மேஷம்
அதிசார முறையில் குருபகவான் ஒன்பதாம் இடத்திற்கு மாறி ராசியைப் பார்ப்பது நன்மைகளை தருகின்ற அமைப்பு என்பதால் தொழில் மற்றும் சொந்த வாழ்க்கையில் இதுவரை நன்மைகளை சந்திக்காத மேஷத்தினருக்கு நல்ல முன்னேற்றத்தை தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். நல்ல கோட்சார கிரக நிலைகள் இருந்தும் பிறந்த ஜாதக அமைப்புப்படி நன்மை தரும் தசா புக்திகள் இல்லாத காரணத்தால் நல்லபலன்கள் நடைபெறாத உங்களில் சிலருக்கு அந்த குறை நீங்கும் மாதம் இது.
பொது வாழ்க்கையில் இருக்கும் சிலருக்கு இப்போது பதவிகள் உண்டு. ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் சுபர் வீடான சுக்கிரனின் வீட்டில் அமர்வது யோகம் என்பதால் பணவரவில் குறை இருக்காது. தொழில் விஷயங்களில் கவலைகள் எதுவும் இல்லாமல் நன்மைகள் மட்டுமே இருக்கும். சூரியன் விரயத்தில் வலுப் பெறுவதால் சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் வகையில் விரயங்கள் இருக்கும். தந்தை வழியில் சங்கடமான சம்பவங்கள் இருக்கலாம். வெகுநாட்களாக இருந்து வரும் பிரச்னைகளை வெற்றி கொள்வீர்கள்.
சுக்கிரனின் அமைப்பால் பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் இருக்கும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் உண்டு. எதிர்ப்புகள் விலகும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவீர்கள். என்னதான் பிரச்னை என்றாலும் ராசியை குரு பார்ப்பதால் வரும் அனைத்து கஷ்டங்களும் சூரியனைக் கண்ட பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது.
ரிஷபம்:
குரு, சனி, கேது மூவரும் எட்டாமிடத்தில் ஒன்று கூடும் மாதம் இது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்கள் உழைப்பை மட்டுமே நம்ப வேண்டிய மாதம் இது. பங்குனி மாதம் கோட்சார ரீதியில் ரிஷபத்தினருக்கு சாதகமான பலன்கள் சொல்ல முடியாத மாதம்தான். ராசியில் செவ்வாய் இருப்பது வேறு உங்களை கோபக்காரனாக்கி நிலை பிறழ வைக்கும். சுற்றியுள்ளவர்களை சந்தேகக் கண்ணோடு பார்ப்பீர்கள். எதிலும் ஒரு நிறைவு இருக்காது. ஆயினும் ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் மாத இறுதியில் அனைத்தும் நீங்கும்.
அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தில் நீங்கள் இருப்பதால் புதிய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்காமலும், இருக்கும் வேலையை விட்டு நீங்களாக விலகாமலும் இருப்பது நல்லது. எட்டாமிட கிரக நிலைகளால் எதிர்ப்புகள் லேசாக தலைதூக்கும். அடங்கிக் கிடந்த சில பிரச்னைகள் உள்ளேன் அய்யா என்று எட்டிப் பார்க்கும். ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். குறிப்பாக சொன்னால் இந்த மாதம் உங்களுக்கு நல்லதும், கெட்டதும் கலந்த பலன்கள் உண்டு. சிலருக்கு பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும்.
மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். தாயார் வழியில் நன்மைகள் நடக்கும். வீடு வாங்குவதற்கோ, வீடு கட்டுவதற்கோ ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். அருமையான நீங்கள் நினைத்த வாகனம் அமையும். தாயாரிடம் ஏதேனும் ஒரு விஷயத்திற்கு சம்மதம் கேட்க இப்பொழுது சரியான நேரம் என்பதால் இந்த நேரத்தை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். சிலருக்கு பயணங்களும், அது சம்மந்தமான நன்மைகளும் இருக்கும். சிலருக்கு சகோதரிகளால் செலவு உண்டு.
மிதுனம்:
மிதுனத்திற்கு நன்மைகளை தருகின்ற மாதமாக பங்குனி இருக்கும். குறிப்பாக 30 வயது கடந்தும் திருமண அமைப்புகள் கூடி வராத இளைய பருவத்தினருக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்து வாழ்க்கை செட்டில் ஆவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் இப்போது உண்டு. உங்களில் சிலர் விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். ஒருசிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். குறைகளை விட நிறை அதிகம் இருக்கும் மாதம் இது.
