வி. குணசீலன், புதுச்சேரி-7
கேள்வி.
ஜோதிடத்தின் மீது எனக்கு இருந்த அவநம்பிக்கையை போக்கி, உண்மையான ஜோதிடத்தை உணர்த்திய ஜோதிடச் சக்கரவர்த்திக்கு பணிவான வணக்கம். வழக்குரைஞராக பணியாற்றி வருகிறேன். இந்த இடத்திற்கு வருவதற்கு பல்வேறு போராட்டங்களை கடந்திருக்கிறேன். நினைப்பது வேறு நடப்பது வேறு என்றபடி, எதிர்பாராமல் சட்டக்கல்லூரியில் சேர்ந்து, ஐந்து ஆண்டு படிப்பை ஏழாண்டு பயின்று, தற்போது மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டம் பெற்றிருக்கிறேன். இன்றுவரை தொழிலில் முன்னேற்றமின்றி பயிற்சியில் தான் இருக்கிறேன். குடும்ப சூழ்நிலை காரணமாக பயிற்சியும் முழுமை பெற முடியாமல் நடுவழியில் நிற்கிறது. ஆனால் மனமோ இந்தத் தொழிலின் மூலம்தான் அனைத்தையும் பெற வேண்டும் என்று எண்ணுகிறது. வழக்குரைஞர் தொழிலின் மூலம் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை தேவைகளை முழுமையாக அமைத்துக் கொள்ள முடியுமா? சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக வாழ முடியுமா? எப்போது பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்? நீதிபதியாகும் எனது கனவு நிறைவேறுமா? எனது எதிர்காலம் பற்றி அறிய விரும்புகிறேன். (இங்கே இருக்கும் வாக்கிய பஞ்சாங்க ஜோதிடரால் பிறந்த நேரம் ஏழு நிமிடம் அதிகமாக கூட்டி ஜாதகம் கணிக்க பட்டிருப்பதாக என் தந்தை கூறியிருக்கிறார்).
பதில்
(தனுசு லக்னம், ரிஷப ராசி, 1ல் சனி, 3ல் ராகு, 6ல்சந், 7ல் குரு, 9ல் கேது, 10ல் சூரி, புத, செவ், 11ல் சுக், 21-9-1989 பகல் 11-20 புதுக்கோட்டை)
வழக்கறிஞர் ஆவதற்கான ஜாதக அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை கடந்த சில வாரங்களுக்கு முன்பு “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளில் மாலைமலரில் எழுதி இருக்கிறேன். அதன்படி குருவும். சனியும் ராசி, லக்னத்திற்கு இரண்டு, பத்தாமிடங்களோடு சுபத்துவமாகி தொடர்பு கொள்ளும்போது ஒருவரால் வழக்கறிஞராக முடியும்.
அதன்படி உங்களுக்கு தனுசு லக்னமாகி, ராசிக்கு இரண்டில் குரு அமர்ந்து, அந்த இரண்டாமிடத்தை குருவின் பார்வை பெற்ற சனி பார்த்து, லக்னத்திற்கு பத்தாம் இடத்தை சனி பார்க்க, ராசிக்கு பத்தாமிடத்தை குரு பார்ப்பதால் நீங்கள் வழக்கறிஞராக இருக்கிறீர்கள். லக்னம், லக்னாதிபதியால் பார்க்கப்பட்டு, ஜீவன ஸ்தானத்தில் இரண்டு கிரகங்கள் திக்பலமாகி, வலுப்பெற்ற தர்மகர்மாதிபதி யோகம் அமைந்த யோக ஜாதகம் உங்களுடையது, நடக்கும் அஷ்டமச்சனி முடிந்ததற்கு பிறகு 2020ஆம் ஆண்டு முதல் யோகம் செயல்பட ஆரம்பிக்கும்.
ஜாதகப்படி தனுசு லக்னாமாகி ராசிக்கு பத்தாமிடத்தோடு குரு தொடர்பு கொள்வதால் உறுதியாக நீதிபதி பதவியை பெறுவீர்கள். லக்னம் வலுத்து யோக ஜாதகமாகி, தர்மகர்மாதிபதி யோகம் இருப்பதாலும், அடுத்தடுத்து யோக தசைகள் வர இருப்பதாலும், சமூகத்தில் மதிப்பு மிக்க மனிதராக இருப்பீர்கள்.
வேறு ஒரு காரணத்திற்காக சொல்லப்பட்ட ஆண்காலம், பெண்காலம் என்பதை வாக்கிய பஞ்சாங்க ஜோதிடர்கள் தவறாக புரிந்துகொண்டு, ஆண் காலத்தில்தான் ஆண் குழந்தை பிறக்கும் என்று பிறந்த நேரத்தை திருத்துவது தற்போது உங்கள் பகுதியில் குறைந்து கொண்டுதான் வருகிறது. ஜாதகம் கணிக்க பிறந்த நேரம் கொடுக்கும் பெற்றோர்கள் சொன்ன பிறந்த நேரத்தின்படி ஜோதிடர் ஜாதகம் எழுதி இருக்கிறாரா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது
(20.11.2018 மாலை மலரில் வெளிவந்தது)
No comments :
Post a Comment