ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
விருச்சிகம்:
கைப்பேசி : 8681 99 8888
விருச்சிகம்:
கடந்த சில வருடங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற வேதனைகளும், துயரங்களும் அதிகம் என்பதை என்னுடைய ராசிபலன்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிலும் விருச்சிக ராசி இளைய பருவத்தினர் கெடுதல்களை சமாளிக்க முடியாமல் திணறித்தான் போனீர்கள்.
2019-ம் வருடம் விருச்சிகத்தின் வேதனைக்கு முழுமையாக முடிவு கட்டும் வருடமாக இருக்கும். கடும் இழப்பு, நெருங்கியவரின் பிரிவு, துயரம், கடன், ஆரோக்கிய குறைவு, மன அழுத்தம், வேலையில், தொழிலில் சிக்கல், வழக்கு போன்ற எல்லாவிதமான கெடுபலன்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடத்துடன் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும். இந்த ஒரு காரணத்திற்காகவே பிறக்க இருக்கும் புத்தாண்டினை நீங்கள் வரவேற்பீர்கள்.
கடந்த சில வருடங்களாக விருச்சிகத்தினர் தொழில்துறையில் சிக்கல்கள், வேலையில் பின்னடைவு, குடும்பத்தில் குழப்பம், கடன் தொல்லைகள், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்காதது, வாழ்க்கையில் இன்னும் செட்டிலாகாமல் இருப்பது போன்ற அனைத்து கஷ்டங்களையும் அனுபவித்துவிட்டீர்கள். உங்களில் சிலருக்கு சென்ற வருடமே பிரச்னைகள் தீர ஆரம்பித்து விட்டன. மீதி இருப்பவர்களுக்கும் இந்த வருடத்தோடு தொல்லைகள் ஓயும்.
எவ்வித கோட்சாரக் கிரகநிலைகள் உங்களுக்கு கைகொடுக்கா விட்டாலும் இந்த வருடத்தோடு ஏழரைச்சனி உங்களை விட்டு முழுமையாக விலகப் போகிறது என்பதே இதுவரை உங்களுக்கு இருந்து வந்த எல்லாவித தடைகளையும் நீக்குகின்ற ஒரு அமைப்பு.
சனி விலகியதும் வாழ்க்கை நல்லவிதமாக அமையும் என்பது ஜோதிடவிதி. எனவே மற்ற ராகு,கேது மற்றும் குருப்பெயர்ச்சிகள் கை கொடுக்காவிட்டாலும் ஏழரைச்சனி இந்த வருடத்தோடு முடியப் போவதால் விருச்சிக ராசிக்காரர்கள் துயரங்களில் இருந்து வெளியே வந்தே ஆக வேண்டும். அந்த வகையில் பிறக்க இருக்கும் புத்தாண்டான 2019-ம் ஆண்டு உங்களுக்கு சந்தோஷங்களை மட்டுமே தருகின்ற வருடமாக இருக்கும்.
இன்னொரு முக்கிய பலனாக ஒரு ஜோதிடப் பொது மேடையில் நான் எடுத்துரைத்ததைப் போல கடுமையான ஏழரைச்சனி நடக்கும்போது மற்ற கிரகப் பெயர்ச்சிகள் அதனுள் அடங்கி நன்மைகளைத் தராது. உதாரணமாக ஜென்மச் சனி நடக்கும்போது குரு சாதகமான வீட்டில் இருந்தாலும் பலன் தர மாட்டார். சனிக்கு அடங்கித்தான் குரு பலன் தருவார்.
ஏனெனில் சனி என்பது தண்டிக்கும் அதிகாரம் பெற்ற ஒரு கிரகம். அவர் தண்டனை தந்து கொண்டிருக்கும் போது குறுக்கே ஒருவர் புகுந்து ஜாமீனில் எடுப்பதோ, விடுதலை வாங்கித் தருவதோ முடியாத காரியம். அதன்படி கடந்த சில வருடங்களாக நடந்த ராகு-கேது, குருப்பெயர்ச்சிகள் எதுவும் விருச்சிகத்திற்கு நன்மை, தீமைகளை செய்யவில்லை. இனிமேல் அந்த நிலை மாறி மற்ற வருடக்கிரகங்கள் மூலமும் இனி உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.
இந்தப் புது வருடம் நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.
எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில்தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீரும் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும்.
எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் அனைத்தும் நல்லபடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும்.
உங்களுடைய சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். உங்களுடைய கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும். இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள்.
அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.
திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து உடனடியாக திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள்.
குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த வருடம் குழந்தை பிறக்கும். மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்துவந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள். இளையவர்கள் பெற்றோர்களிடமிருந்து ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் பெற முடியும்.
சொந்த வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும்.
கடன் தொல்லையால் அவதிப்பட்டவர்களுக்கு கடனை தீர்க்கக் கூடிய அமைப்புக்கள் உருவாகும். ஒரு சிலர் புதிய கடன்கள் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். இனிமேல் கடன்கள் கஷ்டங்களைத் தராது. உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள்.
புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.
கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.
பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட துறையினருக்கு பொறுப்பான பதவி கிடைக்கும். மக்கள் மத்தியில் அந்தஸ்தும் கௌரவமும் கிடைப்பதோடு வருமானத்திற்கும் வழி பிறக்கும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும் காலமாக இது இருக்கும். பிறந்தகால ஜாதக தசாபுக்தி அமைப்பு யோகமாக இருப்பவர்களுக்கு பருத்தி புடவையாய்க் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பு நன்மைகள் இருக்கும்.
குலதெய்வ வழிபாடு மிகச் சிறப்பாக செய்ய முடியும். நீண்ட நாட்களாக தள்ளி போய் இருந்த குலதெய்வ தரிசனம் இப்போது பெற முடியும். இதுவரை குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரியும் சந்தர்ப்பம் வரும்.
ஞானிகள் மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும். இதுவரை தரிசிக்காத புனிதத்தலங்களுக்கு சென்று திரும்புவீர்கள்.
தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். சகோதர வழியில் உதவிகளும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.
பெண்களுக்கு இந்த வருடம் மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்துவந்த மனக்கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்ல படியாக உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.
இளைஞர்கள் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். அது கைகூடும் காதலாகவும் இருக்கும். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.
தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக் கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களையே தரும். எனவே எந்த நிலையில் பார்த்தாலும் பிறக்கப் போகும் புது ஆண்டு முதல் உங்களுக்கு நன்மைகள் மட்டுமே நடக்கும் என்பது உறுதி.
சந்திரதிசை நடந்தால் எப்படி நல்லது நடக்கும்
ReplyDelete