Friday, March 22, 2019

கடகம்: 2019 - விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

கடகம்: 

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

சென்ற ஆண்டு கடக ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். நல்ல கோட்சார கிரக நிலைகள் இருந்தும் பெரும்பான்மையான கடக ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன. 

தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான விகாரி ஆண்டில் எதிர்மறை பலன்கள் அனைத்தும் நீங்கி, இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும். எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம். 

பிறக்கும் விகாரி வருடத்தில் கடகத்தினர் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். 

நல்ல வேலை கிடைக்காத இளையவர்களுக்கு பொருத்தமான வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். 

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு கிடைக்கும். உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். 

சுயதொழில் புரிபவர்களுக்கு தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். 

விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். 

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். 

பொதுவாக கடக ராசிக்காரர்கள் நல்லவர்களாக, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். சுயநலம் என்பதே உங்களிடம் இருக்காது. வீட்டை விட ஊருக்கு பாடுபடுவீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. 

கணவன் மனைவி உறவில் கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். கூட்டுக் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. 

குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். 

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும். 

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். தேர்தலில் வெற்றி கிடைக்கும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும். 

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள். 

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். 

உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். 

உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும். 

தவிர்க்கவியலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு விசா கிடைக்கும். 

வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். வேற்று மதத்தினர் உதவுவார்கள். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். 

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். 

சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். 

ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். 

கடகத்தினர் சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். 

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். 

சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும். 

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும். 

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. 

பொதுவில் கடக ராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள ஆண்டு இது.

தொடர்பு எண்கள்செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment