ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
எம். விஷ்ணு, மும்பை.
கேள்வி.
தங்களின் தீவிர ரசிகன் நான். பிஇ முடித்து 3 வருடம் வேலை செய்தேன். எம்பிஏ படிக்க விரும்பி வேலையை விட்டுவிட்டு டெல்லியில் படித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது ட்ரெய்னிங்கில் மும்பையில் இருக்கிறேன். ஒரே பையன் என்பதால் தாய் தந்தையர் என்னை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்கள். மேலே படிக்கப் போவது என் அம்மாவிற்கு இஷ்டம் இல்லை. என்னுடைய பிடிவாதத்தினால் படிக்க வந்தது தப்பு என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் ஒரு வருடம் படிப்பு இருக்கிறது. படிப்பு முடிந்த பிறகு வேலை எங்கு கிடைக்கும்? எப்போது திருமணம்? மனைவி என் எண்ணப்படியா அல்லது அம்மா, அப்பாவின் விருப்பப்படியா? அம்மா, அப்பாவை பார்த்துக் கொள்வேனா? பாதகாதிபதியின் பார்வை வாங்கிய ராகு தசையில் ஏதாவது பாதகம் நடக்குமா?
பதில்
(விருச்சிக லக்னம், ரிஷப ராசி, 1ல் ராகு, 4ல் புத, செவ், சனி, 5ல் சூரி, சுக், 7ல் சந், கேது, 12ல் குரு 17-3- 1994 இரவு 10-50 மதுரை)
பாதகாதிபதி என்றாலே பலரும் பயந்து அலறி ஓடுகிறீர்கள். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்குமே எல்லா நிலைகளிலும் பாதகம் நடந்துவிடுவதில்லை. பாதகம் என்ற சொல்லிற்கு “மிகக் கொடுமையான” என்ற அர்த்தம் கொள்ளலாம். பூமியில் எல்லோருக்கும் மிகக் கொடுமையான செயல்கள் நடந்து விடுவதில்லை. அத்தி பூத்தார் போல ஆயிரத்தில் ஒருவர், லட்சத்தில் ஒருவருக்குத்தான், ஏற்றுக்கொள்ள இயலாத, மிகக் கடுமையான, கொடுமையான பாதகங்கள் நடக்கின்றன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதகாதிபதி குரு இதற்கு ஒரு நல்ல உதாரணம். பாதகாதிபதி தசை அஷ்டமாதிபதி புக்தியில், அவரது 68 வயதில் அவர் மரணம் அடைந்தார். ஜெயலலிதா மரணமடையும் போது புகழ் மற்றும் வெற்றியின் மிகப்பெரிய உச்சியில் இருந்தார். அதற்கு முன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவிகித வெற்றியையும், பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து நின்று எவருமே பெறாத மிகப்பெரிய வெற்றியையும் அடைந்த சில மாதங்களுக்குள், அதை அனுபவிக்க இயலாமல் அற்பாயுள் என்று சொல்லப்படும் 68 வயதில் அவர் மரணமடைந்தார்.
அவரை விரும்பாதவர்களைக் கூட அவரது 68 வயது மரணம் கலங்கடித்தது. இன்னும் கொஞ்ச நாள் இந்த அம்மா இருந்திருக்கலாமே என்று எண்ண வைத்தது. உலகின் எந்த மூலையில் இருந்தும் மருத்துவ சிகிச்சை பெறக் கூடிய நிலையிலும், அதற்கான பொருளாதார வசதிகளும் இருந்தும் கூட அவரால் 68 வயதிற்கு மேல் வாழ முடியவில்லை. இதுவே அவரது பாதகாதிபதி குரு அவருக்கு செய்த கொடுஞ்செயல்.
