Monday, November 26, 2018

Meenam: 2019 New Year Palangal - மீனம்: 2019 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி


கைப்பேசி : 8681 99 8888

மீனம்: 

மீனத்திற்கு அளவற்ற நன்மைகளை அள்ளித் தரும் ஆண்டாக பிறக்கப் போகும் ஆங்கிலப் புத்தாண்டு இருக்கும். உங்கள் வளர்ச்சிக்கு தடை சொல்ல இனி எதுவும் இல்லை. 

வருட ஆரம்பத்தில் உங்கள் ராசிநாதனான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பது இதுவரை இருக்கும் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கும் அமைப்பு என்பதால் இந்த வருடம் முழுக்க உங்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். 

மார்ச் மாதம் நடக்க ராகு,கேதுப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு வெளிநாடு, வெளிமாநில தொடர்புகளும் அவற்றின் மூலம் பொருள்வரவும் இருக்கும். அதேபோல குருவின் ஒன்பதாமிட இருப்பால் வேலை தொழில் இடங்களில் நல்ல பெயரும், கவுரவமும் கிடைக்கும். எனவே ஜனவரி மாதத்தில் இருந்தே உங்களுக்கு படிப்படியாக நற்பலன்கள் நடக்க ஆரம்பிக்கும். 

வருட ஆரம்பமே ஒன்பதாமிடத்தில் குரு அமர்ந்து அமர்க்களமாக ஆரம்பிப்பதால் இந்த வருடம் மிகுந்த நன்மைகள் உண்டு. உங்களின் குறைகள் அனைத்தும் இறைவன் அருளால் தீரும் நேரம் இது. பிறந்த ஜாதகத்தில் தசாபுக்திகளும் நன்றாக நடைபெறுமானால் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் இந்த வருடம் கிடைத்து விடும் என்று கிரக நிலைமைகள் காட்டுகின்றன. 

சொந்தத் தொழில் தொடங்க அருமையான நேரம் இது. இருக்கும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு நல்ல சந்தர்ப்பம் வந்து விட்டது. வியாபாரிகளுக்கு இது வசந்த காலம். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும். 

பணியாளர்களுக்கு நல்ல சம்பளத்துடன் நினைத்து போலவே வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லையாக இருந்தவைகள் அனைத்தும் விலகி ஓடும். சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெறுவீர்கள். விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம். 

விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை முற்றிலும் மாறி அனைத்தும் நல்லபலன்களைத் தரும் நிலை வந்திருக்கிறது. இந்த வருடம் உங்கள் முயற்சிகள் அனைத்தும் பலிதமாகி மேன்மையான நிலையை அடைவீர்கள். 

அருமையான வீடு கட்டலாம். பிளாட் வாங்க முடியும். நல்ல வீட்டிற்கு குடி போகலாம். மாற்றங்கள் நிச்சயம் உண்டு. வாகனயோகம் சிறப்பாக இருக்கிறது. பழைய வண்டியை விற்று விட்டு புதியதாக நல்ல மாடல் வாங்குவீர்கள். 

வருட ஆரம்பத்தில் வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் பேச்சினாலேயே மற்றவர்களை கவர்ந்து அதனால் லாபமும் அடைவீர்கள். பேசுவதன் மூலம் பணம் வரும் துறைகளான ஆசிரியர் பணி, மார்கெட்டிங் போன்ற விற்பனைப் பிரிவில் உள்ளவர்கள், ரியல் எஸ்டேட் தொழிலர்கள், கவுன்சிலிங் போன்ற ஆலோசனை சொல்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த வருடம் மிகவும் நன்மைகளைத் தரும். 

பெண்கள் மிகுந்த மேன்மை அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீட்டிலும் அலுவலகத்திலும் மாறி மாறி அவஸ்தைப்பட்ட நிலைமை இனிமேல் மாறி நிம்மதி கிடைக்கும் வருடம் இது. 

செய்கின்ற தொழிலில் அதிக முயற்சி இல்லாமலேயே நிறைந்த லாபங்கள் இப்போது கிடைக்கும். கண்மூடிக் கண் திறப்பதற்குள் பாக்கெட்டில் எப்படி பணம் வந்தது என்று சொல்ல முடியாத அமைப்பில் பண வரவு தற்போது உங்களுக்கு இருக்கும். 

அலுவலங்களில் நல்ல பெயர் கிடைக்கும். இழந்த போன பெருமையை மீட்டெடுப்பீர்கள். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும். 

இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். 

அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார். 

சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின் எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைகாட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. 

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். 

குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும். 

பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும். 

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள். 

நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். 

புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்லநேரம். விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். 

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். 

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். 

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். 

முதியவர்களின் பேச்சை வீட்டில் உள்ளவர்கள் கேட்பார்கள். அவர்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். ஆன்மீக ஈடுபாடும், கோவில் குளங்களுக்கு செல்வதும் நடக்கும். தள்ளிப் போன காசி, ராமேஸ்வர யாத்திரைகளுக்குச் செல்லலாம். 

கேட்கும் இடத்திலிருந்து உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் நீங்கள் ஒருவருக்கு செய்த உதவியால் வருடம் முழுவதும் நல்லபலன்கள் அவர் மூலமாக கிடைக்கும். யூக வணிகத்துறைகளும், பங்குச்சந்தையும் கை கொடுக்கும். 

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். 

மீனத்திற்கு திருப்பு முனையான வருடம் இது.

No comments :

Post a Comment