கைப்பேசி : 9768 99 8888
கும்பம்- குறையாது குதூகலம்
கும்பம்
(அவிட்டம்
3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின்
முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
கும்ப ராசிக்காரர்களுக்கு
இந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் ஏழரைச் சனி ஆரம்பிக்க இருக்கிறது. ஏழரைச்சனி
என்றதும் ஜோதிட நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மனம் கலக்கம் அடைவது இயற்கை. அதேநேரத்தில் 12 ராசிகளுக்கும் சனிபகவான் ஒரே மாதிரியான
கெடுபலன்களைத் தந்து விடுவது இல்லை.
உதாரணமாக கடந்த ஆண்டுகளில்
விருச்சிகம், மற்றும் தனுசு ஏழரைச் சனியினால் கடுமையான கெடுபலன்களை அனுபவித்தது. இதில்
விருச்சிகத்திற்கு கூடுதலாக கெட்டவைகள் நடந்தன. இதற்கு விருச்சிக ராசியின் அதிபதியான
செவ்வாயும்,
சனியும் பகை அமைப்பு கொண்ட கிரகங்கள் என்பது ஒரு காரணம். உங்களுக்கு
ஆகாத ஒருவருக்கு நீங்கள் நன்மைகளைச் செய்ய மாட்டீர்கள் என்ற அடிப்படையில் செவ்வாயின்
ராசியான விருச்சிகத்திற்கு சனி அதிகமான கெடுபலன்களைச் செய்து விட்டார்.
அதேநேரத்தில் தனக்கு நண்பர்களான
சுக்கிரன்,
புதனின் ரிஷப, துலாம், மிதுன,
கன்னி ராசிகளுக்கு சனி கெடுபலன்களைக் குறைத்துத்தான் தருவார்.
நமக்கு வேண்டப்பட்ட நண்பருக்கு நாம் கெடுதல்களைச் செய்ய மாட்டோம் என்பது
போன்றது இது.
மிக முக்கியமாக கும்பம்
சனியின் சொந்த ராசியாகும்.
உங்கள் ராசிக்கு அதிபதியே சனிதான். என்னதான் பிரச்சினை என்றாலும் நம்முடைய
கையை எடுத்து நம் கண்ணை நாமே குத்திக் கொள்ள மாட்டோம் என்ற அடிப்படையில் கடுமையான கெடுபலன்களை
சனி தன் சொந்தராசியான கும்பத்திற்குச் செய்வது இல்லை.
ஆனாலும் ஏழரைச்சனி என்பது
வாழ்க்கைக்குத் தேவையான அனுபவங்களைத் தருகின்ற ஒரு அமைப்பு. இந்த ஏழரை
ஆண்டு காலம் உங்களுக்குக் கிடைக்கின்ற எதிர்மறை பலன்களால்தான் பணம் என்றால் என்ன,
அதை எப்படிச் சம்பாதிப்பது, வந்த பணத்தை எப்படித்
தக்க வைத்து கொள்வது போன்ற விஷயங்களை சனி காட்டுவார். மேலும் சுற்றியுள்ள உறவுகள்,
நட்புகள் எப்படிப் பட்டது. யார் நமக்கு உதவி செய்வார்கள்,
யார் உதவி செய்வது போல் நடிப்பார்கள் என்பதை அடையாளம் காட்டக்கூடிய ஒரு காலகட்டமும்
ஏழரைச்சனி நேரம்தான்.
சுருக்கமாக சொல்லப் போனால்
இளம் பருவத்தில் வருகின்ற ஏழரைச்சனி அடுத்த 30 ஆண்டுகளுக்கு நீங்கள் வாழ்க்கையை
உணர்ந்து நன்றாக வாழ்வதற்கான அனுபவங்களை சொந்த வாழ்க்கையிலும், தொழில் அமைப்புகளிலும் தரும் என்பதால் ஒரு மனிதனுக்கு ஏழரைச் சனிக்காலம் என்பது
அனைத்தையும் சொல்லித் தரும் ஆசானாக இருக்கும். எனவே கடுமையான
பலன்களைத் தராது என்றாலும் சனியின் தாக்கம் கும்ப ராசிக்கு இருந்தே தீரும்.
அதேநேரத்தில் மிக
முக்கியமான ஒரு பலனாக நடுத்தர வயது கும்பத்தினருக்கு இந்த மாற்றம் எவ்வித கெடுபலன்களையும்
தராது. அவர்களுக்கு பொங்குசனி என்று சொல்லக் கூடிய இரண்டாம் சுற்று சனியாக சகல நன்மைகளையும்
செய்யும்.
முதல் சுற்று சனியின்போது
விவரம் தெரிந்த வயதில் இருந்து அதாவது இளைமையான இருபது வயதுகளில் இருந்து ஏழரைச் சனியின்
வேதனைகளை அனுபவித்தவர்களுக்கு இப்போது வரும் சனி இரண்டாம் சுற்றாக அமைந்து கெடுதல்களைச் செய்யாமல் வாழ்க்கையில் நிலை கொள்ளும்
விதமாக நன்மைகளை செய்யும்.
எனவே நடுத்தர வயதினர் கவலைப்படத் தேவையில்லை.
எனவே இளைய பருவ கும்பத்தினர்
இந்த சனி காலத்தில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமலும், இருக்கும் வேலை, தொழிலை நல்லவிதமாக
தக்க வைத்து கொள்வதும்,
தொழில் அமைப்புகளில் மற்றவர்களை நம்பாமல் தானே முன்னின்று கண்ணும் கருத்துமாக
பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.
