Tuesday, November 20, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள்- 214 (20.11.18)

கா. சமஸ்கனி, மதுரை-2 

கேள்வி. 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன். தெளிவான பதிலையும் எதிர்பார்க்கிறேன். அஸ்ஸலாமு (அலை) (வரஹ்). இறைவனின் மிகப்பெரிய அருள்கொடையாகிய சாந்தியும், சமாதானமும் தங்களின் மீதும், தங்கள் முன்னோர் பெருமக்கள் மீதும், உங்கள் வழித்தோன்றல்கள் மீதும் உண்டாவதாக... ஐயா.. அறுபத்தி இரண்டு வயதான நான் இதுநாள் வரைக்கும் வாழ்வில் பட்ட கஷ்ட, நஷ்டங்கள், துயரங்கள் கொஞ்சநஞ்சமல்ல. துன்பங்கள் ஏராளம். ஒரு ஹோட்டலில் வேலை செய்கிறேன். இப்பொழுது இந்த வேலைக்கும் ஆபத்தாக இருக்கிறது. ஊண். உறக்கம் இல்லாமல் மன நடுக்கத்தோடு வாழ்கிறேன். சுக்கிரதசையின் பிற்பகுதியாவது நிம்மதியைக் கொடுக்குமா? சுபிட்சம் கிடைக்குமா? மகன் அந்திம காலத்தில் கவனித்துக் கொள்வானா? உதவிகள் செய்வானா? சாகும்வரை ஜீவனம் தடையின்றி கிடைக்க ஜாதகத்தில் வழி உண்டா? எப்போது மறு உலகம் செல்ல முடியும்? பாராமுகமாக இருந்துவிடாமல் பதில் தர வேண்டுகிறேன். 
பதில். 

(மிதுன லக்னம், கும்ப ராசி, 3ல் குரு. 6ல் ராகு, சனி, 7ல் செவ், 9ல் சூரி, சந், புத, 11ல் சுக், 12ல் கேது, 12-3-1956 பகல் 12-50 மதுரை) 

“அவன் கொடுப்பதை எவராலும் தடுக்க இயலாது, அவன் தடுத்ததை எவராலும் கொடுக்க முடியாது. யா.. அல்லாஹ் உனையன்றி இவ்வுலகில் வேறெதுவும் உன்னதம் கிடையாது” என்பது புனித குர்ஆன் சொல்வதுதானே... இதைத்தானே வேறுவகையில் கர்மாவின்படி அனைத்தும் நடக்கிறது என்று ஜோதிடம் சொல்கிறது? 

ஒரு ஜாதகத்தில் ராகு பாபத்துவம் பெற்று அதன் தொடர்புகள் கொண்ட கிரகங்களின் தசை வரும்போது ஒரு மனிதனுக்கு முன்னேற்றம் இருக்காது. அந்தத் தொடர்பு விடுபடும் நிலையில்தான் முன்னேற்றம் ஆரம்பிக்கும். இத்தனைக்கும் மிதுன லக்னத்திற்கு ராகு மட்டுமே யோகர் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். 

உங்கள் ஜாதகப்படி மிதுன லக்னத்திற்கு ஆகாத செவ்வாயின் வீட்டில் ராகு அமர்ந்து சனியுடன் இணைந்து ஆறாம் வீட்டில் இருக்கிறார். லக்னம் ராகுவின் நட்சத்திரத்தில் அமைந்திருக்கிறது. பத்து வயதில் ஆறாமிடத்தில் ராகுவுடன் இணைந்த சனியின் தசை, அதன்பிறகு 46 வயது வரை ராகுவின் நட்சத்திரத்தில் அமர்ந்த லக்னாதிபதி புதன் தசை, அதன்பிறகு சனியின் பார்வை பெற்ற கேதுவின் தசை, தற்பொழுது கேதுவின் நட்சத்திரத்தில் அமர்ந்த சுக்கிரதசை என கிட்டத்தட்ட அந்திம காலம் வரை ஆறாமிடத்தோடு தொடர்பு கொண்ட சுபத்துவமே இல்லாத ராகு-கேதுக்களின் தொடர்பு தசைகள் நடந்ததால் உங்களுக்கு முன்னேற்றம் என்பதே இல்லாமல் போய்விட்டது. 

அதேநேரத்தில் லக்னாதிபதிக்கும், ராசிக்கும், தசாநாதனுக்கும் குருபார்வை இருப்பதால் சாப்பாடு, துணிமணிக்கு பஞ்சமின்றி ஏதோ ஒரு வேலை மூலம் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும். சுக்கிர தசையின் பிற்பகுதி உங்களுக்கு சற்று நிம்மதியாகவே இருக்கும். ஐந்தாம் அதிபதி, ஐந்தாம் வீட்டை பார்த்து, குரு அதிநட்பு ஸ்தானத்தில் அமர்ந்து, புத்திர ஸ்தானாதிபதியை குரு பார்ப்பதால் கடைசிவரை மகன் உங்களை கவனித்துக் கொள்வான். இனி நடக்க இருக்கும் சூரிய, சந்திர தசைகளும் குருவின் பார்வையில் இருப்பதால், உங்களின் அந்திம காலம் சோதனைகள் இல்லாமல் அமைதியாகவே இருக்கும். வாழ்வின் இறுதிவரை வேலை செய்துதான் தீருவீர்கள். வாழ்த்துக்கள். 

எஸ். கவிதா, பீளமேடு. 

கேள்வி. 

பக்கத்து வீட்டு சகோதரியால் நீங்கள் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டீர்கள். பிறந்த உடனே தந்தையை இழந்து, தாயால் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்ட எனக்கு 20 வயதில் திருமணமாகி, அத்தனை கனவுகளும் தவிடுபொடியானது. குடிகார கணவரால் வாழ்க்கை பாழாகி, அம்மாவிற்காக வாழ்ந்ததில் ஆண் பெண் என இரண்டு குழந்தைகள் கிடைத்தன. மகனும் தகப்பனைப் போலவே குடிக்கிறான். பெண்ணே எனக்கு பெரிய வரம். அவளைப் படிக்க வைக்கவே வேலைக்குச் சென்றேன். நன்றாக படிக்கிறாள். படிப்புக்காக வாங்கிய கடன் வட்டி வட்டியாகி இன்றுவரை 4 லட்சம் ஆகிவிட்டது. 23 வயது மகனும், கணவரும் கடனுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லி விட்டார்கள். மகனோ, கணவனோ மாதம் 500 ரூபாய் கூட தருவதில்லை. கடனை அடைப்பதற்காக வெளிநாட்டில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்து 17-10-2018 அன்று துபாய் செல்லப் போகிறேன். எப்போது கடன் அடையும்? எப்போது வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவேன்? என்னைப் போலவே மகளின் வாழ்வும் ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. மகளுக்கு நல்ல கணவர் அமைவாரா? மகளுக்கும் வெளிநாட்டில் வேலை கிடைக்குமா? மீதமுள்ள வாழ்க்கையும் இப்படியேதான் கழியுமா? பதில் தெரியாமல் தவிக்கிறேன். பிழைக்க வழி காட்டுங்கள். 

பதில் 

(தாய் 25-10-1973 காலை 10-20 பாலக்காடு, மகள் 31-1-1998 காலை 7-45 திருச்சூர்) 

தனுசு லக்னமாகி லக்னாதிபதி நீசமடைந்து, ஏழாமிடத்திற்கு எவ்விதமான சுபத் தொடர்புகளும் கிடைக்காமல், லக்னத்திற்கு ஏழில் சனி, கேது, ராசிக்கு எட்டில் செவ்வாய் என்றாகி, ஏழாம் வீடு வலுவற்றுப் போனதால் உங்களின் திருமண வாழ்க்கை பற்றி சிறப்பாக சொல்வதற்கு இல்லை. 

வெளிநாட்டைக் குறிக்கும் எட்டாமதிபதி பத்தாம் வீட்டில் அமர்ந்து, தற்போது சனி தசையில் கேது புக்தி ஆரம்பித்திருப்பதாலும், பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரன் புதன் என இரண்டு சுபக்கிரகங்கள் அமர்ந்திருப்பதாலும், பன்னிரெண்டாம் அதிபதி ஆட்சிநிலையில் உள்ளதாலும் நீங்கள் சில வருடங்களாவது வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டி இருக்கும். 

கடனை அடைப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்ற நீங்கள் நல்ல சம்பளம், நல்ல வேலை என்று அந்த வெளிநாட்டு வேலையை தொடர்வீர்கள். உங்களைப்போல மணவாழ்க்கை சரியாக அமையாத ஜாதகம் மகளுக்கு இல்லை. அவளது ஜாதகப்படி ஏழாமிடத்தை வளர்பிறைசந்திரனும். குருவும் இணைந்து பார்த்து ஏழாமிடம் நன்றாக இருப்பதால் மகளுக்கு நல்ல கணவர் அமைவார். மகளுக்கும் அடுத்து எட்டு, பன்னிரெண்டாமிட தொடர்புகளோடு அமைந்த புதன் தசை வர இருப்பதால் வெளிநாட்டில்தான் வேலை அமைப்புகள் இருக்கும். இனிமேல் நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள். 

ஏ. இளங்கோ, அல்லிநகரம். 

கேள்வி. 

இதுவரை 15 கடிதங்கள் எழுதி அனுப்பி விட்டேன். பதில் அளிக்கவில்லை. அருள்கூர்ந்து இந்த முறையாவது எனது கடிதத்திற்கு பதில் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பதில் நிச்சயம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்தான் தொடர்ந்து கடிதம் எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே நம்பிக்கையில் மாலைமலரை எதிர்பார்க்கிறேன். 

பதில் 

பல வாரங்களுக்கு முன்பே உங்களின் இந்தக் கேள்விக்கு பதில் கொடுத்திருக்கிறேன். கேள்வியை அனுப்புபவர்கள்தான் தொடர்ந்து பதில் வருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். இது ஒரு பொதுவான சேவை. தினமும் ஏராளமான கடிதங்கள் வருகின்றன. அதில் நான் ஐந்து அல்லது ஆறு கடிதங்களுக்கு மட்டுமே வாரம் ஒருமுறை பதில் தருகிறேன். கேட்கும் அனைவருக்குமே பதில் தரவேண்டும் என்பது சாத்தியமற்றது. 

வரும் கேள்விகள் அனைத்தையும் நான் படித்தாலும், மிக முக்கியமான, பதில் நிச்சயமாக தேவைப்படும் கடிதங்களுக்கு நான் பதில் தந்து கொண்டுதான் இருக்கிறேன். கேள்வியை அனுப்பி விட்டு மாலைமலரை பார்க்காமல் இருந்து விட்டால் அதற்கு நான் பொறுப்பாக மாட்டேன், பழைய மாலைமலர் இதழ்களை தேடிப் பிடித்து படித்துப் பாருங்கள். உங்களுக்கான பதில் அதில் இருக்கிறது. 

எம். கருப்பசாமி, கோபாலபுரம். 

கேள்வி. 

விவரம் தெரிந்த நாளில் இருந்தே மிகவும் கடன்தொல்லையில் இருக்கிறேன். என்னால் முடிந்த வரை உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் கடன் தொல்லை தீரவில்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது. என் வாழ்வில் எப்போது நல்ல காலம் பிறக்கும்? வாழ்வா சாவா என்ற நிலை இருக்கிறது. நல்ல பதில் சொல்லுங்கள் ஐயா. 

பதில் 

(விருச்சிக லக்னம், கடக ராசி, 1ல் சனி, 5ல் ராகு, 6ல் குரு, 9ல் சந், 11-ல் சூரி, செவ், கேது. 12ல் புத, சுக். 16-10-1987 காலை 9-15 அருப்புக்கோட்டை) 

 ஒருவருடைய ஜாதகத்தில் கடன், நோய், எதிரியைக் குறிக்கும் ஆறாம் பாவகம் அதிகமாக சுபத்துவமாவது தவறு. அப்படி சுபமாகும் நிலையில் அதற்கேற்றார் போல கடன் அல்லது நோய் தொந்தரவுகள் இருக்கும். உங்கள் ஜாதகப்படி சுபரான குரு ஆறில் அமர்ந்திருக்கிறார். சுக்கிரனும் புதனும் ஆறாமிடத்தைப் பார்க்கிறார்கள். ஆறாமிடம் அதிகமாக சுப வலுப்பெற்றதால் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கடன் தொல்லைகள் இருந்துதான் தீரும். 

தவிர 21 வயதுவரை எட்டுக்குடையவன் தசையும், அதன்பிறகு புதனின் வீட்டில் அமர்ந்த கேது தசையும், தற்போது புதனோடு சேர்ந்த சுக்கிர தசையும் நடந்து வருகிறது. விருச்சிக லக்னத்திற்கு புதனோடு தொடர்பு கொண்ட கிரகங்கள் மேன்மையை செய்வதில்லை. நடக்கும் சுக்கிர தசையில் அடுத்த வருடம் மார்ச் மாதம் சுயபுத்தி முடிந்ததற்கு பிறகு கடன்கள் கட்டுக்குள் இருக்கும்படியான வருமானம் ஓரளவுக்கு வரும். 38 வயதிற்கு பிறகு கடனை நினைத்து பயப்படாமல் இருப்பீர்கள். வாழ்த்துக்கள். 

No comments :

Post a Comment