரத்திற்குத் தருவது இல்லை. எனவே எதற்கும் கவலை வேண்டாம்.

மேலும் பிறந்த ஜாதக அமைப்பில் சனி சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெற்றவர்களுக்கும் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி காலங்களில் தாங்க முடியாத கெடுபலன்கள் நடப்பது இல்லை. ஆகவே கோட்சார ரீதியில் ஏழரைச்சனி நடக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொண்டிராமல் முறையான வழிபாடுகளை செய்து கொள்வதன் மூலம் சாதகமற்ற பலன்களை கூட நல்ல பலன்களாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை மகரத்தினர் நினைவில் கொள்வது நல்லது.

அதேநேரத்தில் ராசியில் சனி இருப்பதால் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும், திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது இளைஞர்களுக்கு நன்மையைத் தரும்.

இளைய பருவத்தினர் 2020 ஆகஸ்டுக்குப் பிறகே ஜென்மச் சனியின் பாதிப்புகளை உணர ஆரம்பிப்பீர்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக எந்த விஷயத்திலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ராசியில் சனி இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண்அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக கீழ்நிலைப் பணியாளரிடம் விலகியே இருங்கள். சனி என்பவர் வேலைக்காரனைக் குறிப்பவர் என்பதால் அவருடைய காரகத்துவங்களில் இருந்துதான் பிரச்னையை ஆரம்பிப்பார்.

இந்த காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகளை நீங்களே வீணடித்துக் கொள்வீர்கள். நம்பக் கூடாதவர்களை நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

இளைய பருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளை பிறர் அறிய மாட்டார்கள். நீங்களே சோம்பலாகி விடுவீர்கள். உங்களை விட திறமைக் குறைவானவருடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் காதல் வரும். கூடவே காதல் தோல்வியும் வரும். எனவே காதல், கத்திரிக்காய் என்று உங்களின் ஆக்கசக்தியை இழந்து மனஅழுத்தத்தில் தவிப்பதை தவிருங்கள்.

குடிப்பழக்கம் இருப்பவர்கள் ஜென்ச்சனி முடியும்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்துவது நல்லது. குறிப்பாக குடித்து விட்டு வண்டி ஓட்டவே செய்யாதீர்கள். விபத்து நடக்கிறதோ இல்லையோ தெருமுனையில் காவலர் ஊதும் கருவியுடன் இருந்து உங்கள் பாக்கெட்டை காலி செய்வார். பாருக்குள் நுழைந்தால் உங்களிடம் சண்டை போடுவதற்கென்றே இன்னொரு நபர் காத்துக் கொண்டிருப்பார்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டில் தனிமைத் துயரை அனுபவிப்பீர்கள். ஆனால் அது இங்கே குடும்பத்திற்கு தெரியக் கூடாது என்று தொலைபேசியில் பேசும் போது சந்தோஷமாக இருப்பதாக நடிப்பீர்கள்.

வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது. போலீஸ் ஸ்டேஷன் போகாதவர்களையும், கோர்ட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் சனி அங்கே போக வைத்து விடுவார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதியாவர்கள் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். நடுத்தர வயதுக்காரர்கள் ஆரோக்கியத்தில் கவனம் வைக்க வேண்டும். ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

மகர ராசி பெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் பிரச்னை எதுவும் கைமீறிப் போகாது.  

கணவன்-மனைவிக்குள்ளும் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்குத் தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்குத் தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார்.

குடும்பத்தைப் பிரிக்கும் சகுனி வேலை செய்வதற்கு மூன்றாவது நபராக ஒருவர் ருவார் என்பதால் எவரையும் நம்பாமல் குடும்ப பிரச்சினைகளை கணவர்-மனைவி இருவர் மட்டும் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வதன் மூலம் சனியை ஜெயிக்கலாம். குறிப்பாக ஒருவரை ஒருவர் சந்தேகப்படாதீர்கள். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் பிரச்னைகளால் மனக் கலக்கம் வரலாம்.

அதிர்ஷ்டம் கை கொடுக்காத நேரம் இது. உங்களின் உழைப்பும் முயற்சியும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக கடுமையாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதே நேரத்தில் மகர ராசிக்காரர்கள்  உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

மொத்தத்தில் இந்தக் சனிப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தரும். மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச்சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான்.

பரிகாரங்கள்:


சனிக்கிழமை இரவு சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்திற்கு உணவிடுங்கள். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளிப்பதும், நடக்க இயலாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் வாங்கிப் பரிசளிப்பதும் மிகச் சிறந்த பரிகாரங்கள்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 



தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.



1 comment :

  1. Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Online Astrology consultancy services in Chennai, Tamil nadu

    Top Online Astrologers in Chennai

    ReplyDelete