இந்த கொடும் செயலை செய்வதற்கு அவரது ஜாதகத்தில், பாதகாதிபதியான குரு, பாதக ஸ்தானத்தில் தனித்து, ஆட்சிக்கும் மேற்பட்ட மூலத்திரிகோண பலம் பெற்று, அதிக சுபத்துவமாகி எவ்வித பாபத் தொடர்புகளும் இன்றி, பங்கம் அடையாமல் இருந்து தசை நடத்தியதே காரணம். பாதகாதிபதி சுப வலுப்பெற்று பங்கம் அடையாமல், பாபர்களின் தொடர்பு இல்லாமல் அதிகமான வலிமையை அடைந்திருக்கும் நிலையில் மட்டுமே பாதகங்களை செய்வார். மாறாக பாபர்களுடன் தொடர்பு கொண்டு பலவீனமாக இருக்கும் நிலையில் பாதகத்தைச் செய்ய மாட்டார். அதே போல அவர் பாதக ஸ்தானத்தில் இருப்பது மட்டுமே மிகக் கொடிய பலன்களைத் தரும்.
மிக முக்கிய பதிலாக பாதகாதிபதியின் பார்வை பெற்ற கிரகங்கள் கெடுதல்களைச் செய்யாது. பாதகாதிபதிக்கும் அவரது பார்வைக்கும் சம்பந்தமில்லை. பாதகாதிபதி என்பது ஆதிபத்தியத்தை குறிக்கக்கூடிய ஒரு செயல்தானே தவிர, பார்வை பலத்தை பற்றியது அல்ல.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய உதாரணத்தில் அவரது புகழின் உச்சிக்கும், அனைவரும் அவரைக் கண்டு பணிந்ததற்கும் அவரது பாதகாதிபதியாகிய வலுத்த சுபரான குரு, அவரது லக்னத்தையும், ராசியையும் பார்த்ததே காரணம். பாதகாதிபதியின் பார்வை அது எந்தக் கிரகம் என்பதைப் பொருத்து, சுப கிரகமாயின் நல்லவைகளையும், பாபக் கிரகமாயின் தீமைகளையும் தரும். பாதகாதிபதி என்ற முறையில் அந்த கிரகத்திற்கு தனித்த பார்வை விசேஷம் இல்லை. ஆதிபத்திய ரீதியில்தான் பாதகாதிபதி கிரகம் நன்மைகளையோ, தீமைகளையோ தரும். பார்வை ரீதியில் அல்ல.
உங்கள் விஷயத்தில் பாதகாதிபதி சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருந்தாலும், ராகு- கேதுக்களுடன் இணைந்து, செவ்வாயின் பார்வையைப் பெற்றிருப்பதால், பாதகம் செய்ய மாட்டார். அதேபோல அவரது பார்வை பாக்கியாதிபதி சந்திரனின் பார்வை போலத்தான் ராகுவிற்கு இருக்குமே தவிர, பாதகாதிபதியின் பார்வையாக இருக்காது.
சுபத்துவமான ராகு தசை நடந்தாலே ஒருவருக்கு வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற தொடர்புகள் வந்துவிடும். உங்கள் ஜாதகப்படி ராகு ஸ்திர ராசியில் இருப்பதால் வெளிமாநிலத்தில் ஹைதராபாத், பாம்பே, டெல்லி என ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இது ராகுதசை வரை நீடிக்கும். பரிவர்த்தனை பெற்ற குரு பன்னிரண்டில் அமர்ந்து எட்டாம் வீட்டையும், அஷ்டமாதிபதியும் பார்ப்பதால் நிரந்தரமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேதான் இருப்பீர்கள்.
சூரியனும், சந்திரனும் சுபத்துவமாகி ஒன்பதாமிடம் வலுப்பெற்று இருப்பதால் கடைசிவரை தாய், தந்தையரை காப்பாற்றுவீர்கள். தந்தையை விட தாயின் மீது பாசம் அதிகம் கொண்ட ஜாதகம் உங்களுடையது. ஏழாமிடத்தோடு ராகு-கேதுக்கள் சம்பந்தப்பட்டு செவ்வாயின் பார்வையும் அங்கே இருப்பதால், திருமணம் உங்களின் விருப்பப்படி பெற்றோரின் சம்மதத்துடன் நடக்கும். வெளிநாட்டு யோகமும் உங்களுக்கு இருக்கிறது. அடுத்தடுத்து தசை நடத்த இருக்கும் கிரகங்கள் குருவின் பார்வையில் அமர்ந்து, யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால், வாழ்க்கையில் அதிகம் சிரமப்படாமல் மிகவும் நன்றாகவே இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(25.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment