ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
ஒரு வாசகர், மதுரை.
கேள்வி.
குருஜி அவர்களே... நானும் மனைவியும் விரக்தியின் விளிம்பில், வாழ்வின் ஓரத்திலிருந்து இந்தக் கடிதத்தை சொல்ல முடியாத அவமானங்களுக்கு மத்தியில் எழுதுகிறோம். எங்களுடைய ஒரே மகளின் போக்கு பத்தாவதில் இருந்து மாறி விட்டது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பறையிலேயே இன்னொரு மாணவனுக்கு முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்தாள் என்ற காரணத்திற்காக, அந்தப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுத மறுக்கப்பட்டு, வீட்டிலேயே படித்து பாசாகி, பிளஸ் 1 வேறு பெண்கள் பள்ளியில் சேர்த்தோம். மறுபடியும் எங்களுக்கு இதே போன்ற புகார்கள் தொடர்ந்தன. அவளை வெளியில் அனுப்பவே பயமாக இருக்கிறது. எங்கள் மகள் ஆண்களைப் பார்க்கும் பார்வையே வேறு மாதிரியாக இருக்கிறது. பேப்பர் போடும் பையன் முதல் வாட்ச்மேன் கிழவன் வரை வீட்டிற்குள் அவளை கண்களால் தேடும் காட்சி எங்களை கொல்லுகிறது. அவளும் ஆண்களிடம் அப்படித்தான் நடந்து கொள்கிறாள். கடந்த நான்கு வருடங்களாக இவளால் பட்ட அவமானத்திற்கு நாங்கள் 40 முறை செத்துப் போயிருக்க வேண்டும். எங்கள் பகுதியில் இவள் வேறுவகையில் பிரபலமாகி விட்டாள். இத்தனைக்கும் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று பக்கத்து வீட்டிற்கு தெரியாத அளவிற்கு அமைதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர்கள் நாங்கள். எத்தனையோ அறிவுரை சொல்லிப் பார்த்து விட்டோம். எங்கள் குடும்பத்தின் அனைத்துப் பெரியவர்களும் வீட்டிற்கு வந்து இவளிடம் அன்பாகவும், கெஞ்சியும் பார்த்து விட்டார்கள். அவளிடம் மாற்றம் எதுவும் இல்லை. மகளால் எங்கள் மானம் காற்றில் பறக்கிறது. நேற்று இரவு பனிரெண்டு மணிக்கு திடீரென இவளை காணவில்லை என்று பதைபதைத்து எழுந்து தேடினால், வீட்டிற்கு பின்னால் பக்கத்தில் கட்டிட சித்தாள் வேலை செய்யும் தமிழ் தெரியாத பீகார் வாலிபனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். என்ன பாவம் செய்தோம் என்று தெரியவில்லை, என்ன செய்வது என்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று மட்டும் தெரிகிறது. அது என்ன என்பதை நீங்கள் மட்டும்தான் சொல்ல முடியும். எங்கள் மூவரின் ஜாதகப்படி எங்களின் ஆயுள் எப்படி? இதற்கு மேல் சொல்ல எங்களுக்கு வார்த்தைகள் இல்லை. குருவின் பாதம் சரணடைகிறேன்.
பதில்.
(துலாம் லக்னம், சிம்ம ராசி, 1ல் செவ், 4ல் கேது, 5ல் புத, 6ல் சூரி, குரு, 7ல் சுக், சனி, 10ல் ராகு, 28-3-1999 இரவு 8-35 மதுரை)
மகளுக்கு சுக்கிரனின் துலாம் லக்னமாகி, லக்னாதிபதி சுக்கிரன் நீச சனியுடன் 10 டிகிரிக்குள் ஏழாமிடத்தில் இணைந்து, அம்சத்தில் நீசமாகி, சுக்கிர தசையும் நான்கு வயதிலிருந்து 24 வயதுவரை நடக்கும் ஜாதகம். பலன் சொல்வதற்கு சற்று சங்கடப்படவேண்டிய ஒரு ஜாதகம்தான்.
மகளின் ஜாதகத்தை பார்த்த உடனேயே நீங்கள்படும் அவஸ்தை புரிகிறது. கடிதத்தில் சொன்னதை விட இன்னும் சொல்லாமல் விட்ட விஷயங்களும் தெரிகின்றது. அதைவிட மேலாக கணவனுக்கு மேஷராசி, மனைவிக்கு விருச்சிகராசி என்பதால் கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் பட்டிருக்கும் அவஸ்தையும் தெள்ளத் தெளிவானது.
காமத்திற்கு காரகனான சுக்கிரனின் தசை உடலும், மனமும் காமத்திற்கு தயாராகாத சிறுவயதில் வரக்கூடாது. இதற்காகத்தான் “குட்டிச் சுக்கிரன் கொட்டிக் கவிழ்க்கும், குட்டிச் சுக்கிரன் குடியைக் கெடுக்கும்” என்பது போன்ற பழமொழிகள் ஜோதிடர்களால் சொல்லப்பட்டன.
எந்த ஒரு கிரகமும் பாபத்துவ அமைப்பில் இருக்கும் போது, தன்னுடைய கீழ்நிலை காரகத்துவங்களை மட்டுமே தரும். அதன்படி இங்கே சுக்கிரன், செவ்வாயுடன் பரிவர்த்தனையாகி, காமத்தைக் குறிக்கும் ஏழாமிடத்தில், நீச சனியுடன் நெருங்கி இணைந்து, செவ்வாயின் பார்வையைப் பெற்று, அம்சத்திலும் நீசமாகி, சொந்த சாரத்தில் நின்று தசை நடத்துகிறார். 14 வயது முதல் உங்கள் மகளின் எண்ணங்கள் அனைத்தும் சுக்கிரனால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவள் மனம் முழுக்க தற்போது பாலியல் உணர்வுகளால் நிரம்பி இருக்கிறது என்பதே உண்மை.
இது போன்ற சூழ்நிலைகளில் ஒருவருக்கு சிறுவயதிலேயே முரண்பட்ட விதத்தில், முரண்பாடானவர்களுடன் காமம் அறிமுகப்படுத்தப் பட்டு விடும். அது உங்கள் மகளுக்கும் நடந்திருக்கிறது. 16 வயதில் சுக்கிர தசையில், குரு புக்தி நடக்கும் பொழுது அவளுக்கு நடக்கக் கூடாத விஷயங்கள் நடந்திருக்கின்றன. தெரியக் கூடாதவைகள் தெரிந்திருக்கின்றன.
தற்போது சுக்கிர தசையில், நீச சனியின் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. அவளது வாழ்க்கையில் இதுவே மிகக் கடுமையாக மனம் அலைபாயும் காலகட்டம். நல்லவேளையாக சனி புக்தி முடியும் நிலையில் இருக்கிறது. வரும் ஜூன் மாதம் நான்காம் தேதியோடு சனி புக்தி முடிகிறது. அதுவரை மனதை தளர விடாதீர்கள். பொறுமையாக இருங்கள். எதற்கும் அவசரப்படாதீர்கள். பரம்பொருள் என்ற ஒன்று இருக்கிறது. நடக்கும் அனைத்திற்கும் அவனுக்கு மட்டுமே காரணம் தெரியும்.
மூவருக்கும் ஆயுள் எப்படி என்று நீங்கள் கேட்கும் கேள்வியில் இருந்து உங்களுடைய மன ஓட்டம் எனக்குப் புரிகிறது. தவறான முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். மகளிடம் வரும் ஜூன் மாதத்திற்கு பிறகு, நீச சனி புக்தி முடிந்ததும் நிச்சயமாக மாற்றம் தெரியும். அதுவரை அவள் பாபத்துவ அமைப்பில் உள்ள சனியின் பிடியில் இருப்பதால், என்ன செய்கிறோம் தான் என்று அறியாத நிலையிலேயே சில விஷயங்களைச் செய்து கொண்டிருப்பாள். அவசரப்பட்டு விடாதீர்கள். அனைத்தையும் அவனிடம் விட்டு விடுங்கள்.
எல்லாவற்றையும்விட மேலாக உங்களுக்கு மேஷம், மனைவிக்கு விருச்சிகம் என்ற அமைப்பில், பெற்றவர்களுக்கு ஏழரை, அஷ்டமச்சனி முடிந்துவிட்டதால் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து உங்கள் மனநிலை நன்றாக வேண்டும் என்கின்ற விதிப்படியே, மகளிடம் நிச்சயமாக மாற்றம் தெரியும்.
உடனடியாக வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு மகளை அழைத்துச் சென்று இரண்டரை மணி நேரத்திற்கு குறையாமல் அந்தக் கோயிலுக்குள் இருக்கச் செய்யுங்கள். அடுத்து ஒரு வெள்ளிக்கிழமை கும்பகோணம் அருகில் உள்ள கஞ்சனூர் அழைத்துச் சென்று வழிபடுங்கள். வரும் வெள்ளிக்கிழமை இரவு படுக்கும் பொழுது சுக்கிரனின் தானியமான மொச்சையை சிறிதளவு பொட்டலம் கட்டி மகளின் தலைக்கடியில் வைத்து 20 வாரம் தொடர்ந்து படுக்க வைத்து, கடைசி வாரம் இருபதையும் மொத்தமாக ஒரே பொட்டலமாக்கி, ஓடும் நீரில் போடுங்கள்.
மிக மிக முக்கியமாக ஒரு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சுக்கிர ஹோரையில், ஒரு வெள்ளைநிற தட்டில், ஒரு தூய வெள்ளை நிற பேன்சி டிரஸ், இரண்டு முழம் அல்லிப்பூ, ஒரு வெள்ளிக்காசு, அவளது இரு கை நிறைய வெள்ளை மொச்சை, கொஞ்சம் கெட்டித் தயிர், ஒரு சென்ட் பாட்டில் வைத்து ஒரு 14 அல்லது 15 வயது கன்னிப் பெண்ணிற்கு அவளது கையால் தானம் கொடுக்க செய்யுங்கள். இந்த பரிகாரங்களுக்கு பிறகு அவளிடம் நிச்சயம் மாற்றம் தெரியும்.
சனி புக்தி முடியப் போவதாலும், பெற்றவர்களான உங்களுக்கு ஏழரை, அஷ்டமச் சனி முடிந்து விட்டதாலும் மகளின் போக்கில் மாற்றம் தெரியும். பரம்பொருள் உங்களை கைவிடவே மாட்டார். கஷ்டங்கள் அனைத்தும் தீரப் போகின்ற ஒரு நிலையில், மகளிடம் மாற்றம் வரப் போகும் நேரத்தில் தவறான முடிவு எதுவும் எடுத்து விடாதீர்கள். மூவருமே தீர்க்காயுளுடன், கடந்தவைகளை போல அல்லாமல், எதிர்காலத்தில் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
No comments :
Post a Comment