ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
தனுசு:
கைப்பேசி : 8681 99 8888
தனுசு:
தனுசு ராசிக்கு ஜென்மச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கிறது. சனி தற்போது உங்கள் ராசியில் பூராடம் நட்சத்திரத்தில் சென்று கொண்டிருக்கிறார்.
உங்களில் நாற்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்திற்கான அனைத்து விஷயங்களிலும் முனைப்புடனும் அக்கறை மற்றும் கவனத்துடனும் இருக்க வேண்டும். குறிப்பாக மூலம், பூராடம் நட்சத்திரத்தினருக்கு எல்லாவகையிலும் எச்சரிக்கை தேவை. அதேநேரத்தில் ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு இந்தச் சனி பொங்கு சனியாகி நன்மைகளைச் செய்யும்.
என்னதான் ஏழரைச் சனி என்றாலும் தனுசு, குருவின் வீடாகையால் தனுசு ராசிக்கு சனி பெரிய கெடுதல்கள் எதையும் செய்ய மாட்டார். குறிப்பாக 2019-ம் வருடம் உங்களுக்கு மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது. முதலில் கசப்பை சனி தந்தாலும் பிறகு அளவற்ற இனிப்பைத் தருவார்.
மிக முக்கியமாக வருட ஆரம்பத்தில் மார்ச் 6ம் தேதியன்று நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியும், வருட இறுதியில் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சியும் சோதனைகளை தராத பெயர்ச்சிகளாக இருக்கும் என்பதால் 2019-ம் ஆண்டு உங்களுக்கு சமாளிக்கக் கூடிய வருடம்தான்.
தற்போது எட்டாமிடத்தில் இருக்கும் ராகு மார்ச் மாதம் ஏழாமிடத்திற்கு மாறுவது முன்பிருந்ததைவிட நல்ல அமைப்பு என்பதால் இதுவரை தொழில் துறைகளில் ஏற்ற இறக்கங்களையும், பண கஷ்டங்களையும், பொருளாதார சிக்கல்களையும் சந்தித்து கொண்டிருந்தவர்கள் இனி அது நீங்கப் பெறுவீர்கள்.
குறிப்பாக இதுவரை இளையவர்களின் திருமணங்களுக்குத் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருத்த அமைப்பு இந்த வருட பிற்பகுதியில் விலகுகிறது. மேலும் எட்டில் இருந்து பங்குச்சந்தை, சூதாட்டம் போன்ற ஸ்பெகுலேஷன் துறைகளில் உங்களுக்கு விரயங்களைத் தந்து கொண்டிருந்த ராகு விலகுவதால் இனிமேல் நஷ்டங்கள் உங்களை விட்டு விலகும்.
அதேநேரத்தில் இந்த வருடம் புதிதாக தொழில் ஆரம்பிப்பது, புதிய முயற்சிகள் எதையும் செய்வது கூடாது. ஏழரைச்சனி நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழில் முயற்சிகள் கடுமையான சிக்கல்களையும், தேவைக்கு அதிகமான உடல் உழைப்பையும் தரும் என்பதால் புதிய தொழில் துவங்குவதை இளம்பருவ குறிப்பாக நாற்பது வயதுக்குட்பட்ட தனுசு ராசிக்காரர்கள் தவிர்ப்பது நல்லது.
மேலும் வருடத்தின் பிற்பகுதியில் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றங்களும், தொழில் மாற்றங்களும் ஏற்படும் என்பதால் அதற்கும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
புதிதாக அறிமுகம் ஆகும் நபர்களிடம் இந்த வருடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக என்னிடம் திறமை இருக்கிறது, இது போன்ற ஒரு திட்டம் இருக்கிறது, இந்த திட்டத்திற்கு நீங்கள் பணமுதலீடுகள் செய்தால் இதன் மூலம் பலமடங்கு லாபம் அடையலாம் என்று உங்களை உசுப்பேற்றுபவர்களிடம் இருந்து தள்ளி நில்லுங்கள். இந்த வருடம் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிக்கல்களைத் தரும் என்பதால் பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும். பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள்.
அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க இதுவரை இருந்து வந்த தடங்கல்கள் விலகும். ஒரு சிலர் ஏற்கனவே இருக்கும் படிப்புத்தடை விலகி தொடர்ந்து படிப்பீர்கள்.
இந்த வருடம் உங்களுக்கு மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன்யோசனை இல்லாத அவரசக்குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.
வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
ஏற்கனவே இருக்கின்ற பழைய கடனை புதுக்கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில், வியாபாரம் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.
தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள் வெளிநாட்டோடு வியாபாரத்தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.
உங்களில் நடுத்தர வயதினர் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில தனுசு ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.
அக்டோபர் மாதத்திற்கு மேல் தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.
வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.
பணிபுரியும் இடங்களில் டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனவே அதுபோன்ற நிலைகளில் வேலை அமையும் வாய்ப்பு உள்ளது.
கூட்டுத்தொழில் செய்பவர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். வேலைக்காரர்கள் உள்ளிட்ட எவரையும் நம்ப வேண்டாம். தொழில் ரீதியான பயணங்கள் இனிமேல் அடிக்கடி இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.
பெண்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல், வெளியூருக்கு டிரான்ஸ்பர் ஆகுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள், நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட தனுசு ராசியினருக்கு இந்த வருடம் ஓரளவு நன்மைகளைத் தரும்.
குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குலதெய்வ அருளினால் எதையும் சமாளிப்பீர்கள்.
தனுசு ராசி இளையவர்கள் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இந்த ஆண்டு நடக்கும். கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.
No comments :
Post a Comment