கூடுதலாக இளைஞர்கள்
தற்போது வேலை, கல்வி ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தி, வேறுபக்கம் கவனத்தை சிதற விடாமல், முக்கியமாக தேவையற்ற ஆரோக்கியத்தைக் கெடுக்கும்
பழக்க,வழக்கங்கள் மற்றும் காதல் போன்றவைகளில் திசை திரும்பி உங்களுடைய
ஆக்க சக்தியை வீணடிக்காமல் இருந்தால் சனி உங்களை
ஒன்றும் செய்யப் போவதில்லை.
ஏழரைச் சனியால்
இளைஞர்களுக்கு இதுவரை இல்லாத சோம்பல் வரும். படுக்கையில் இருந்து எழுந்திருக்க
முடியாது. மாணவர்களுக்கு படிப்பது மறந்து போகும். எதிலும் விட்டேத்தியாக
இருப்பார்கள். விரக்தி வரும். எனவே பெற்றோர்கள் அவர்களை அரவணைத்து அக்கறை காட்டி
வாழ்க்கையைப் புரிய வைத்தால் ஒரு பிரச்னையும் இல்லை.
அரசு, தனியார் துறைகளில்
பணிபுரிபவர்கள் கவனமுடன் வேலை செய்ய வேண்டியது அவசியம். உடன் பணிபுரிபவர்கள்
எவரையும் நம்ப வேண்டாம். அலுவலகத்தில் உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை
ஏற்படலாம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். மேலதிகாரிகளிடம் மோதல்
வேண்டாம். அந்தரங்கமான விஷயங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உயரதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது.
சம்பளம் தவிர்த்த ‘இதர’
வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எதிலும்
அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும்
அடுத்தவர்களை நம்புவது இந்த சனிப்பெயர்ச்சியில் சரிபட்டு வராது.
பொதுவாக கும்ப ராசிக்காரர்கள்
நடுநிலை தவறாதவர்களாகவும் நல்ல உழைப்பாளிகளாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள்.
யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். எதற்கும் விலை போக மாட்டீர்கள்.
உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ்
வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள்.
கணவன் மனைவி உறவு
மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால்
படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது.
குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்
வாங்குவீர்கள்.
சொந்தத் தொழில்
செய்பவர்கள் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் அதிக கவனமுடன் இருங்கள்.
வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். பொருட்கள்
தொலையவோ, வீணாகவோ, திருடு போவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு
நெருக்கடிகள் வரும். அரசாங்க உதவிகள் கிடைப்பது கடினம். தொழில் சம்பந்தப்பட்ட
ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை இதைச் செய்து
முடிக்க முடியுமா என்று யோசனை செய்வது நல்லது.
வியாபாரிகள் கொள்முதல்
மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன்
இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன்
வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி இருக்கும்.
இளைய பருவத்தினர்
பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள். சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு
அதிலேயே முன்னேறி மேலே போவது புத்திசாலித்தனம் என்பதால் கிடைக்கும் எந்த
வேலையையும் அலட்சியப் படுத்த வேண்டாம். சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும்.
அதனால் சில கசப்பான அனுபவங்களும் படிப்பினைகளும் வரும். லஞ்சம் கொடுத்து வேலை
வாங்குவது போன்ற முறைகேடான வழிகளில் செல்லும்போது உஷாராக இருங்கள். வேலை வாங்கித்
தருவதாக சொல்பவரிடம் முன்கூட்டியே நம்பி பணம் தர வேண்டாம். ஏமாறுவதற்கு
சந்தர்ப்பம் இருக்கிறது.
கடன் வாங்க நேரிடும்.
ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல்
லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க
வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும். மகன், மகளுக்கு திருமணம் நடக்கும்.
வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள
நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி
சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும்.
மறைமுக எதிரிகள்
உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு
இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது.
தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம். வழக்கு விவகாரங்கள் ஏற்பட
வாய்ப்பு இருக்கிறது. வீட்டுப் பிரச்னைகளாலும் கோர்ட் போலீஸ் என அலைய நேரிடலாம்.
பெண்களுக்கு இது
வேலைச்சுமையைத் தரும் காலமாகும்.
அலுவலகத்தில் தாங்க முடியாத பணிகளை சமாளித்து விட்டு வீட்டிற்கு வந்தால்
வீட்டிலும் நீங்கள்தான் அடி முதல் நுனிவரை அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டியது
இருக்கும். எல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும். யாரையும் நம்பி
மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
மொத்தத்தில் இந்த
சனிப்பெயர்ச்சி இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்
கொள்வதற்கான அனுபவங்களையும் படிப்பினைகளையும் தரும் என்பதால் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.
பரிகாரங்கள்:
ஏழரைச்சனிக்கு முக்கிய
பரிகாரமாக காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் அவரவர்களின் வயது எண்ணிக்கையின்படி ஒரு சிகப்புநிறத்
துணியில் மிளகை முடிச்சாகக் கட்டி கோவிலுக்கு அருகில் வாங்காமல் வீட்டிலிருந்தே
நல்லெண்ணெய் கொண்டு சென்று ஒரு மண் அகல் விளக்கில் தீபமேற்றவும். பிள்ளைகளுக்காக
பெற்றோர்களும் இதைச் செய்யலாம்.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment