கேள்வி – பதில்கள் (19-3-19)
என். நாகராஜன், திருச்சி-602601
கேள்வி.
கலங்கிய உள்ளங்களை தெளிந்த நீரோடையாக்கும் அய்யாவிற்கு வணக்கம். எனது தாத்தாவும், அப்பாவும் நடத்திவந்த மளிகை கடையை நடத்தி வருகிறேன். காலஞ்சென்ற அம்மா அப்பா போட்டோவை கடையில் வைத்து தினமும் நான்கு வேளை தீபமேற்றி வழிபடுகிறேன். ஒருநாள் ஒரு சிட்டுக்குருவியும், மறுநாள் இன்னொரு சிட்டுக்குருவியும் எனது தாய், தந்தை படத்தில் வந்து அமர்ந்து எனக்கு காட்சியளித்து இன்றுவரை என் கடைக்குள்ளேயே கூடுகட்டி இருந்து வருகிறது. மறைந்தவர்கள் மறுபிறவி எடுத்து வருவார்கள் என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் உண்மையிலேயே பார்த்துவிட்டேன். மெய்சிலிர்த்தும் விட்டேன். இந்த சம்பவம் தினத்தந்தி மற்றும் ஒரு மாலை நாளிதழுக்கு தெரிந்து எனது பேட்டியையும் வெளியிட்டிருக்கிறார்கள். கடை வாடிக்கையாளர்களும் வந்தவுடன் உன் தாயும், தந்தையும் நலமாக இருக்கிறார்களா என்று கேட்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அன்றைய முதல்வர் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்தில் நடந்த விழாவில் எனக்கு சிட்டுக்குருவிகளின் மைந்தன் என்று பட்டம் வழங்கி ஆசீர்வதித்தார். பகுத்தறிவாளர்கள் என்று சொல்லும் சிலர் இது ஒரு மூட நம்பிக்கை, இந்தக் குருவிகளை உன் தாய், தகப்பன் என்று சொல்வது மூட நம்பிக்கை, சாதாரண குருவிகள்தான், இதற்குப் போய் எவ்வளவு ஆடம்பரமா என்று கேட்டு என்னை சங்கடப்படுத்துகிறார்கள். இதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பதில்
காலம்காலமாக பகுத்தறிவிற்கும் மூடநம்பிக்கைக்கும் இடையில் இதுபோன்ற விவாதங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. வேதஜோதிடமே முற்பிறவியிலும், அதன் கர்மாவிலும்தான் அடங்கியிருக்கிறது. சென்ற பிறவியில் நீங்கள் செய்த பாவ. புண்ணியங்களின் தொடர்ச்சியே இந்தப் பிறவி என்பதை ஜோதிடம் சந்தேகத்திற்கிடமின்றி வலியுறுத்துகிறது.
சென்ற பிறவியில் நாம் என்னவாக இருந்தோம் எதைச் செய்தோம் என்பதை உணர்ந்து கொள்வதற்கும் ஜோதிடத்தில் சில வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பைக் கொண்டுதான் பிதுர்தோஷம், பெண்சாபம் போன்ற விஷயங்கள் ஜோதிடர்களால் சொல்லப்படுகின்றன. அதே நேரத்தில் சென்ற பிறவியில் மனிதனாகப் பிறந்த ஒருவர், இப்பிறவியில் வேறொரு ஜீவனாக பிறப்பாரா அல்லது பிறந்திருக்கிறாரா என்றால் அதற்கு ஆன்மீகம்தான் பதில் சொல்ல வேண்டும். சிந்திக்கத் தெரிந்த இன்ப, துன்பங்களை உணரத் தெரிந்த, அழவும், சிரிக்கவும் தெரிந்த ஆறறிவு உயிருக்கு மட்டுமே ஜோதிடம். ஐந்தறிவு ஜீவன்களுக்கு இல்லை.
எல்லாக் காலங்களிலும், எல்லா விஷயங்களுக்கும் மனிதனால் விடை காண முடியாது. உலகின் ஏனைய பகுதிகளை விட, நம்முடைய இந்தியப் பகுதியில் மனிதன் முதலில் தோன்றி நாகரிகம் அடைந்து, செம்மைப்பட்டு சிந்திக்கவும் ஆரம்பித்தால்தான் இதற்கான பதில் நம்முடைய மேலான மதத்தில் இருக்கிறது.