ஏழில் மூன்று கிரகங்கள் ஒன்று கூடுவதால் குடும்பப் பிரச்னைகளை சற்று நிதானத்துடன் கையாள்வது நல்லது. எங்கும், எதிலும் கோபப்பட்டு பேச வேண்டாம். கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும்.. தாய் வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும். சிலருக்கு தேவையற்ற விரோதங்கள் வரலாம். எவரையும் நம்பி வெளிப்படையாக பேச வேண்டாம். இதுவரை வேலை, தொழில் போன்ற விஷயங்களில் நல்ல பலன்கள் நடக்காத மிதுன ராசிக்காரர்கள் இப்போது அந்தக்குறை நீங்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு இந்தமாதம் சில விரயங்கள் ஏற்படும். ஆனாலும் வருமானம் குறைவதற்கு வாய்ப்பு இல்லை. அரசுத்துறையினருக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். கோர்ட், போலீஸ் என்று அலைபவர்களுக்கு சாதகமாக முடிவுகள் வரும். சிலர் சமரசம் ஆவீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். பொருளாதாரம் மேன்மை பெறும். கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்:
மாதம் முழுவதும் தனாதிபதியான சூரியன் ஒன்பதாமிடத்தில் இருப்பதும், எதிர்ப்புகளை குறிக்கும் ஆறாமிடத்தில் சனி, கேது இணைந்திருப்பதும் செவ்வாய் லாப ஸ்தானமான பதினொன்றில் இருப்பதும், கடகத்திற்கு யோகமான அமைப்பு என்பதால் பங்குனிமாதம் கடகராசிக்கு நல்ல பலன் தருகின்ற மாதமாக இருக்கும். குறிப்பிட்ட ஒரு பலனாக ஆறாமிடம் பாபக் கிரக ஆளுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதால் இதுவரை உங்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருந்த கடன்களை நீங்கள் தீர்ப்பதற்கான வழிகள் பிறக்கும் மாதம் இது.
பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்துவந்த சிக்கல்கள் தீரத் தொடங்கி நல்லது அனைத்தும் நடக்கும். உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். அரசு ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். .
வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான செவ்வாய் வலுவுடன் இருப்பதால் பண விவகாரங்கள் நல்லவிதமாக செயல்பட்டு நன்மைகளை தரும். வியாபாரிகளுக்கு இது மேன்மைகளைத் தரும் மாதம். கொடுத்த கடன் திரும்பி வரும். ராசியில் இருள்கிரகமான ராகு இருப்பதால் கடகத்தினர் ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத் தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.
சிம்மம்:
அதிசார முறையில் குரு ஐந்தாமிடத்திற்கு மாறி ராசியைப் பார்க்கப் போவதால் வேலை, தொழில் போன்றவைகளில் எவ்வித பிரச்சினைகளும் இன்றி நன்மைகள் மட்டுமே நடக்கும் மாதம் இது. உங்களில் சிலருக்கு கடந்த சில வருடங்களாக அலுவலகங்களில் இருந்து வந்த தொல்லைகள் இந்த மாதம் முதல் நிரந்தரமாக விலகும். சொந்தத் தொழில் வைத்திருந்தும் இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் காணாத சிம்ம ராசியினருக்கு இப்போது நல்ல மாற்றங்கள் வரும். பங்குனி மாதம் சிம்மத்திற்கு நல்ல மாதம் தான்.
அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை கிடைக்கும். மாணவர்கள் நன்கு பரீட்சை எழுதுவீர்கள். கலைஞர்களுக்கு இது சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு, தனியார்துறை ஊழியர்கள் வளம் பெறுவார்கள். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. தந்தைவழி உறவினர்களிடமிருந்து உதவிகள் இருக்கும்.
ராசிநாதன் குருவின் வீட்டில் இருப்பதால் சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வேலையில் இதுவரை இருந்துவந்த சிக்கல்கள் நீங்குதல், வழக்குகள் சாதகமாகுதல் மற்றும் பொருளாதார மேன்மைகள் இருக்கும். நீண்டநாள் பாக்கி வசூல் ஆகும். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான நிகழ்ச்சிகள் நடக்கும். வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் உண்டு.
கன்னி:
மாதம் முழுவதும் யோகாதிபதி சுக்கிரன் நல்ல அமைப்பில் இருப்பதால் கன்னிக்கு நல்லவைகள் மட்டுமே நடக்கின்ற மாதம் இது. அதே நேரத்தில் நான்காமிடத்தில் இரண்டு பெரும் பாபக் கிரகங்களான சனியும், கேதுவும் இணைந்துள்ள நிலையில் அவர்களுடன் குருவும் இணைவதால் உங்களில் சிலர் அலுவலகங்களிலும், தொழில் இடங்களிலும் பின்னடைவான ஒரு நிலையை உணர்வீர்கள். உங்களில் சிலருக்கு கையில் இருந்த சேமிப்பு கரையும் மாதம் இது. தவிர்க்க முடியாத செலவுகளை நீங்கள் செய்யும் மாதம் இது.
பொதுவாக பங்குனி மாதம் ராசிநாதன் புதன் நீசம் அடைவார் என்பதால்,எந்த வருடத்திலும் பங்குனி மாதம் சிலர் மனக்கஷ்டங்களையும், தடைகளையும் சந்திப்பீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இந்த மாதம் இருக்காது. இப்போது எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும். வருமானத்திற்கு எந்த வித குறையும் இருக்காது. சொத்து விஷயமாக சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை இருப்பவர்களுக்கு எல்லோரும் ஏற்று கொள்ளக்கூடிய தீர்வு கிடைக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு.
திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். குரு, சனி, கேது சேர்க்கையால் சிலர் ஆன்மிகம் சம்பந்தமான பிரயாணங்கள் செய்வீர்கள். புனிதத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு கருவுறுதல் இருக்கும். ராசிநாதன் வலுவாக இருப்பதால் தொல்லைகள் எதுவும் அண்டாது. எந்த ஒரு சிக்கலையும் அறிவாற்றலால் சுலபமாக சமாளிப்பீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டம் கொஞ்சம் அருகில் இருக்கும்.
துலாம்:
ராசிநாதன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால், துலாமிற்கு பங்குனி சந்தோஷ மாதமாக இருக்கும். இதுவரை சொந்த வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து கொண்டிருப்பவர்களுக்கு நிலையான முன்னேற்றம் கிடைக்கும் மாதம் இது. சிலருக்கு இந்த மாதம் திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். நீண்டநாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கும்.
ராசிநாதன் வலுவாக இருப்பது நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், பணவரவுகளும், லாபங்களும், இருக்கும். உங்களில் பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்துபவர்களுக்கு நல்ல நன்மைகள் இருக்கும். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல மாதம் இது. யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும். துலாத்திற்கு இனிமேல் யோகம்தான் நட்புக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.
விருச்சிகம்:
மாதம் முழுவதும் ராசிநாதன் செவ்வாய் சுபர் வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பது உங்களுக்கு யோக அமைப்பு. விருச்சிகத்திற்கு தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் விடிந்து விட்டது. இன்னும் ஐந்து பெர்சன்ட்தான். உங்களில் கஷ்டங்கள் மீதமுள்ள அனுஷம், கேட்டை நட்சத்திரத்தினர் கூட இந்த மாதம் வெற்றிகளையும், வேதனை விலகுவதையும் உணருவீர்கள். பங்குனி மாதத்தில் விருச்சிகத்தினருக்கு சில இன்ப அதிர்ச்சி தரும் இனிமையான திருப்பங்கள் இருக்கும்.
விருச்சிகத்தின் பிரச்சினைகள் அனைத்தும் தீருகின்ற நிலைகள் உருவாகி, இனி சிக்கல்கள் இல்லாத வாழ்க்கை இருப்பதற்கு ஆதாரமான சில சம்பவங்கள் நடக்கும் மாதம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரியங்களுக்கு இதுவரை இருந்து வந்த தடை விலகும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவக்கூடிய அடிப்படை அறிமுகமான நபர்களை சந்திப்பீர்கள். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். வேலை செய்யும் இடத்தில் மதிக்கப் பெறுவீர்கள். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும்.
உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். நீண்ட தூர புனித யாத்திரைகள் செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
தனுசு:
ராசியிலேயே சனி, கேது இணைந்திருப்பது தனுசுராசி இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில் அமைப்பில் சங்கடங்களை தருகின்ற அமைப்பு என்பதால் இந்த மாதம் தனுசுவினர் எதையும் பொறுமையுடன் கையாள வேண்டிய மாதமாக இருக்கும். உங்களில் மூலம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் என்னவென்று தெரியாத இனம் புரியாத பரபரப்புடனும், கலக்கத்துடனும் இருப்பீர்கள். எதிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்.
சில விஷயங்களில் எதிர்மறையான பலன்களை பங்குனி மாதம் கொடுத்தாலும் வாழ்க்கைக்குத் தேவையான நல்ல மாற்றங்கள் இப்போது இருக்கும் என்பதால் கவலைப் பட தேவையில்லை. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.
ராசியில் இருக்கும் சனி, கேதுவுடன் அதிசார முறையில் ராசிநாதன் குரு சில வாரங்களுக்கு இணைய இருப்பது கஷ்டங்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு. ஜென்மச் சனி நடப்பதால் எதையும் ஒருமுறைக்கு இரண்டு முறையாக யோசித்து செய்யுங்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. நீண்டநாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச் சேர்க்கும்.
மகரம்:
பனிரெண்டில் இணையும் குரு, சனி, கேது சேர்க்கை மகர ராசிக்கு குடும்பத்தில் சிறு சச்சரவை தரக் கூடிய அமைப்பு என்பதால் மகரத்தினர் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருபலனாக உங்களில் சிலர் “ஓவர் கான்பிடன்ட்” எனப்படும் அதீத தன்னம்பிக்கையால் நன்றாக செல்லக் கூடிய விஷயங்களை கெடுத்துக் கொள்வீர்கள். தொழில் நிலைகளில் இப்போது அகலக்கால் வைக்க வேண்டாம். பணியிடங்களில் உங்களின் ஈகோவை தூண்டிவிடக் கூடிய நிகழ்வுகள் நடக்கும். அனுசரித்துச் செல்லுங்கள்.
ஏழரைச்சனி நடப்பில் இருப்பதால் உங்களில் சிலர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். மகரம் சனியின் சொந்தராசி என்பதால் கெடுதல்கள் எதுவும் இருக்காது. கவலை வேண்டாம். பங்குனி மாதம் சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு சறுக்கல்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும்.
யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு அதிகமான வேலைப்பளு உண்டு.
கும்பம்:
கும்பத்தினர் சுற்றி இருப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய மாதம் இது. நம்பிக்கைக்குரிய ஒருவர் உங்களுக்கு எதிராக நடக்கும் அமைப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்திற்கும், அடுத்தவரை நம்பாமல் நீங்களே தீர ஆராய்ந்து செய்ய வேண்டிய மாதம் இது. ஐந்தில் ராகு அமர்ந்து ஐந்தாமிடத்தை சனி பார்ப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. தனாதிபதி வலுத்திருப்பதால் எதிர்பாராத பணவரவு இருக்கும். தெய்வ தரிசனம் கிடைக்கும்.
தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். குறிப்பாக பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித்தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது சிறப்புகளைச் சேர்க்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
சனி சுக்கிரனைப் பார்ப்பதால் பெண்கள் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பண விஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும் என்பதால் சிக்கனத்தை கடைப்பிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பங்குனிமாதத்தில் கும்பத்தினர் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
மீனம்:
பங்குனி மாதம் மீன ராசிக்காரர்கள் எதிலும் துணிந்து இறங்கி ரிஸ்க் எடுத்து வெற்றி பெறும் மாதமாக இருக்கும். உங்களில் சிலருக்கு குருட்டு அதிர்ஷ்டம் வேலை செய்யும். தவறாக ஒரு விஷயத்தை ஆரம்பிப்பது போல் தெரிந்தாலும் பாதியில் சுதாரித்துக் கொண்டு அதை நீங்கள் வெற்றியாக முடிக்கும் மாதம் இது. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். மீனத்தினர் எதையும் சாதிக்கும் மாதம் இது. துணித்து செயலாற்றலாம்.
கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால் எதிரி என்று நினைத்தவர்கள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உங்களில் சிலர் குறுக்கு வழியில் சென்று காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். வேலை முடிந்தால் சரி, நாய் விற்ற காசு குரைக்காது என்று சமாதானப்படுத்தி கொள்வீர்கள். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வியாபாரிகளுக்கு லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். ராசிநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள்.
கூட்டுத் தொழில் சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். யூகவணிகம் பங்குச்சந்தை ரேஸ் லாட்டரி போன்றவைகளில் அதிகமாக ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது.
No comments :
Post a Comment