Wednesday, October 17, 2018

மனைவி நடத்தை தவறியது ஏன்?- குருஜியின் விளக்கம் astro jothidakkalai arasu adhithya guruji

எம். முருகேசன். சென்னை.

கேள்வி :

அரசுப் பணியில் இருக்கிறேன். சில தப்பான ஆட்களுடன் அம்மா தொடர்பில் இருக்கிறார் என்று மகள் சொன்னபோது அதிர்ந்து போனேன். இது நிரூபிக்கப்பட்டவுடன் வீட்டை விட்டு மகளுடன் வெளியேறி விட்டேன். எனக்கு ஏன் இப்படி நடந்தது? பக்கத்திலேயே இருந்தும் எனக்கு தெரியாமல் போனது ஏன்?
“ஐந்து வயதிலேயே உன் நண்பனோடு அம்மாவைப் பார்த்திருக்கிறேன் அப்பா, அப்போது முதல்தான் அம்மா என்னை அடித்து உதைக்க ஆரம்பித்தார். 12 வயதில் மறுபடியும் இன்னொரு ஆளோடு பார்த்ததை (அவனும் என் நண்பன்தான்) கேள்வி கேட்டதற்குத்தான் அப்பாவாகிய உன்னிடம் கூட சொல்லாமல் அடித்து உதைத்து ஹாஸ்டலில் சேர்த்தார்கள். 

இதை உன்னிடம் சொன்னால் நீ எதுவும் செய்து கொள்வாயோ என்று பயந்துதான் உன்னிடம் சொல்லவில்லை. இப்போது 23 வயதில் மறுபடியும் அதே ஆளோடு ஒரு அம்மாவை மகள் பார்க்கக் கூடாத கோலத்தில் நேருக்கு நேராக பார்த்து விட்டேன். முன்புதான் நான் சின்னப்பெண். இப்போது எல்லாம் தெரிந்தபிறகு உன்னிடம் சொல்லாமல் இருக்க முடியவில்லை. இனி உன் பெண்டாட்டியை நம்பாதே. வா.. எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளலாம்.” என்று மகள் சொன்ன பிறகு பெண்ணை நம்பி வெளியே வந்து விட்டேன்.

பேப்பரைப் பார்த்தால் கள்ளக்காதலால் கணவன் கொலை என்று தினசரி நான்கு நடக்கிறது. என் உயிரை விட பெண்ணின் உயிரையாவது காப்பாற்றுவோம் என்று வெளியே வந்து விட்டேன். இந்த முடிவு சரியா தவறா என்று தெரியவில்லை. ஆனால் உறுதியாக இருக்கிறேன். “இப்போதுதான் உன்னோடு சந்தோஷமாக இருக்கிறேன் அப்பா... இவ்வளவு நாள் நரகத்தில் இருந்தேன்” என்று மகள் சொல்கிறாள். இதுவரை மனைவியோ, மாமியாரோ எங்களைத் தேடவில்லை. என் பெயரில் இருக்கும் வீட்டை எழுதி வாங்கி விட்டால் நானும், பெண்ணும் ஆக்சிடெண்டில் செத்து விட்டார்கள் என்று நினைத்துக் கொள்கிறோம் என்று பக்கத்து வீட்டில் சொல்லி இருக்கிறார்கள். அவர்களது மனநிலைக்கு இது ஒரு உதாரணம்தான்.

இனி என்ன நடக்கும் என்று எதுவுமே புரியாத நிலையில் தவித்து வருகிறேன். உடல், மனம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். மிகவும் குழப்பமாக இருக்கிறது. பலமுறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன். பெண் என்னுடன் வந்த பிறகு அந்த எண்ணம் இல்லை. ஒரு வாழும் சித்தரிடம் சென்று அழுது முறையிட்டபோது போன ஜென்மத்தில் ஒரு ஐயர் பெண்ணையும், தாழ்த்தப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியிருக்கிறாய் அதனால்தான் இப்படி நடக்கிறது. இதற்கு மேல் கேட்காதே என்று சொல்லி அனுப்பி விட்டார். இது கதையா, கற்பனையா என்றும் தெரியவில்லை. இதை ஜாதகத்தில் கண்டு பிடிக்க முடியுமா? உன் மாமியார் செத்த பிறகு 2020 க்கு மேல் உன் மனைவி காலில் வந்து விழுவாள் என்றும் அந்த சித்தர் சொல்லி இருக்கிறார். மாலைமலரில் உங்களை தொடர்ந்து படிக்கிறேன். மேன்மைமிகு குருஜி அவர்களே... நீங்கள் ஒருவரே இதற்கு சரியான பதில் தரமுடியும். தங்களின் ஆராய்ச்சிக்காக என் மனைவியும், விருச்சிக ராசி, என் மனைவியோடு தொடர்புடைய என் நண்பர்கள் மூன்று பேருமே விருச்சிக ராசி என்ற தகவலை கூடுதலாக தருகிறேன்.

பதில் :


சுக்

பு
சூ

கே

கணவன்
28-4-1961 காலை
11-30
நாகை


செ

குரு
சனி

ரா

சந்

சனி


செ

மனைவி
16-12-1971 காலை
11-06 சென்னை

கே

ரா

சுக்
சூ

சந்
பு கு

{கணவன் 28-4-1961 காலை 11-30 நாகை, மனைவி 16-12-1971 காலை 11-06 சென்னை)

வாழ்க்கையில் எல்லா விஷயங்களுக்கும் நேரடியான பதில் கிடைத்து விடுவதில்லை. கிடைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இரண்டு பெண்களுக்கு முற்பிறவியில் நீங்கள் துரோகம் செய்து இருக்கிறீர்கள் என்று அந்த வாழும் சித்தர் சொன்னது உண்மையாக இருக்கலாம் அல்லது நீங்கள் நினைப்பதைப் போல கற்பனையாக இருக்கலாம். இதை நிரூபிக்க முடியாது. ஏற்றுக் கொள்வதும் மறுத்துத் தள்ளுவதும் நம்மிடம்தான் இருக்கிறது. ஜோதிடம் இதைத்தான் சென்ற பிறவியில் செய்த கர்மா என்று சொல்கிறது. நான் ஆன்மீகவாதி அல்ல.

எதிர்காலம் உள்ளிட்ட மூன்று காலங்களும், கடந்த, இந்த, அடுத்த பிறவி பற்றிய உண்மைகளும் ஜோதிடத்தில் ஒளிந்து கிடக்கின்றன என்றுதான் இந்த மாபெரும் கலை நமக்கு உணர்த்துகிறது. பிரபஞ்சமும், சூரியனும், சூரியனால் பிறந்த பூமியும் ஒரு ஒழுங்கான கட்டமைப்பிற்குள், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட ஒரு நியதிப்படி, ஒரே பாதையில் முறையாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதேபோலத்தான் மனிதனின் வாழ்க்கையும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட சம்பவங்களின்படி ஒரு ஒழுங்கான விதிக்கு உட்பட்டு சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது.

450 கோடி வருடங்களுக்கு முன்பு பிறந்த இந்த சூரியன், பூமி போன்ற கிரகங்களை பிரசவித்து, இன்னும் 400 கோடி வருடங்களுக்கு பிறகு கண்டிப்பாக இறந்து போகும் என்று விஞ்ஞானம் தீர்க்கமாக, உறுதியாக சில பௌதிக விதிகளை வைத்துச் சொல்லுகிறது. ஜோதிடமும் அப்படித்தான். இந்த நேரத்தில் பிறந்த நீ... இன்னாருடன் இணைந்து, இந்தக் குழந்தைகளைப் பெற்று, இப்படி வாழ்ந்து, இந்த நாளில் இறந்து போவாய் என்று சில மறைபொருள் விதிகளை வைத்து தீர்க்கமாக, துல்லியமாக சொல்லுகிறது. “நடக்கும் அனைத்தும் பரம்பொருளின் செயல்” என்பதைத் தவிர என்னிடம் வேறு பதில் எதுவும் இல்லை.