ஒருவர் இப்போது இங்கே இருக்கிறாரா அல்லது இருந்தாரா, இருந்தார் என்பது என்ன, இப்போது எங்கே இருக்கிறார், ஒருவரின் இருப்பு என்பது என்ன என்பதற்கான வேறொரு பரிமாண விளக்கங்களை பகுத்தறிவாளர்கள் நமது புராணங்களில் உள்ள எமனுக்கும் நசிகேதனுக்கும் இடையே நடந்த உரையாடல்களை படித்துப் பார்க்கட்டும். கங்கைக் கரையில் எத்தகைய சிந்தனாவாதிகள் இருந்திருக்கிறார்கள் என்பது தெரியவரும்.
ஒரு மனிதன் நாளொன்றுக்கு சுவாசிக்கும் 21600 சுவாசங்களை வைத்தே பராசர மகரிஷி தசாபுக்தி வருடங்களை நூற்றியிருபதாக்கி அதனுடைய உட்பிரிவுகளையும் பிரித்திருக்கிறார். ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போது, அதற்கு உயிர் இருந்தாலும் அது நிச்சலனமாக அது யாரென்பதை அறியாமல்தான் இருக்கிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து சுவாசிக்க ஆரம்பிக்கும் முதல் நொடியில் இருந்துதான் அதனுடைய கர்மா ஆரம்பிப்பதாக ஜோதிடம் சொல்லுகிறது.
அதாவது சுவாசத்தின் வழியாக, உயிர்கள் அடங்கிய பூமியைச் சுற்றி எங்கும் வியாபித்திருக்கும் மூச்சுக்காற்றின் வழியாக, ஆத்மா எனப்படும் அதனுடைய கர்மா உள்ளே நுழைந்த அந்த வினாடி முதல் குழந்தையின் முற்பிறவி கர்மாக்கள் செயல்பட ஆரம்பித்து, இப்பிறவியின் நன்மை, தீமைகளை அக்குழந்தை அனுபவிக்கிறது என்று ஜோதிடம் சொல்லுகிறது.
உங்கள் கடையில் உங்களுடன் வசிப்பவர்கள் உங்கள் தாய், தந்தையர்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இறந்த பின்னும் தாய், தந்தையரை அருகில் வைத்திருக்கும் பாக்கியம் பெற்ற நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிதான். உங்கள் ஜாதகத்தையும் அனுப்பி வையுங்கள். எப்படி இருக்கிறது என்று பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.
கே. சதீஷ், குன்னூர்.
கேள்வி:
நானும், ஒரு பெண்ணும் காதலித்து வருகிறோம். பெற்றோர்களும் சம்மதம் சொல்லி விட்டார்கள். பொருத்தம் பார்த்த போது எங்களுக்கு மூன்று பொருத்தம் மட்டுமே உள்ளது. எனக்கு களத்திர தோஷம் உள்ளது. பெண்ணிற்கு நாக தோஷம் உள்ளது. இதனால் ஒருவரின் உயிருக்கு ஆபத்து என்று ஜோதிடர்கள் பல்வேறு கருத்துகளை சொல்கிறார்கள். இதனால் எங்களது பெற்றோர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு தரும் தாங்கள் எனது வாழ்க்கைக்கும் ஒரு தீர்வு தரும்படி வேண்டுகிறேன்.
பதில்:
காதல் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரும் சம்மதித்த பிறகு பொருத்தம் பார்க்கவே தேவை இல்லை. உடல் கொடுத்த தாயும், தகப்பனும் ஏற்றுச் செய்யும் எதுவும் நமக்கு நன்மையாகவே முடியும். பெற்றோர்கள் சந்தோஷமாக ஏற்று கொள்ளும் போது அங்கு தவறுகள் நடக்க வாய்ப்புகள் இல்லை. நாகதோஷம் இருப்பதால் உயிருக்கு ஆபத்து என்றெல்லாம் ஜோதிடத்தில் சொல்லப்படவில்லை. உனது ஜாதகப்படி ஏழாமிடத்தை செவ்வாய், சனி இருவரும் பார்த்து ராசிக்கு எட்டில் சனி இருப்பது காதல், கலப்புத் திருமண அமைப்பு.
வரும் ஏப்ரலில் ஆரம்பிக்கும் குருதசையில் உனக்கு தகப்பனாகும் அமைப்பு வந்து விட்டதால் தாராளமாக இந்த பெண்ணை திருமணம் செய்யலாம். இருவருக்குமே பதினொன்றாம் இடம் வலுவிழந்து யோக தசைகள் நடக்க இருப்பதால் இரண்டு திருமண அமைப்பு இல்லை. திருமணத்திற்கு பிறகு மனைவியால் உனக்கு யோகம் உண்டாகி, குழந்தை பிறந்ததிற்கு பிறகு நன்றாக இருப்பாய். வாழ்த்துக்கள்.
No comments :
Post a Comment