Friday, March 22, 2019

மிதுனம்: 2019 - விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மிதுனம்: 

மிதுன ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற விகாரி தமிழ்ப் புத்தாண்டு, ஆரம்ப மாதங்களில் நிதானமான நன்மைகளைத் தந்தாலும் பிற்பகுதி முழுவதும் நல்ல பலன்களை செய்யும் வருடமாக இருக்கும். 

வருட ஆரம்பத்தில் ராஜ கிரகங்களான குரு, சனி ஆகியோர் உங்களுக்கு நன்மைகளைத் தர முடியாத அமைப்பில் இருக்கிறார்கள். ஆனால் ராசிநாதன் புதன் மற்றும் யோகாதிபதியான சுக்கிரன் இருவரும் வலுவாக இருப்பது வேலை, தொழில், அமைப்புகளில் நன்மைகளைத் தரும் என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. 

புத்தாண்டின் மிக முக்கிய பெயர்ச்சியாக வரும் நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் குருபகவான் மாறுவதால் குருவின் பார்வை ராசிக்கு கிடைத்து அதன் பிறகு நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்க துவங்கும். 

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் வாழ்க்கையை செட்டிலாக்கும் அமைப்பு உருவாவதால் திருமணம், நல்ல வேலை வாய்ப்பு, குழந்தை பாக்கியம், நினைத்த காரியம் கைக்கூடுதல், தொட்டதும் துலங்குதல், நிரந்தர வருமானம் கிடைத்தல் போன்ற பலன்கள் அப்போது நடக்கும். 

எனவே வருட ஆரம்பத்தில் உங்களுக்கு கிரகங்கள் தரும் பலன்கள் சுமாராக இருந்தாலும் வருடத்தின் பிற்பகுதியில் இருந்து நல்ல பண வரவுகளை தரக்கூடிய அமைப்புகள் இருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் எதற்கும் கலங்க தேவையில்லாத வருடமாக இந்த விகாரி தமிழ்ப் புது வருடம் இருக்கும். 

பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். வரும் தேர்தலில் வெற்றி உண்டு. 

உங்கள் ராசியின் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்து இளைய பருவத்தினருக்கு குடும்பம் அமைய விடாமலும், அவர்களது நிதிநிலை உயர்வைத் தடுத்துக் கொண்டும் இருந்த ராகுபகவான் சில வாரங்களுக்கு முன் மாறி உங்களின் ஜென்ம ராசிக்கு வந்திருப்பது இதுவரை குடும்ப விஷயத்தில் நடந்து வந்த சாதகமற்ற அமைப்புகளை மாற்றுகின்ற ஒரு பெயர்ச்சிதான். 

சமீபத்தில் நடந்த ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு இதுவரை குடும்பம் அமையாமல் இருந்து மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை அமைந்து குடும்பஸ்தனாவீர்கள். திருமணம் தாமதமாகி வந்த இளையவர்களுக்கு கல்யாணம் கூடி வரும். இந்த அமைப்பின் மூலம் இதுவரை வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி போன்றவற்றில் ஆதாயங்களை எதிர்பார்த்திருந்த உங்களில் சிலருக்கு நன்மைகள் உண்டு. சிலர் தூர இடங்களுக்குச் செல்வீர்கள். 

பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும். 

மிதுன ராசி இளம் பருவத்தினருக்கு வருடப் பிற்பகுதியில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் இருக்கும். இன்னும் சிலர் வருட ஆரம்பத்திலேயே எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்தித்து நவம்பர் மாதத்திற்கு பிறகு அவரை வாழ்க்கையில் இணைத்துக் கொள்வீர்கள். இந்த வருடம் அனைத்து மிதுனத்தினருக்கும் பொருளாதார மேன்மைகளும், பணத்தட்டுப்பாடு இல்லாத நிலைமையும் இருக்கும் என்பது உறுதி. 

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். 

உங்களில் சிலருக்கு மறைமுகமான வகைகளில் பணவரவு இருக்கும். வாக்குறுதிகளை காப்பாற்ற இயலும். கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்த முடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தால் நிறைவேற்றுவீர்கள். 

நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நல்லசெய்திகள் இருக்கும். குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். 

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் மூலம் பொருளாதார வசதிகள், ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து அனைத்தும் சாதகமாகும். 

பெண்களுக்கு நகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலி பாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். 

சொந்தத்தொழில் செய்பவர்கள் தொழில்அதிபர்கள் வியாபாரிகள் ஆகியவர்களுக்கு நல்ல நேரம் இது. சில தொழில்முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். 

வியாபாரிகள், விவசாயிகள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும். பூர்வீக சொத்து விஷயத்தில் பாகப்பிரிவினை செய்வதற்கு இருந்து வந்த தடைகள் மாறி சொத்து விஷயங்களில் அனைத்தும் நல்ல படியாக நடைபெறும். 

நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். 

வேலையில் இருப்பவர்களுக்கு தள்ளிப் போயிருந்த பதவிஉயர்வு சம்பள உயர்வு ஆகியவை தாமதமின்றி கிடைக்கும். எல்லாவகையிலும் வருமானம் நன்றாக இருக்கும். ஏழில் சனி இருப்பதால் தேவையற்ற விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று தேவையற்ற விரோதங்களை சம்பாதித்து கொள்வீர்கள் எனபதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை. 

மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் குறுகிய கால பயணமாக வெளிநாடு சென்று திரும்புவார்கள். 

என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆனாலும் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனால் வீண் செலவு செய்வதை தவிருங்கள். 

கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். 

யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். 

பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது நல்லவை நடக்கும் காலமாகும். கலைத்துறையினர் நல்ல வாய்ப்புகளைக் காண்பீர்கள். 

தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள். 

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும். 

எப்படிப் பார்த்தாலும் பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு மிதுன ராசிக்கு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த வருடம் நடக்கும்.

தொடர்பு எண்கள்செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment