Friday, October 19, 2018

2018 Aypasi Matha Palankal – 2018 ஐப்பசி மாத பலன்கள்



மேஷம் :



மேஷத்தின் யோகாதிபதி சூரியன் மாதம் முழுவதும் நீசநிலையில் இருந்தாலும் சுக்கிரனுடன் இணைந்து நீசபங்க அமைப்பில் இருப்பதால் உங்களுக்கு நன்மைகள் நடக்க தடையில்லை. எனவே ஐப்பசி மாதம் முழுவதும் எந்த விதமான பணச்சிக்கல்களோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு இருக்காது என்பது உறுதி. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும்.



பெண்களுக்கு பணிபுரியும் இடங்களில் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு பதவி உயர்வுகள் உண்டு. மாமியார் உங்கள் பேச்சை கேட்பார். கணவர் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார். மாணவர்கள், தொழிலாளர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், போன்ற அனைவருக்கும் நல்ல மாதம் இது. அரசு தனியார்துறை ஊழியர்கள் கலைஞர்கள் சுயதொழில் செய்பவர்கள், விமான நிலையங்களில் பணிபுரிவர்கள், இன்ஜியர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட துறையினருக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் நடைபெறும்.



கணவன் மனைவி உறவு சுமுகமாய் இருக்கும். மனைவிக்கு ஏதேனும் நல்ல பொருளை பரிசளிக்க முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வீடு வாகனம் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று வாங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். ஒரு சிலர் இந்த மாதம் வாங்கவும் செய்வீர்கள். வேலை தொழில் வியாபாரம் போன்ற இனங்களில் சில எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும். வியாபாரிகள் வேலைக்காரர்களை மட்டும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.



ரிஷபம் :



ஐப்பசி மாதம் முழுவதும் ரிஷபநாதன் சுக்கிரன் ஆறில் அமர்ந்து ஆட்சிவலு அடைவது உங்களுக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களும், லாபங்களும், இருக்கும். அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் போது ராசிநாதன் வலுப்பெறுவதால் எவ்வித பிரச்னைகளையும் சுலபமாகவும், புத்திசாலித்தனத்துடனும் எதிர் கொள்வீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு எதிர்மறை பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும்.



மேம்போக்காகப் பார்க்கும் போது அஷ்டமச்சனி என்பது கெடுபலன்களைத் தருவதாகத் தெரிந்தாலும், சனிபகவான் இந்த கால கட்டத்தில் உங்களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதையும் நல்லவர் யார்? நம்மை விரும்பாதவர் யார்? நமக்கு வேண்டியவர் யார் என்பதையும் தெளிவாக்குவார். மேலும் பணத்தை எவ்வாறு கையாள்வது என்பதையும் சொல்லிக் கொடுத்து பணத்தின் அருமையையும் புரிய வைப்பார். எனவே மேற்கண்ட அனுபவங்களைக் கொண்டு எதிர்காலத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.



ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கவலைகள் எதுவும் இல்லாத பிரச்சினைகள் அற்ற வாழ்க்கை அமையும் என்பது உறுதி. குடும்பத்திலும், தொழில் இடங்களிலும் ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். நல்லவர் போல் நடித்து குடும்பத்தில் நாரதர் வேலை பார்ப்பவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவீர்கள். சுக்கிரன் வலுப்பெறுவதால் குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடக்கும். தடைபட்டு வரும் சுபகாரியங்கள் சட்டென்று முடிவாகி ‘ஜாம்ஜாம்’ என்று நடைபெறும்.



மிதுனம் :



மிதுனநாதன் புதன் ஐப்பசி மாதம் நீச சூரியனுடன் இருந்தாலும், அங்கே சுக்கிரனும் இருப்பதால் இந்த மாதம் நல்லமாதமே. எதிர்கால நன்மைகளுக்கான சில மாற்றங்களும் இந்த மாதம் உண்டு. ராசிநாதன் பலம் பெறுவதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு பஞ்சமில்லை. சிலருக்கு வாழ்க்கைத்துணையுடன் யாத்திரை மற்றும் பிரயாண அனுபவங்கள் இருக்கும். பதவிஉயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் உங்கள் சாதுர்யத்தை வெளிப்படுத்துவீர்கள்.



புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே.



நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.



கடகம் :



மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் இரண்டுக்குடைய தனாதிபதி சூரியனும், சகாய ஸ்தானாதிபதி புதனும் இணைந்திருப்பதால் இந்தமாதம் கடகத்திற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றின் மூலம் நன்மைகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். ராசியில் இருக்கும் ராகு இனம் தெரியாத கலக்கத்தை தருவார் என்பதால் எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. பெண்கள் விஷயத்தில் நன்மைகள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பொதுவில் மேன்மைகளை தரும் மாதம் இது.



வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருக்கும். புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ இது நல்ல நேரம். சிலருக்கு வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். சிலர் நீண்ட தூர பிரயாணங்கள் செய்வீர்கள். மூன்றாம் மனிதரின் தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும். யாராவது ஒருவர் கோபப்படாமல் பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு சிறிய விஷயம் பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.



சொல்லிக் கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால் வேலை செய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து போவது நல்லது. இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் இப்போது அமையும். கடகத்திற்கு இது நல்ல மாதம்தான்.



சிம்மம் :



சிம்மநாதன் சூரியன் மாதம் முழுவதும் நீசம் பெறுவது சிறப்பான நிலை அல்ல என்றாலும், அவர் பெரும்பகுதி நாட்கள் நீசபங்க அமைப்பில் இருப்பதால் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. ஏழில் அமர்ந்து ராசியைப் பார்க்கும் செவ்வாயால் பிரச்சனைகளை சுலபமாக சமாளிக்கும் மனோபலமும், சக்தியும் உங்களுக்கு கிடைக்கும் என்பதால் சிம்ம ராசிக்கு பின்னடைவுகள் எதையும் சொல்வதற்கு இல்லை. பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் லாபம் உண்டு.



தையல் கலைஞர்கள் சந்தோஷப்படும் அளவிற்கு இந்த மாதம் வருமானம் உண்டு. வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகள் இருக்கும். சிலருக்கு பிடிக்காதவர்களிடம் இருந்து பணவரவு கிடைக்கும். பிரச்சினைகள் எதுவும் இருக்காது. வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் பணவிவகாரங்கள் இந்த மாதம் முடியும். சிம்மத்திற்கு இனி சிறப்புகள் மட்டுமே.



பத்தாமிடம் பலம் பெற்று அமைவதால் இனிமேல் தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடைபெறும். அரசுப் பணியாளர்கள், சிகப்பு நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இது அமோகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம்.



கன்னி :



மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன், சுக்கிரன் இருவரும் தனஸ்தானத்தில் இணைந்து வலுவான நிலையில் இருப்பதால் ஐப்பசி மாதம் உங்களை பொருத்தவரையில் விசேஷமான மாதம்தான். தனாதிபதி சுக்கிரன் வலுவாக இருப்பதால் எதிர்பாராத பணவரவுகளும், வேலை, தொழில், வியாபாரம் போன்றவற்றில் நல்ல வருமானங்களும் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய அமைப்பும் இந்த மாதம் உண்டு. பெண்களால் லாபம் இருக்கும். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும்.



பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது. ஆறாமிடத்தில் செவ்வாய் அமர்வதால் எதிர்ப்புகளை ஜெயிப்பீர்கள். கடன் தொல்லைகள் இருக்காது. நடுத்தர வயதுக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும்.



செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. ராசியை சனி பார்ப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும்.



துலாம் :



துலாம் ராசிக்கு இது நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். ஏற்கனவே உங்கள் மூலமாக உதவிகள் பெற்ற ஒருவர் அந்த நன்றிக்கடனை இப்போது திருப்பிச் செலுத்தும் மாதம் இது. மாதம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி வலு அடைவதாலும், சனிபகவான் சுபத்துவம் பெறுவதாலும் துலாமுக்கு இனி துன்பங்கள் இல்லை. கடந்த சில வருடங்களாக உங்களுக்கு என்ன கிடைக்கவில்லையோ அது இப்போது கிடைக்கும்.



நல்ல வேலை கிடைக்காத இளையபருவத்தினர் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் உண்டு. யோகக்கிரகங்கள் வலுவாக இருப்பதால் நினைக்கும் காரியத்தை வெற்றிகரமாக சாதித்துக் காட்ட முடியும்.



தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாத முற்பகுதியில் சுமாரான பலன்களும் பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.பணவிஷயத்தில் கவனம் தேவை. வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். பணவரவுகள் நன்றாக இருக்கும் என்றாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.



விருச்சிகம் :



விருச்சிக ராசிக்கு இந்த மாதம் நல்ல மாற்றங்கள் இருக்கும். இனிமேல் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். ராசியில் இருக்கும் குரு சோதனைகளை தடுத்து நிறுத்தி உங்களை பாதுகாப்பார் என்பதால் எதிலும் முட்டுக்கட்டைகளை சந்தித்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்தமாதம் நல்வழி திறக்கும். இனிமேல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் வாழ்க்கை சுமுகமாகச் செல்லும். இதுவரை இருந்த எதிர்மறை பலன்கள் உங்களை விட்டு விலகுவதை விருச்சிகத்தினர் உணரும் மாதம் இது.



ஐப்பசி மாதம் விருச்சிக ராசிக்கு ஏமாற்றங்களையோ, நெருக்கடிகளையோ தராத மாதமாகவே இருக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இதுவரை எல்லா விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் விலகும். அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். மற்றவர்களைப் போல ஒரு அதிர்ஷ்டமான வாழ்க்கைக்கு திரும்புவீர்கள். இனி எல்லாம் உங்களுக்கு சுகம்தான்.



நேர்மையாக உழைக்கத் தயங்காத விருச்சிக ராசியில், சுறுசுறுப்புக்கு அடையாளமான தேளை சின்னமாகக் கொண்டு பிறந்தவர் நீங்கள். உங்கள் சின்னத்தைப் போலவே நீங்களும் இனி சுறுசுறுப்பாவீர்கள். கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு மன நிம்மதி இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தினர் இனிமேல் ஆனந்தமாய் இருப்பீர்கள். கவலை வேண்டாம். பரம்பொருள் ஒருபோதும் உங்களைக் கைவிட மாட்டார். இதுவரை தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் இந்த மாதம் முதல் கிடைக்கும்.



தனுசு :



மாதம் முழுவதும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடம் வலிமையாக இருப்பதால் இருப்பதால் தனுசு ராசிகாரர்களுக்கு இது பொருளாதார நன்மைகளைத் தரும் மாதமாக இருக்கும். சூரியன் நீசத்தில் இருப்பதால் அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள்.



நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வருதல் இப்போது நடக்கும். கலைஞர்களுக்கு சிறப்பு நற்பலன்கள் இந்த மாதம் உண்டு. வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். வீண் ஈகோவை தவிர்ப்பதால் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு.



நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் திருப்புமுனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். ஏழரைச்சனி நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும்.



மகரம் :



ஐப்பசி மாத ஆரம்பத்தில் மகர ராசியின் யோகாதிபதிகளான புதனும் சுக்கிரனும் பத்தாம் இடத்தில் இணைந்திருப்பது மேன்மைகளை தரும் ஒரு அமைப்பு என்பதால் இந்த மாதம் குடும்பத்தில் சந்தோஷப்படக்கூடிய நிகழ்ச்சிகளும், தொழிலில் பணவரவு மற்றும் பொருளாதார மேன்மைகளும் உள்ள மாதமாக இருக்கும். எட்டுக்குடைய சூரியன் நீசமாவதால் கடந்த காலங்களில் நடந்த பிரச்னைகளில் இருந்து நீங்கள் மீண்டு வரும் மாதமாகவும் இது இருக்கும்.



உங்களில் சிலருக்கு விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு.



சிலருக்கு அப்பாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகலாம். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள்.



கும்பம் :



ஐப்பசி மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் யோகாதிபதிகள் புதனும், சுக்கிரனும் வலுவான அமைப்பில் இருப்பதால் உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி ஆதரிக்கும் மாதமாக இது இருக்கும். சிலருக்கு எதிர்பாராத ஆட்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். ராசிநாதன் சனியும் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். ராசியில் செவ்வாய் இருப்பதால் தேவையற்ற வகையில் யாரையாவது விரோதம் செய்து கொள்வீர்கள். பேச்சில் கவனமாக இருங்கள்.



குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும். சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் பலத்த போட்டியைச் சந்தித்தவர்கள் இனிமேல் போட்டியாளர் விலகுவதைக் காண்பீர்கள். வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.



வேலை செய்யுமிடங்களில் நல்லபலன்கள் இருக்கும். படிப்பு முடிந்து வேலைக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகள் கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். குருபகவான் ராசியை பார்ப்பதால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இனி வரப்போவது இல்லை.



மீனம் :



ஐப்பசி மாதம் மீனத்திற்கு ஆனந்த மாதமாக இருக்கும். குறை என்று சொல்வதாக இருந்தால் எட்டில் மறையும் சூரியன் தொழில் ரீதியில் செலவுகளைத் தருவார் என்பதால் யோசித்து செலவு செய்வது நல்லது. அதேநேரம் ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பதால் பெரிய அளவில் செலவுகள் எதுவும் வரப்போவது இல்லை. அதற்கேற்ற வருமானமும் உண்டு. பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நீங்கி, இனி நல்ல பலன்கள் நடக்கும்.



சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டு கிடைக்கும். எட்டில் சுக்கிரன் இருப்பதால் தொழில் இடங்களில் கவனமாக இருங்கள். சீட்டுப் பிடிப்பவர்கள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்துபவர்கள், பணம் அதிகம் புரளும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வங்கித்துறையினர் போன்றவர்களுக்கு நன்மைகள் நடக்கும். கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் உண்டு.



எட்டில் மூன்று கிரகங்கள் கூடுவதால் சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். சிலருக்கு ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். வாய் தவறி வரும் ஒரு சொல்லால் கசப்புகள் வரும். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.


No comments :

Post a Comment