Friday, February 1, 2019

DANUSU : 2019 - RAHU KETHU PEYARCHI தனுசு: 2019 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

தனுசு 

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.) 

தனுசு ராசிக்கு இதுவரை சாதகமற்ற பலன்களைக் கொடுத்து வந்த அஷ்டம ராகுவும், இரண்டாமிட கேதுவும் தற்போது கெடுபலன்களைத் தர இயலாத விதத்தில் ஏழாமிடத்திற்கும், ராசிக்கும் மாற இருக்கிறார்கள். 

ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த எட்டு-இரண்டாமிடங்கள் தனுசுவினரை கடுமையாகப் பாதித்து கெடுபலன்கள் நடந்த இடம் என்பதால் தற்போது ராகு,கேதுக்கள் மாற இருக்கும் ஒன்று, ஏழாமிட பெயர்ச்சியால் நிச்சயமாக கெடுதல்கள் எதுவுமிருக்காது. 

முக்கியமாக ஏழாமிடத்திற்கு வரும் ராகு இந்த வருட நவம்பர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு மாற இருக்கும் குருவின் பார்வையால் சுபத்தன்மை பெற்றவராகி உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும் தகுதி பெற்றவராகிறார் என்பதால் நவம்பர் முதல் ஏழாமிடத்து ராகு உங்களுக்கு நன்மைகளைச் செய்வார். 

அதேபோல இதுவரை இரண்டாமிடத்தில் இருந்து உங்களின் தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைப் பாதித்து உங்களின் பணவரவுகளைத் தடுத்து உங்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்களை இதுவரை கொடுத்துக் கொண்டிருந்த கேதுவும் அந்த இடத்திலிருந்து மாறி ஜென்மம் எனப்படும் ராசிக்கு மாறுகிறார் என்பதால் கேதுவும் நற்பலன்களையே செய்வார். 

பொதுவாக ஜென்மகேது நன்மைகளைச் செய்வதில்லை என்ற கருத்து இருந்தாலும் இயற்கைச் சுபரின் வீடுகளில் இருக்கும் கேது கெடுபலன்களைத் தரமாட்டார் எனும் விதிப்படி தற்போது உங்களின் ராசியான குருவின் வீட்டில் அமரும் கேது கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார். அதிலும் வரும் நவம்பர் முதல் கேது குருவோடு இணையப் போவதால் மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்வார் என்பது உறுதி. 

ஏழாமிடத்து சுப ராகுவால் அடுத்த வருடம் முதல் அந்த வீட்டின் சுபத்தன்மைகள் அதிகரித்து திருமணம், வாழ்க்கைதுணை லாபம், நண்பர்கள் உதவி, கூட்டுத்தொழில் மேன்மை, பயணநன்மை போன்ற பலன்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு நடைபெற ஆரம்பிக்கும். 

அதேபோல கேது சுபத்தன்மை பெற்று ராசியில் இருப்பதால் குருவின் மறு உருவமாகி உங்களின் சிந்தனை, செயல்திறன், பேச்சு இவைகளைச் சீர்படுத்தி ஊக்கமும் ஏற்படுத்தி அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஏற்றதினை உண்டாக்குவார் என்பது உறுதி. 

இனி முக்கியாமான விஷயத்திற்கு வருகிறேன். தனுசு ராசிக்கு தற்போது ஏழரைச்சனியில் ஜென்மச்சனி அமைப்பு நடந்து கொண்டிருக்கிறது. பொதுவாக கோட்சார அமைப்புகளில் சனியின் நன்மை-தீமைகளே ஒருவரை அதிகம் பாதிக்கும் என்பது ஒரு பொதுவிதி. கோட்சார நிலைமைகளில் மற்ற கிரகப் பெயர்ச்சிகள் அனைத்தும் ஏழரைச்சனிக்கு கட்டுபட்டவைதான். 

உதாரணமாக கடுமையான ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கும்போது நல்ல நிலையில் வேறு ஒரு கிரகம் இருந்தாலும் அந்த கிரகத்தால் கொடுக்கப்பட இருக்கும் நற்பலன் சனியால் தடுக்கப்படும். ஏழரைச்சனியை ஓரளவிற்கு கட்டுப்படுத்துவது குருவின் பார்வை மட்டும்தான். 

எனவே இளைய பருவத்தினர் இப்போது சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் தற்போது தொழில்ரீதியாக எந்தவித புது முயற்சிகளும் செய்யாமல் இருப்பது நல்லது. அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ வேறு எந்த வகையிலும் புதியவைகளைச் செய்வதோ வேண்டாம். 

தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ, மேற்கொண்டு அதிகமான முதலீடு செய்யவோ வேண்டாம். 

தனுசுவினர் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக்கூடியவர் என்பதால் ஏழரைச்சனி பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. சனியை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம். மேலும் சனிபகவான் தற்போது மூலம் நட்சத்திரத்தில் தன்னுடைய பயணத்தை முடித்து தற்போது உங்கள் ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறார். எனவே தனுசு ராசி சனியின் பாதிப்பில் இருந்து பாதி விலகி விட்டது. 

ஆயினும் சனி, சனிதான் என்பதால் ஏழரைச்சனி நேரங்களில் குறுக்குவழி பணம் வரும் சூழ்நிலையில் விழிப்பும் எச்சரிக்கையும் தேவை. எங்கும் எதிலும் கவனமாக இருங்கள். முறைகேடாக தவறான வழியில் ஆசை காட்டப்படும் எந்த முயற்சிக்கும் மனதை திடப்படுத்திக் கொண்டு அலைபாயாமலும் அடிபணியாமலும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக இன்னும் சில காலத்திற்கு மதுப்பழக்கத்தை கை விடுங்கள். 

சொந்தத்தொழில் செய்யும் நடுத்தர வயதினருக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாகக் குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். 

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். 

அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாகப் புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்துக் கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள். 

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு பதவி உயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம். சிலருக்கு வீடுமாற்றம் தொழில்மாற்றம் வேலை மாற்றம் போன்றவைகள் இப்போது நடக்கும். 

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும். 

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். சிலருக்கு வெளியூரிலோ வெளி மாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். 

நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகா பெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள். ராசிக்கு கேது வருவதால் இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். 

சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும். 

ரியல்எஸ்டேட், வீடுகட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும். 

தனுசுராசி இளையபருவத்தினர் எதைச் செய்தாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு இது நமக்கு என்ன பலன்களைச் செய்யும் என்பதை முன்கூட்டியே யோசித்துச் செய்தால் எதையும் ஜெயிக்கலாம். 

பரிகாரங்கள் 

ஏழரைச்சனியின் நடுப்பகுதியான ஜென்மச்சனி அமைப்பில் நீங்கள் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன்கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். ராமதாசன் ஸ்ரீஹனுமனுக்கு சனிக்கிழமை தோறும் நெய்தீபம் ஏற்றுவதும் சனியின் கடுமையை அண்டவிடாது பாதுகாக்கும். ஏழரைச்சனி முடியும் வரை தனித்த சனியின் சந்நிதி முன் நின்று வணங்க வேண்டாம்.

No comments :

Post a Comment