Friday, February 1, 2019

SIMMAM : 2019 - RAHU KETHU PEYARCHI சிம்மம் : 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

சிம்மம் 

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

சிம்ம ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் அமர்ந்து அடிக்கடி பயணங்களையும் தேவையற்ற அலைச்சல்களையும் விரயங்களையும் கொடுத்துக் கொண்டிருந்த ராகு தற்போது மிகவும் யோகம் தரக்கூடிய நிலையான பதினொன்றாமிடத்திற்கு மாறுகிறார். 

ராகு பதினொன்றாமிடத்தில் இருப்பது பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே அமையக்கூடிய ஒரு நிகழ்வு என்பதோடு, ராகு உள்ளிட்ட பாபக் கிரகங்களுக்கு பதினொன்றாம் இடம் மிகவும் நன்மைகளைத் தரக்கூடிய இடமாக நம்முடைய மூலநூல்களில் சொல்லப்பட்டிருப்பதால் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் நல்ல நன்மைகளை அனுபவிக்க இருக்கும் ராசி சிம்ம ராசியாகும். 

சரியான கோட்சார கிரக நிலைகள் அமையாமல் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு பம்பர் பரிசாக இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி அமையும் என்பதால் மிகுந்த நன்மைகளைத் தரக்கூடிய ஒரு அமைப்பாக இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு அமையும். 

பதினொன்றாமிடத்திற்கு மாறும் ராகுவால் செய்தொழில் விருத்தி, எதிலும் லாபம், யாவற்றிலும் வெற்றி, அரசலாபம், அன்னிய இன, மத, மொழிக்காரர்களால் நன்மை. வெளிநாடு, வெளிமாநில மேன்மை, தூரஇடங்களில் இருந்து பணம் கிடைத்தல், சிறிது முயற்சி, பெரியநன்மை. அதிர்ஷ்டம் ஆகிய பலன்கள் உங்களுக்கு நடக்கும். இதுவரை சிம்ம ராசிக்காரர்களுக்கு நடக்காமல் தட்டிப் போயிருந்த அத்தனை பாக்கியங்களும், கொடுப்பினைகளும் இப்போது தடையின்றிக் கிடைக்கும். 

ராகு சேரும்போது அல்லது சுபரால் பார்க்கப்படும் போது தானும் சுபராக மாறி அதிகமான நன்மைகளைச் செய்வார் என்பதால் இம்முறை சிம்மராசிக்கு இரட்டிப்பு நன்மையாக வரும் நவம்பர் மாதம் நடக்கும் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ராகு குருவின் பார்வையில் இருப்பார் என்பதால் தாராள பணவரவு, குழந்தைகளால் பெருமை போன்ற பலன்களையும் சிம்ம ராசிக்குச் செய்வார். 

குறிப்பாக பிறந்த ஜாதகத்தில் ராகுதசை அல்லது ராகுபுக்தி நடந்து கொண்டிருப்பவர்களுக்கும், யோகமான தசாபுக்திகள் நடப்பவர்களுக்கும் இம்முறை ராகுவால் மேம்பட்ட நல்ல லாபங்கள் கிடைக்கும். 

அடுத்து ராகு ஒரு ராசிக்கு நல்ல பலன்களைத் தரும் நிலையில் இருக்கும் போது அவருக்கு எதிரில் சாதகமற்ற நிலைமையில் கேது இருப்பார் என்பது ஜோதிட விதி. 

ஆயினும் இம்முறை கேது இதுவரை இருந்த நல்ல இடமான ஆறாமிடத்தில் இருந்து மாறி ஐந்தாம் இடத்திற்கு வந்து உங்களுக்கு சாதகமற்ற பலன்களை கொடுக்க இருந்தாலும், குருவின் வீட்டிற்கு மாறி, குருவோடு இணைய இருப்பதால் கேது இம்முறை கெடுதல்களைச் செய்யமாட்டார். 

மேலும் கேதுவிற்கு சுபரின் வீடுகள் நன்மை தரும் வீடுகளாக நமது மூல நூல்களில் சொல்லப்பட்டிருப்பதால் இம்முறை குருவின் தனுசு வீட்டிற்கு மாறும் கேது, சிம்ம ராசிக்கு கெடுதல்கள் எதுவும் செய்வதற்கு வாய்ப்பில்லை. எனவே ராகு-கேது இரண்டு முனைகளிலும் இம்முறை நல்ல பலன்களே சிம்ம ராசிக்கு நடக்கும் என்பதால் இந்தப்பெயர்ச்சியில் அதிகம் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள் என்பது உறுதி. 

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்குப் பிடித்த வகையில் நல்லசம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம் பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் இதுவரை இல்லாத நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து வாசல் கதவைத் தட்டும். 

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். 

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பள உயர்வு, பதவிஉயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் உள்ளிட்டவர்கள் தொழில்மேன்மையும், புதிய தொழில் தொடங்குதலும் அடைவீர்கள். 

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தைவழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். 

விவசாயிகளுக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுபநிகழ்ச்சிகளும் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு. 

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முயற்சிகளை இப்போது செய்யலாம். 

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். ஏழரைச்சனியின் தாக்கத்தினால் திருமண வாழ்வில் பிரச்னைகள் ஏற்பட்டு விவாகரத்தானவர்களுக்கு இப்போது இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். இந்த வாழ்க்கை நீடித்தும் நிம்மதியாகவும் இருக்கும். 

குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த மங்களகாரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். காதலித்துத் கொண்டிருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்லமுறையில் குழந்தை பிறக்கும். 

வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். 

பெண்களுக்கு இந்த ராகுகேதுப் பெயர்ச்சி சிறப்பான நன்மைகளைத் தரும். உங்களின் மதிப்பு உயரும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். 

நவம்பர் மாதத்தில் நடைபெறும் குருப்பெயர்ச்சியின் மூலம் குருவும் யோகம் தரும் ஐந்தாமிடத்திற்கு மாறுவதால் குடும்பத்தில் அனைத்து சுபகாரியங்களும் நிறைவேறி அதன் மூலம் சுப விரையங்களே இருக்கும். வீண் விரையங்கள் இருக்காது. செலவுகள் இருக்கும் என்பதால் செலவழிக்க பணவரவும் தாராளமாக இருக்கும். 

வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் வாங்க முடியும். புதிதாக வாகன யோகம் வந்து விட்டது. நீண்ட காலமாக வாங்க வேண்டும் என்று நினைத்திருந்த புதிய வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது. 

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான ஆடம்பர வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். வீடு சம்பந்தப்பட்ட அனைத்துக் காரியங்களும் நினைத்தபடியே நிறைவேறும். 

வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். கடன் பெற்று நல்ல பிளாட் வாங்க முடியும். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள். 

செலவுகள் அதிகம் இருக்கும் எனபதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம் என்பதால் வரப்போகும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. நல்ல நேரத்தில் வந்திருக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சிம்ம ராசியினர் உங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வீர்கள் என்பது நிச்சயம். 

பரிகாரங்கள் 

ராகுபகவானால் கிடைக்கும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள திருநாகேஸ்வரம் போன்ற திருத்தலங்களுக்கு ஜென்ம நட்சத்திரம் அன்று சென்று வழிபடுங்கள். தமிழ்நாட்டில் நாகநாத சுவாமி என்ற பெயருள்ள அத்தனை கோவில்களும் ராகுகேது திருத்தலங்கள்தான். உங்கள் அருகில் உள்ள கோவில்களில் வழிபடலாம்.

2 comments :

  1. Sir, Nan ketpathu nijama.... ennala nambave mudila sir. nalla varthaigalai kettu pala varudangal agivittathu. romba romba nandrigal guruji

    ReplyDelete