Tuesday, November 27, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்- 215 (27.11.18)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

தரனிஜா, கொழும்பு. 

கேள்வி. 

பட்டப்படிப்பு முடிந்து மூன்று வருடங்களாகியும் இன்னும் அரச தொழில் கிடைக்கப் பெறவில்லை. திருமணமாகி தொழில் இல்லாததால் மாமி வீட்டுக்காரரும் குறை கூறுகிறார்கள். இதனால் கணவருக்கும், எனக்கும் தினமும் பிரச்சனை ஏற்படுகிறது. தொழில் இல்லாவிட்டால் படித்து என்ன பயன் என்று கணவர் கூறுகிறார். எத்தனையோ பரீட்சை எழுதி விட்டேன். பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வுக்கும் போய் உள்ளேன். ஆனால் கடைசியில் எந்தத் தொழிலும் கிடைப்பதில்லை. எனக்கு எப்போது தொழில் கிடைக்கும்? மன விரக்தியில் இருக்கும் தங்கள் மாணவிக்கு பதில் கூறுங்கள். 

பதில். 

(துலாம் லக்னம், மேஷ ராசி, 3-ல் செவ்வாய், சனி. 4-ல் புதன், 5-ல் சூரி, 6-ல் சுக், ராகு. 7-ல் சந், குரு. 12-ல் கேது, 21-2-1988 இரவு 11-23 கொழும்பு) 

துலாம் லக்னமாகி, லக்னாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று, அரசுப் பணியைக் குறிக்கும் சூரியன் தன்னுடைய வீடான சிம்மத்தை பார்த்து வலுப்படுத்தி, வளர்பிறைச் சந்திரனோடு இணைந்த குருவும் சிம்மத்தை பார்த்து சுபத்துவப் படுத்துவதால் உனக்கு அரசுப் பணி கிடைக்கும். நடைபெறும் ஜீவனாதிபதி சந்திர தசையில், சுக்கிரனோடு இணைந்து ஆறுக்குடைய குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவின் புக்தியில் 2020-ல் அரசுப் பணி உண்டு. வாழ்த்துக்கள். 

சதாசிவம், சங்கம்பாளையம். 

கேள்வி. 

மன வேதனையோடும், கண்ணீரோடும் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். 1984-ம் வருடம், (மாதம் ஞாபகமில்லை) புதன்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் எங்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது. எட்டு வயது கழித்து இந்த பெண்ணிற்கு வலிப்பு நோய் ஏற்பட்டு, இன்றுவரை அனைத்து நரம்பியல்துறை டாக்டரிடமும் வைத்தியம் பார்த்து வருகிறோம். இன்னும் பூரண குணமாகவில்லை. இந்த நோயினால் படிக்க வைக்கவும் முடியவில்லை. திருமண வயதும் கடந்து விட்டது. இந்தப் பெண்ணினால் நாங்கள் படும் துன்பமும், துயரமும் கொஞ்ச நஞ்சமல்ல. திடீர் திடீரென வலிப்பு வரும்போது கால் தடுமாறி கீழே விழுந்து பாதத்தில் அடிபட்டு, தற்போது வாக்கரை பிடித்துக்கொண்டு ஒருவரின் துணையோடுதான் நடக்கிறாள். இவளுக்கு எப்போது குணமாகும்? யாருடைய உதவியும் இல்லாமல் நடக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகும்? 

பதில். 

ஜோதிடம் என்பது நான்கும், நான்கும் எட்டு என்பது போன்ற சில விதிகளையும், கணிதங்களையும் கொண்டு பலன் எனும் விடை சொல்வது. இதில் ஓரளவிற்காவது தெளிவான பதில் சொல்வதற்கு, பிறந்த தேதி, மாதம், வருடம், நேரம் ஆகியவை கண்டிப்பாகத் தேவை. இவை இல்லாவிட்டால் துல்லியமான பதில் சொல்ல முடியாது. 

அதேநேரத்தில் உங்களைப் போல பிறந்த விபரம் இல்லாததால் ஜாதகம் எழுதாதவர்களுக்கு பதில் சொல்வதற்கென வேதஜோதிடம் ஆரூடம் எனும் ஒரு முறையை வகுத்துத் தந்திருக்கிறது. அதன்படி இப்போது உங்கள் கேள்வியை நான் படித்த நேர கிரகநிலைகளைக் கணக்கில் கொண்டதில் மகளுக்கு 48- வயது வரை இந்த நோய் பூரணமாக குணம் அடைவதற்கு தடை இருக்கிறது. 

அதே நேரத்தில் 2020-ம் வருடம் ஜூலை மாதத்திற்கு பிறகு ஓரளவிற்கு நோய் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். தற்போது இருக்கும் அளவிற்கு அடிக்கடி வலிப்பு வராது. கால்களும் அதன் பிறகே குணமாகும். 2020-ம் ஆண்டிற்குப் பிறகு மகள் பிறருடைய துணையின்றி ஓரளவிற்கு நடப்பாள். வாழ்த்துக்கள். 

எம். பத்மாவதி, கும்பகோணம். 

கேள்வி. 

தையல் வேலை செய்து வருகிறேன். கணவர் இறந்துவிட்டார். ஆறு வயதில் ஆண் குழந்தை உள்ளது. பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். ஆதரவற்ற விதவை சான்றிதழ் வாங்கி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கிறேன். கால்நடைத்துறையில் அரசு வேலை வாங்கி தருகிறேன் பணம் கொடுங்கள் என்று தெரிந்தவர் ஒருவர் கேட்கிறார். கடன் வாங்கிக் கொடுக்கலாமா? என்னையும், எனது குழந்தையையும் பார்த்துக் கொள்கிறேன், மறுமணம் செய்து கொள் என்று பெண் கேட்கிறார்கள். வயதான பெற்றோர் திருமணம் செய்து கொள் என்று சொல்கிறார்கள். செய்து கொள்ளலாமா? அப்படிச் செய்தால் என் ஆறு வயது ஆண் குழந்தைக்கு இடையூறு இல்லாமல் இருக்குமா? முக்கியமாக எனது குழந்தையை வருபவர் வேற்றுமை பார்க்காமல் பார்த்துக் கொள்வாரா? தங்களின் பொன்னான பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். என் குழந்தையின் ஜாதகப்படி கெட்டியான ஆயுளுடன் இருப்பானா? 

பதில். 

(மேஷ லக்னம், சிம்ம ராசி, 1-ல் சுக், செவ், 2-ல் சூரி, புத, 4-ல் குரு, 5-ல் சந், சனி, ராகு, 11-ல் கேது, 4-6-1979 அதிகாலை 2-50 கும்பகோணம்) 

மேஷ லக்னத்திற்கு நன்மைகளைச் செய்யும் பாக்கியாதிபதியான குருவின் தசை இன்னும் சில வாரங்களில் உனக்கு ஆரம்பிக்க உள்ளதால் நீ தாராளமாக இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். தற்போது உனக்கு 39 வயதுதான் ஆகிறது. அடுத்து வரும் காலங்கள் மிகவும் முக்கியமானவை. பெற்றோருக்குப் பிறகு கண்டிப்பாக உனக்கு ஒரு ஆதரவு வேண்டும். தாம்பத்ய சுகத்திற்காக இல்லாவிட்டாலும், வயதான காலத்தில் ஒரு தலைவலி மாத்திரை வாங்கிக் கொடுப்பதற்காகவாவது நமக்கென ஒரு ஆண் துணை வேண்டும். மறுமணம் செய்து கொள். நன்றாக இருப்பாய். 

அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்துடன், கடந்த காலங்களில் சனியுடன் இணைந்து உன்னை தொல்லைப் படுத்திய ராகுவின் தசை முடிகிறது. அதன்பிறகு ஆரம்பிக்க இருக்கும் உச்ச குருவின் தசையில் உனக்கு இரண்டாவது திருமணம், நல்ல வேலை போன்ற நல்லவைகள் நடந்து உன்னுடைய பழைய கசப்புகளை மறக்கச் செய்யும். 

ராசிக்கு பத்தாமிடத்தில் சூரியன் இருப்பதாலும், சிம்மத்தில் அமர்ந்த ராகுவின் தசை முடியப் போவதாலும், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்திற்கு பத்தாமிடத்தைப் பார்க்கும் உச்ச குருவின் தசை ஆரம்பிக்க இருப்பதாலும், உனக்கு அரசு வேலை கிடைக்கும் அமைப்பு உள்ளது. அதற்காக கடன் வாங்கி லஞ்சம் கொடுக்க வேண்டுமா என்பதை யோசிக்கவும். சிம்மத்தில் இருக்கும் ராகுவின் தசை முடியப் போவதால் அரசு வேலைக்கு தடையில்லை. மகனின் ஜாதகப்படி எட்டில் சுக்கிரன் அமர்ந்து, எட்டுக்குடையவன் வலுவாகி, சனியும் நன்றாக இருப்பதால் அவனுக்கு கெட்டியான ஆயுள்தான். வாழ்த்துக்கள். 

க. ராமர், பேரையூர். 

கேள்வி. 

10 மற்றும் 12 வது வகுப்பு பொதுத்தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய, மாநில ஆட்சிப்பணி தேர்வுகளுக்கு தயாராகி வருகிறேன். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறுவேனா? என் லட்சியம் நிறைவேறுமா? தங்களின் வழிகாட்டுதலான பதிலை எதிர்பார்க்கிறேன். 

பதில். 

(விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, 1-ல் சந், 2-ல் ராகு, 3-ல் சனி, 4-ல் சுக், செவ். 5-ல் சூரி, புத. 8-ல் கேது, 10-ல் குரு, 23-3-1992 இரவு 10-8 மதுரை) 

அரசுப்பணியைக் குறிக்கும் ராஜராசியான சிம்மத்தில் குரு அமர்ந்து சிம்மாதிபதி சூரியனுடன் பரிவர்த்தனையாகி இருக்கிறார். லக்னாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து, குருவின் பார்வையில் அமர்ந்து சுபத்துவமாகி அவரும் சிம்மத்தைப் பார்க்கிறார். சிம்மத்தோடு குரு,சுக்கிரன், செவ்வாய், சூரியன் தொடர்பு கொள்வது அரசுப் பணிக்கு ஏற்ற ஒரு அமைப்பு. 

சிம்மமும், சூரியனும் சுபத்துவமானால் ஒருவருக்கு அரசுப்பணியில் தீவிரமான ஈடுபாடு வரும். உனது விருச்சிக ராசிக்கு கடந்த ஐந்து ஆண்டு காலமாக நல்லவை நடக்க தடை இருப்பதால், அடுத்த வருடம் மே மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்க இருக்கும் கேது தசை, குரு புக்தியில் உனக்கு அரசு பற்றிய நல்ல தகவல்கள் இருக்கும். எதிர்காலத்தில் உயர்ந்த அரசு வேலையில் இருப்பாய். வாழ்த்துக்கள்.

2 comments :