ஜாதகப்படி கடக லக்னமாகி, பத்தாமிடத்தில் சூரியன் உச்சமாக இருப்பதால் அரசு வேலையில் இருக்கிறீர்கள். லக்னத்திற்கு ஏழில் குரு அமர்ந்து, ராசிக்கு ஏழில் உச்ச சுக்கிரன் இருப்பதால் நீங்களே குறிப்பிட்டதைப் போல உங்கள் மனைவி அழகானவர்தான். அதேநேரத்தில் ஏழில் சனியும் அமர்ந்து, ஏழாமிடத்தை நீச செவ்வாய் பார்த்து, ஏழில் நீசன் சம்பந்தப்பட்டு, தொடர்புடைய கிரகங்களின் தசையும் பாபத்துவ அமைப்போடு நடக்குமாயின் ஒருவரின் மனைவி நடத்தை தடுமாறுவார்.

ஏழாம் இடத்தோடு பாபத்துவ நீச கிரகம் தொடர்பு கொண்டு, சரியான பருவத்தில், குறிப்பிட்ட தசைகளும் நடக்குமாயின் மனைவியின் கற்புக்கு உத்தரவாதம் இல்லை. உங்களுக்கு 1993 முதல் கடந்த 25 வருடங்களாக ஏழாமிடத்தில் நீசனாகி, சனி, செவ்வாயுடன் இணைந்த குருவின் தசை நடந்ததால் மனைவி ஒழுக்கம் தவறியது உண்மைதான். ஏழாமிடத்திற்கும், அதன் அதிபதிக்கும் நீச இணைவு, நீசனின் பார்வை உள்ளதால் குருவின் தசை ஆரம்பித்த உடனேயே மனைவி நடத்தை தவறிவிட்டார்.

மனைவியின் ஜாதகப்படி அவருக்கு கும்ப லக்னமாகி, ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடத்தில் சனி அமர்ந்து, லக்னத்தில் அமர்ந்த பாபத்துவ செவ்வாய் கற்பு ஸ்தானமாகிய நான்காமிடத்தைப் பார்த்து, ஆறுக்குடைய பாவியாகிய நீச சந்திரனும் நான்கைப் பார்க்கிறார். மனோகாரகன் சந்திரன் நீசமானதால் மனதை கட்டுப்படுத்த இயலாமல் உடல் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் உங்கள் மனைவி. ஏழாமதிபதி சூரியன் சுக்கிரனுடன் இணைந்திருப்பது அதிகமான சிற்றின்ப ஆசையையும், அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையை நீச சந்திரனும் காட்டுகிறார்கள்.

சிறுவயதிலேயே அம்மாவை தகாத நிலையில் பார்த்தேன் என்று உங்கள் மகள் சொல்லும் காலகட்டத்தில் மனைவிக்கு நீச சந்திரனின் வீட்டில் அமர்ந்த கேதுவின் தசை நடந்து கொண்டிருந்தது. அதன் பிறகு தற்போது வரை நீசனோடு இணைந்த குருவின் வீட்டில் உள்ள சுக்கிர தசை நடந்து கொண்டிருக்கிறது. மனைவியின் ஜாதகப்படி கற்பு ஸ்தானமான, நான்கில் செவ்வாய், சனி இருவரும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவரது நடத்தை இப்படித்தான் இருக்கும்.

மனிதனின் எல்லா பிரச்னைகளுக்கும் நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு முடிவு இருந்துதான் தீரும். அதன்படி உங்களுடைய பிரச்சனைக்கும் ஒரு தீர்வு வரத்தான் செய்யும். 2022ல் மனைவியின் சுக்கிரதசை முடிந்தவுடன் இதற்கு தீர்வு கிடைக்கும். அதை நான் இங்கே விளக்க முடியாது. அதுவரை ஓய்வுப்பொழுதை மகளுடன் நிம்மதியாக கழியுங்கள். மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துத் தருவதில் மனதை திருப்புங்கள். இயலாவிட்டால் யோகா. தியானம் போன்றவற்றின் மூலமாக மனதை அமைதி பெறச் செய்யலாம். வாழ்வின் அந்திம காலத்தில் நிம்மதியாகவே இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

(16.10.2018 மாலை மலரில் வெளிவந்தது)

1 comment :

  1. வணக்கம் ஐயா,கணவரின் ஜாதகத்தில் குருவும்,செவ்வாயும் லக்ன கேந்திரம் பெற்றுள்ளார்களே.நீச பங்கம் ஆகாதா?

    ReplyDelete