Friday, March 22, 2019

விருச்சிகம்: 2019 - விகாரி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

விருச்சிகம்: 

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விகாரி தமிழ்ப் புத்தாண்டு மிகப் பெரிய விடியலைத் தரும் ஆண்டாக இருக்கும். வருடம் பிறந்த முதல் வாரத்தில் இருந்தே விருச்சிகத்தின் கஷ்டங்கள் குறைய ஆரம்பிக்கும். 

கடந்த காலங்களில் விருச்சிகம் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமல்ல. எல்லாம் விலகப் போகிறது. பாதி விலகியும் விட்டது. விருச்சிகத்தினர் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தையும், வழியையும் காட்டக் கூடிய தமிழ்ப் புத்தாண்டு இது. 

விருச்சிகத்திற்கு மட்டும் எப்படி பிரச்சினைகளைத் தரலாம் என்று சனிபகவான் தனியாக யோசித்து உங்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தார். ஒரு வீட்டில் இன்னொருவரும் விருச்சிகமாகவோ, மேஷமாகவோ இருந்தால் அந்த குடும்பம் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாது. 

போனதெல்லாம் போகட்டும். இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். 

வருடத்தின் ஆரம்ப நாளில் ராசிநாதன் செவ்வாய் வலுவாக இருப்பதும், சமீபத்திய ராகு கேது பெயர்ச்சியால் இரண்டில் இருக்கும் சனியுடன் கேது இணைந்து சனியின் குணம் மட்டுப்பட்டிருப்பதும், விருச்சிக ராசிக்கு நன்மைகளை தரக்கூடிய ஒரு அமைப்பு. விகாரி வருட முடிவில் உங்களுக்கு ஏழரைச்சனி முழுக்க விலகுவது அதைவிட நன்மைகளை செய்யக்கூடிய அமைப்பு. 

சனி விலகுவதால் சொந்த வாழ்வில் பிரச்சினைகள், நெருங்கிய உறவினர் மரணம், பிரிவு, வேலையிழப்பு, ஆரோக்கியக் குறைவு, வேலை, தொழில், பிரச்சினைகள், வழக்குகள், கடன் தொல்லைகள் போன்றவைகளால் நிம்மதி இன்றி இருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து அனைத்தும் விலகி சந்தோஷம் தரும் நிலைகள் உருவாகும். 

நவம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி கூட விருச்சிகத்திற்கு சாதகமான அமைப்பில்தான் இருக்கிறது. எனவே எப்படிப் பார்த்தாலும் விருச்சிக ராசியின் அனைத்துப் பிரச்னைகளையும், மன அழுத்தத்தையும் தீர்த்து, மற்றவர்களைப் போல சகஜமான வாழ்க்கைக்கு உங்களை வர வைக்கின்ற புது வருடமாக இது இருக்கும். 

வருடம் பிறந்ததிலிருந்தே உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்தவர்கள் இந்த வருடத்தில் இருந்து அவை நீங்கப் பெறுவீர்கள். புதிதாக தொழில், வியாபாரம் போன்றவைகளை ஆரம்பித்து லாபகரமாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்தில் இருந்து விடிவுகாலம் பிறந்து தொழில் நிலைமைகள் சீராகும். 

இதுவரை மனதில் இருந்துவந்த எதிர்மறைஎண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. இனம்புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். இதுவரை இருந்து வந்த கெட்ட விளைவுகள் இனி இருக்காது. 

உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படி நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள். வெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். 

பணவரவு மிகவும் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்லநேரம். எந்தக்காரியமும் அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். வரும் தேர்தலில் பெரிய வெற்றி கிடைக்கும். 

வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான சூழல்கள் இருக்கும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டும் இந்த வருடம் உண்டு. இந்த வருடம் உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் நல்ல நிலையில் இருக்கும். எதிலும் நிம்மதியற்ற சூழ்நிலையைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அனைத்தும் நல்லபடியாக மாறி ஒரு சந்தோஷமான சூழல் இருப்பதை உணர முடியும். 

எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை, தன்னுடைய திறமைக்கு ஏற்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை என்ற மனக்குறையில் இருந்தவர்கள் அவை நீங்கப்பெற்று ஒரு அதிர்ஷ்டமான காலத்தில் நுழைவீர்கள். சிலருக்கு தன்னம்பிக்கை கூடுதலாகும். 

மேம்போக்காகப் பார்க்கையில் விகாரி புத்தாண்டின் ஆரம்பத்தில் சில வாரங்களுக்கு முன் நடந்த ராகுகேதுப் பெயர்ச்சி சாதகமற்ற அமைப்பைக் கொடுப்பது போலத் தோன்றினாலும் ராகுபகவான் பிற்பகுதி முழுவதும் குருவின் பார்வையில் இருக்கப் போவதால் கெடுதல்களைச் செய்ய மாட்டார். 

அதேநேரத்தில் ராகு எட்டில் இருப்பதால் உங்களுக்கு தொழில் விஷயங்களில் அடிக்கடி தூர இடங்களுக்குப் பயணங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சிலருக்கு வெளிமாநில வாய்ப்புகளும், வடக்கு நோக்கிய விஷயங்களும் இருக்கும். 

ராகுகேதுக்களை அடுத்து நவம்பரில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல பலன்களை மட்டுமே தர இருக்கிறது. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வீண்செலவுகள் தடுக்கப்படும். விரயங்கள் நிற்கும். மருத்துவச் செலவுகளோ, கடன் தொல்லைகளோ இருக்காது. 

குருப்பெயர்ச்சியின் மூலம் இளைய பருவத்தினர் சிலருக்கு இதுவரை அமையாத திருமணம், புத்திரபாக்கியம், நிரந்தர வேலை, தொழில் பாக்கியங்கள் கிடைக்கும். மிக உன்னத பலனாக சொல்லப்போனால் ஒரு பத்து வயது குறைந்தது போன்ற உடல்திறனையும், புத்துணர்ச்சியையும் விருச்சிக ராசியினருக்கு இந்தப் புதுவருடம் கொடுக்கும் என்றால் அது மிகையாகாது. 

குறிப்பாக முப்பது வயதுக்களில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு இனிமேல் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் நல்லபடியாக அமைந்து இந்த வருடத்திலிருந்து ஒரு நிரந்தர வருமானம் வரத்தொடங்கும். இனிமேல் பணத்தட்டுப்பாடு இருக்காது. 

திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்லபடியாக திருமணம் கூடி வரும். குறிப்பிட்ட சிலர் விரும்பிய வாழ்க்கைத்துணையை அடைவீர்கள். வீட்டிற்குப் பயந்து காதலை மனதிற்குள் பூட்டி ஒளித்து வைத்திருந்தவர்கள் தைரியம் வந்து பெற்றோரிடம் சொல்லி அவர்களின் சம்மதத்தையும் பெறுவீர்கள். 

முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். 

பொதுவாக சொல்லப் போனால் இளையபருவத்தினருக்கு இந்த வருடத்தில் இருந்து வாழ்க்கையின் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கப் பெற்று நிம்மதியாக வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு கடந்த சில வருடங்களாக வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த தடங்கல்களும் எதிர்மறை அனுபவங்களும் இனிமேல் இருக்காது. தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரம் மேன்மேலும் பெருகும். 

புதிதாக தொழில் தொடங்குவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும் என்பதால் உடனே தொழில் தொடங்கலாம். ஏற்கனவே தொழில் சரியின்றி இருந்தவர்களுக்கு இனி நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரிவு படுத்தலாம். வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை விரிவு படுத்தவும், புதிய முயற்சிகள் எடுக்கவும் நல்லநேரம் இது. துணிந்து எதிலும் இறங்கி செயல்படுங்கள். ரிஸ்க் எடுத்தால்தான் வாழ்க்கையின் உயரத்திற்குச் செல்ல முடியும். 

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். உங்களின் ஆலோசனை குடும்பத்தில் உள்ள ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். 

இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றியைத் தரும். இனிமேல் உங்களின் பொருளாதாரநிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். 

சொந்தவீடு இல்லாதவர்களுக்கு கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் நடக்கும். இதுவரை இருந்ததைவிட நல்லவீட்டிற்கு இப்போது மாறுவீர்கள். 

அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள். 

கடந்த காலங்களில் சந்தித்த மனக் கஷ்டங்கள் எதுவும் இனிமேல் இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். சுருக்கமாக சொன்னால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் விருச்சிக ராசிக்காரர்கள் எதையும் சாதிப்பீர்கள். உங்களைச் சுற்றி வெற்றி கொடியினை மட்டும் பறக்க விடுவீர்கள். விருச்சிகம் சாதிக்கும் வருடம் இது.

தொடர்பு எண்கள்செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.


குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. Dhanusu, meenam la yepo upload pannuving sir ..

    ReplyDelete