தனுசு:
(மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
தனுசு ராசிக்கு நன்மைகளும் தீமைகளும் கலந்த ஒரு புது வருடமாக இந்த விகாரி வருடம் இருக்கும். குறிப்பாக சொல்லப்போனால் இளைஞர்களுக்கு குறைகளைத் தரும் ஆண்டுதான் இது. ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு சிறப்புக்கள் இருக்கும்.
தனுசுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. சனிபகவான் உங்களின் ராசியில் அமர்ந்து ஜென்மச் சனி எனும் அமைப்பில் இருக்கிறார். ஜென்மச் சனி நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது ஜோதிட விதி.
சனி மட்டுமே ஒருவருக்கு அஷ்டம, ஏழரைச்சனி நேரங்களில் பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து பணத்தின் அருமையைப் புரிய வைக்கின்ற கிரகம் என்பதால் இந்த வருடம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் உங்களுக்கு விருப்பமற்ற, சாதகமற்ற நிலைகள் இருக்கும். எனவே தொழில் விஷயங்களில் நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.
“அரசனை நம்பி புருஷனை கைவிடும்” கதையாக சில விஷயங்கள் தனுசு ராசிக்கு இப்போது நடக்கும் என்பதால் முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினர் வேலை விஷயங்களில் நிதானமாகவும், அக்கறையுடனும் இருக்க வேண்டும்.
ராசியில் இருக்கும் சனி, பத்தாமிடத்தை பார்ப்பதால் உங்களுடைய தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை பறிக்க முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.
இந்த வருடத்தின் பலன்களை உங்களுக்கு இரண்டு பிரிவாக பிரித்துச் சொல்லுவேன். நவம்பரில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குரு, ராசிக்கு மாறி ஆட்சி நிலை பெற்று, சனியை சுபத்துவப் படுத்தப் போகிறார். அதுமுதல் உங்களின் கஷ்டங்கள் குறைய ஆரம்பித்துவிடும். எனவே நவம்பர் வரை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொண்டிருங்கள்.
தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்ப மாதங்களில் எந்த ஒரு விஷயத்திலும் நீங்கள் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். ஆயினும் பணத்தின் அருமையை உங்களுக்கு சனிதான் புரிய வைக்க வேண்டும் என்பதால் வெயிலில் இருக்கும் போதுதான் நிழலின் அருமை தெரியும் என்ற பழமொழியின்படி வருட ஆரம்பத்தில் இருந்தே பணத் தட்டுப்பாட்டினையும், பொருளாதாரச் சிக்கல்களையும் கடன் வாங்க வேண்டிய அளவிற்கு நிலைமையையும் உருவாக்குவார்.
எதிலும் அகலக்கால் வைக்காமல், புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும் போதும்.
பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசா,புக்திகள் நடக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும். ஆயினும் ஜென்மச்சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப் பொறுத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.
தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் கடன் கொடுப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.
உங்களில் சிலர் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் சங்கடங்கள் இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.
பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.
யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது.
பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும் எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.
நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.
நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.
பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும்.
சுபக்கிரகமான குருபகவான் ஆறாமிடத்தைப் பார்ப்பதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.
எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.
இளைஞர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. கிரகங்கள் சாதகமற்ற பலன்களை தரும் இதுபோன்ற நேரங்களில் வாழ்க்கையே கசப்பானதாகவும், உலகமே இருண்டு விட்டதாகவும் தோன்றினாலும் சிலகாலம் கழித்து மிகப் பெரிய நன்மைகள் நடக்கும் போது எல்லாம் அவன் செயல் என்பது நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது எல்லாம் நன்மைக்கே என்பது உங்களுக்கு புரியும்.
எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.
குறிப்பாக இளைய பருவத்தினர் காதல் என்பதை சற்றுத் தள்ளி வையுங்கள். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். இப்போது காதல் வந்தே தீரும். பின்னாலேயே கடுமையான மன அழுத்தமும் வரும்.
ஆரம்பத்தில் அனைத்தையும் கெடுத்து பிற்பகுதியில் வளமாக இருக்க வைக்கும் வருடமாக இது இருக்கும்.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment