இந்திரா, கனடா.
கேள்வி.
கனடாவில் இந்தியர்கள் அதிகம் இல்லாத பகுதியில் இருக்கிறேன். விவாகரத்தாகி பல வருடம் ஆகிறது. இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மறுமணம் பற்றி நினைக்கவில்லை. குழந்தைகள் பெரியவர்களாகி விட்டதால் தனிமையாக இருக்கிறேன். எனக்கு மறுமணம் உண்டா? எப்பொழுது நல்ல கணவர் வருவார்?
பதில்.
(விருச்சிக லக்னம், ரிஷப ராசி, 1ல் சூரி, 5ல் குரு, 6ல் கேது, 7ல் சந், 8ல் செவ், 9ல் சனி, 11ல் சுக், 12ல் புத, ராகு, 19-11-1975 காலை 8-10 சென்னை)
லக்னாதிபதி எட்டில் மறைந்தாலும், லக்னத்தை குருவும், பௌர்ணமி சந்திரனும் பார்த்து கேந்திரத்தில் பௌர்ணமி யோகமும் அமைந்த யோக ஜாதகம் உங்களுடையது. உங்கள் கோபத்தால் நீங்கள் இழந்தது ஏராளமானதாக இருக்கும். 8, 12ம் அதிபதிகள் பரிவர்த்தனை ஆகி லக்னாதிபதி 8-ல் இருப்பதால் நிரந்தரமாக வெளிநாட்டிலேயே இருப்பீர்கள். சுக்கிரன் நீசமாகி பின்னர் பரிவர்த்தனை பெற்று, சனி, செவ்வாய் பார்வையும் அடைந்து, குருவின் பார்வையையும் பெற்றிருக்கிறார்.
தற்போது அஷ்டமச்சனி நடப்பதால் கடந்த சில மாதங்களாக மிகுந்த தனிமை உணர்வில் எதிர்காலம் பற்றிய குழப்பத்தில் இருப்பீர்கள். ஏழாம் இடத்தை விட பதினொன்றாம் அதிபதி, பதினொன்றாம் இடம் ஆகியவை வலுப்பெற்றால் இரண்டு திருமணம் நடக்க வேண்டும் என்கின்ற விதிப்படி, அடுத்து வரும் குரு தசை, சுக்கிர புக்தியில் 2022 ஆம் ஆண்டு உங்களுக்கு இன்னொரு திருமணம் நடக்கும். அந்த வாழ்க்கை நன்றாகவே நீடித்தும் இருக்கும். வாழ்த்துக்கள்.
க. பிச்சை, மதுரை.
கேள்வி.
மகன் பிளஸ் டூ வரை நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்றான். கல்லூரியில் சேர்த்ததில் இருந்து வாழ்க்கை தடம் புரண்டு விட்டது. மூன்று கல்லூரிகளில் சேர்த்தும் படிக்கவில்லை. காதல் மோகம், கெட்ட நண்பர்கள் தொடர்பு ஏற்பட்டு தவறான வழியில் சென்று படிப்பும் இல்லாமல், வாழ்வதற்கு சம்பாத்தியமும் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறான். வெளிநாடு செல்ல மறுக்கிறான். வேலைக்கும் செல்ல மாட்டேன் என்கிறான். உண்மையும் பேசுவது இல்லை. என்ன செய்வதென்றே புரியவில்லை. இவன் தொழில் செய்ய வாய்ப்பு இருக்கிறதா? வெளிநாடு செல்வாரா? திருமண யோகம் உண்டா? வீட்டை விட்டு வெளியில் போகச் சொல்லி விடலாமா? வேதனையில் இருக்கும் வயதான தாய் தந்தைக்கு நல்ல தகவல் தாருங்கள்.
பதில்.
(துலாம் லக்னம், கும்ப ராசி, 2ல் புத, சனி, கேது, 3ல் சூரி, குரு, 4ல் சுக், 5ல் சந், செவ், 8ல் ராகு, 28-12-1984, அதிகாலை 3-19 ஒட்டன்சத்திரம்)
சிறுவயதில் வரும் பாபத்துவ ராகுவின் தசை அல்லது புக்தி படிப்பின் மீது நாட்டமின்மை, கல்வித் தடையை ஏற்படுத்தும் என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். மகனுக்கு பிளஸ் டூ பருவத்தில் செவ்வாய், சனி இரண்டின் பார்வை பெற்று, சுக்கிரனின் எட்டாம் வீட்டில் அமர்ந்த ராகு புக்தி முதல், கல்லூரிப் பருவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வாழ்க்கை தொலைந்து போக ஆரம்பித்திருக்கும். அதன் பிறகு சரியான பருவத்தில் ஆரம்பித்த சனி தசையும், செவ்வாயோடு பரிவர்த்தனையாகி, செவ்வாயின் வீட்டில் அமர்ந்து, அம்சத்திலும் பாபத்துவம் பெற்று முழுக்க வலுவிழந்த நிலையில் இருப்பதால் மகனுக்கு 40 வயது வரை எந்த நல்லதும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. இரண்டில் அதிகமான பாபர்கள் இருப்பதால் பொய் பேசுவார்.
அடுத்து நடக்க இருக்கும் புதன் தசை முதல் அவரிடம் மாற்றம் தெரியும். அதுவரை ஒன்றும் செய்ய இயலாது. லக்னாதிபதி திக்பலமாக இருப்பதால் அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டீர்கள். திட்டிக் கொண்டே எப்படியாவது சோறு போட்டு விடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பில்லை. வரவருக்கும் சனி தசை, ராகு புக்தி முதல் அவரிடம் மாற்றம் தெரியும். இது போன்ற ஜாதகங்களைத்தான் முன் ஜென்ம கர்ம வினை என்று ஜோதிடம் சொல்கிறது. மகனின் 40 வயதிற்கு பிறகு மாற்றம் தெரியும். அதுவரை அவரைப் பற்றி நல்லதாகச் சொல்ல ஒன்றுமில்லை. வாழ்த்துக்கள்.
ரா. வெள்ளிங்கிரி, கோவை- 21
கேள்வி.
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் வெகு நாட்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. இருவரின் ஜாதகப்படி திருமணம் நடக்குமா அல்லது தோஷங்கள் ஏதேனும் உள்ளதா? நிறைய இடங்களில் ஜோசியம் பார்த்து எந்த பயனும் இல்லை. தாய் தந்தை எங்களுக்கும் வயதாகி விட்டது. இளைய மகனுக்கு சொந்தத் தொழில் ஏற்றதா அடிமை வேலை ஏற்றதா?
பதில்.
(அண்ணன் 26-5-1968 காலை 5- 58 கோவை, தம்பி 19-10- 1975 இரவு 7-53 கோவை)
மூத்த மகனுக்கு லக்னத்திலேயே லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருந்தாலும், அஸ்தமனமாகி, செவ்வாயுடன் இணைந்து, கடும் பாபத்துவம் பெற்ற சனியின் பார்வையும் பெற்று, 57 வயது வரை தசா-புக்திகளும் ஒத்துழைக்காத கடுமையான அவ யோக ஜாதகம். இதுபோன்ற அமைப்பில் ஜாதகரே தன்னம்பிக்கை இழந்து வாழ்க்கையின் மீது பிடிப்பின்றித்தான் இருப்பார்.
இளைய மகனுக்கு ஜாதகம் வலுவாகவே இருக்கிறது. அவரது ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை செவ்வாய், சனி பார்த்து வலுவிழந்து இருந்தாலும், லக்னாதிபதி பரிவர்த்தனையாகி திக்பலமும் பெற்றிருப்பதால் திருமண வாழ்க்கை உண்டு. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு இளையவருக்கு திருமணம் நடக்கும். இளைய மகன் சொந்தத் தொழில் செய்யலாம்.
ஈ.டி. நடராஜன். சென்னை- 11,
கேள்வி.
எனது ஜாதகத்தை பார்த்ததுமே என் பிரச்சினைகள் தங்களுக்கு புரிந்திருக்கும். பிள்ளைகளின் படிப்பிற்காகவும் வீட்டுத் தேவைகளுக்காகவும் வங்கி மற்றும் உறவினரிடம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி இருக்கிறேன். சொந்த வீடு இல்லாததாலும், வங்கி ஊழியர்கள் மற்றும் உறவினர்களாலும் மிகுந்த தொல்லைகளும், வெறுப்பும் அடைந்து குடும்பமே மன உளைச்சலில் இருக்கிறோம். சொந்த வீடு அமையுமா? எப்போது? கடன் எப்போது தீரும்?
பதில்.
சொந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சந்தோஷமாக இருந்து விடுவதில்லை. வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டு கொண்டும் இல்லை. சந்தோஷமும் துக்கமும் அவரவர்களுடைய கர்ம வினைகளை பொறுத்ததே தவிர, இருக்கும் இடத்தைப் பொறுத்தது அல்ல. லட்சக்கணக்கில் சம்பாதித்து சொந்த வீடு இன்றி வாடகை வீட்டிலேயே கடைசிவரை காலம் தள்ளுபவர்கள் இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு கடன் வாங்கி சொந்த வீட்டை கட்டி விட்டு அல்லது வாங்கிவிட்டு வெளித்தோற்றத்தில் ஆடம்பரமாகவும் வீட்டுக் கடனை கட்டுவதற்காக சிக்கனமாக ரசம் சோறு மட்டும் வீட்டுக்குள்ளே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள்.
ஒரு மனிதனின் சொந்த வீடு கனவு என்பது அவரது ஜாதகத்தில் 4 ஆம் பாவகத்தையும், சுக்கிரனின் நிலையையும் பொறுத்தது. உங்களது ஜாதகப்படி சிம்ம லக்னமாகி, நான்காம் வீட்டில் நீச சந்திரன் மற்றும் சனி இருப்பதாலும், வீட்டுக்கு காரகனாகிய சுக்கிரன் ஆட்சி பெற்றாலும் ராகுவுடன் மிக நெருக்கமாகி பலவீனமானதாலும் உங்கள் பெயரில் சொந்த வீடு இருக்க வாய்ப்பு இல்லை. அதேநேரம் சுக்கிரன் ஆட்சி பெற்றதால் குழந்தைகளின் சம்பாத்தியத்தில் வீடு அமைந்து இறுதிக் காலத்தில் சொந்த வீட்டில் இருப்பீர்கள்.
விருச்சிக ராசி என்பதால் கடந்த சில ஆண்டுகளாக அதிகமான கடன் தொல்லைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் வம்பு, வழக்கு, அசிங்கம், கேவலம் போன்றவற்றை அனுபவித்திருப்பீர்கள். பணம் என்றால் என்னவென்று உணர்ந்த காலகட்டங்கள் உங்களின் கடைசி ஐந்து வருடங்கள். வரும் நவம்பர் மாதத்திற்கு பிறகு உங்களுடைய அனைத்துத் தொல்லைகளும் விலக இருப்பதால் இனிமேல் ஓரளவிற்கு வருமானம் வந்து கடன்களை அடைக்க முடியும். அடுத்த வருடம் முதல் நிம்மதியாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
(25.06.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment