Friday, October 12, 2018

உச்சம் தொட வைக்கும் “கிரக மாலிகா யோகம்” D-028 Uchcham Thoda Vaikkum "Kiraga Malaika Yogam"..!.


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ஜோதிடத்தில் “பூரக ஜாதகம்” என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. பூரகம் என்ற சொல்லிற்கு துணை என்று பொருள். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்குப் பின்பு ஜெயா-சசிகலா இருவரின் நட்பினை விளக்கும்போது இந்த அமைப்பினைக் குறிப்பிட்டிருக்கிறேன். 

வாழ்க்கையில் திருமணம், தொழில், அல்லது நட்புரீதியாக இருவர் இணையும் போது இந்த பூரக ஜாதக நிலை ஏற்படுகிறது. ஒரு புதிய உறவு ஏற்பட்டதன் பிறகு உண்டாகும் வளர்ச்சியைக் கூட இந்த அமைப்பில் சேர்க்கலாம். உதாரணமாக, ஒரு குழந்தை பிறந்த பின்பு அதன் தந்தை உயர்வடைவதை பூரக ஜாதக அமைப்பில் சொல்லலாம். 

சிலர் திருமணத்திற்குப் பின்பு அல்லது குழந்தை பிறப்பிற்குப் பின்பு வாழ்வில் நல்ல நிலைக்குச் சென்றிருப்பார்கள். கணவன்-மனைவி அல்லது குழந்தை வந்ததற்குப் பிறகு, அதாவது குறிப்பிட்ட ஜாதகங்கள் இணைந்த பிறகு அங்கே அதிர்ஷ்டம் செயல்படுவதாக ஜோதிடம் தெளிவுபடுத்துகிறது. 

திருமணமாகும்வரை சாதாரண நிலையிலிருந்து, பிறகு வாழ்வில் மிக உயரத்திற்குச் சென்றுள்ள ஒரு மிகப்பெரும் கோடீஸ்வர பெண்மணியின் ஜாதகத்தை கீழே கொடுத்திருக்கிறேன். இவருடைய கணவரும் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்தவர்தான். இவரைத் திருமணம் செய்ததில் இருந்து கணவரின் வளர்ச்சி ஆரம்பமானது. இந்த யோகப் பெண்மணியின் ஜாதகத்தில், உயர்வான “கிரகமாலிகா யோகம்” இருக்கிறது. 

ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரகமாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது. 

ஒன்பது கிரகங்களும் தனித்தன்மையானவை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான இயல்புகள் இருக்கின்றன. கிரகங்கள் அனைத்தும் மற்றவற்றுடன் இணையாமல், சுயத்தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுபலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகமே ஒரு உயரிய தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பிக்கும். இது கிரகமாலிகா யோகத்தில் மட்டுமே சாத்தியமாகும்.

இந்த யோகத்தின்படி பெரும்பான்மையான கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்று பலவீனங்களை அடையாது. குறிப்பாக, பகைக்கிரகங்கள் ஒரு பாவகத்தில் இணையும்போது அந்த பாவக பலன்கள் ஜாதகருக்கு முழுமையாகக் கிடைக்காது. நட்புக் கிரகங்கள் இணைவது யோகம்தான் என்றாலும் அதில் கிரகங்களின் கலப்பு பலன்கள்தான் ஜாதகருக்கு கிடைக்கும். கிரகங்களின் சுய இயல்பு பலன்கள் கிடைக்காது. கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல் வரிசையாக அமர்வதே இந்த யோகத்தின் சிறப்பு.



ராகு

 


சனி

 


சுக் 


புத

 



 1
8-7-1969
பகல் 3.30 நெல்லை


சூரி

 

 


சந்

 


செவ்

 

குரு கேது

உதாரண ஜாதகத்தில் குரு, கேது ஆகிய இரண்டு கிரகங்களைத் தவிர வேறு எந்தக் கிரகமும் இன்னொரு கிரகத்துடன் இணையவில்லை. பெரும்பாலான ஏழு கிரகங்களும் தனித்தனியாக தங்களுடைய சுய இயல்புடன், ஆட்சி வலிமையுடன் இருக்கின்றன. இது ஒரு சிறப்பான யோக நிலை. 

கிரகமாலிகா யோகத்திலும் சில விதிகள் உள்ளன. அதில் எந்த பாவகத்தில் இருந்து எந்த பாவகம் வரை கிரகங்கள் வரிசையாக அமைந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும் என்பதும் ஒன்று. அதன்படி மனிதனுக்கு தேவையற்ற விஷயங்களைக் கொடுக்கும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவகங்களில் தொடங்கி இந்த யோகம் அமையுமானால், அது பெரிய நன்மைகளைச் செய்வதில்லை. கேந்திர, திரிகோணங்களிலிருந்து, இந்த யோகம் அமையுமானால் மிகப்பெரிய நன்மைகளைத் தருகிறது. 

இந்த செல்வந்தப் பெண்மணியின் ஜாதகத்தில், அதிர்ஷ்ட ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் வீட்டில் இருந்து, லாப வீடான 11-ம் வீடு வரை கிரகங்கள் வரிசையாக அமர்ந்து மாலை போன்ற இந்த யோகத்தை உண்டாக்குகின்றன. இது ஒரு உன்னதமான அமைப்பு.

அனைத்திலும் மேலாக இந்த அமைப்பில், இந்த ஜாதகத்தின் பெருங் கோணத்திற்கும், பெருங் கேந்திரத்திற்கும் உரியவர்களான தர்ம, கர்மாதிபதிகள் சூரியனும், சந்திரனும் பரிவர்த்தனையாகி, யோகத்திற்குள் இன்னொரு யோகமாக மிக மேன்மையான தர்ம,கர்மாதிபதி யோகமும் இருக்கிறது. 

பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஆட்சி பலத்தை அடையும் என்பதன்படி இங்கே சூரியனும், சந்திரனும் ஆட்சி எனக் கொள்ளலாம். அதன்படி இந்த ஜாதகத்தில் செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் நேரடியாக ஆட்சி பெற்று, மற்ற கிரகங்களுடன் இணையாமல் சுயத்தன்மையுடன் அமர்ந்து, தங்களுடைய காரகத்துவங்களை ஜாதகருக்கு முழுமையாகத் தரும் நிலையில் இருக்கிறார்கள். ஊன்றிக் கவனித்தால் இங்கே ஐந்து கிரகங்கள் ஆட்சி என்ற நிலை உண்டாகிறது. 

நான் அடிக்கடி சொல்லும் லக்னாதிபதி வலு இந்த ஜாதகத்தில் பூரணமாக அமைந்திருக்கிறது. எத்தனை யோக ஜாதகமாக இருந்தாலும் லக்னாதிபதி வலுவில்லை என்றால் அந்த ஜாதகம் செயலற்றுப் போய்விடும். அந்த ஜாதகத்தில் யோகம் செயல்படாது. ஜாதகரும் யோகத்தை அனுபவிக்க முடியாது. 

லக்னாதிபதி சனி, செவ்வாய் போன்ற பாபர்களாக அமைந்தால், அவர்கள் ஆட்சி, உச்சம் என நேர்வலு பெறுவதைவிட என்னுடைய “பாப கிரகங்களின் சூட்சுமவலு கோட்பாட்டின்”படி சூட்சுமவலுவோ, அல்லது சுபத்துவமோ அடைந்திருந்தால் மட்டுமே அந்த பாபக் கிரகம் நன்மைகளைச் செய்வதற்கு தகுதி பெறும்.

இந்த யோக ஜாதகத்தில் பாபரான செவ்வாய் லக்னத்தில் ஆட்சி பெற்றாலும், தனித்த சுக்கிரனின் பார்வையைப் பெற்று சுபத்துவமாகி இருக்கிறார். பார்வை தரும் சுக்கிரன், அவருக்கு மிக நெருக்கமாக, எப்போதும் வலம் வரும் சூரியன் மற்றும் புதனுடன் இணையாமல் சுயத்தன்மையுடன் பூரணபலம் பெற்று, ஆட்சி நிலையிலிருந்து லக்னாதிபதி செவ்வாயைப் பார்த்து சுபத்துவப்படுத்துகிறார் எனவே இங்கே லக்னாதிபதி ஜாதகத்தில் இருக்கும் யோகங்களை அனுபவிக்கும் தகுதியை ஜாதகருக்கு அளிக்கும் நிலையில் இருக்கிறார். 

எளிமையான குடும்பத்தில் பிறந்து, நடுத்தர வர்க்கத்துக்கே உரிய வகையில் வளர்ந்து, கல்லூரிப் படிப்பை முடித்த இந்தப் பெண்ணிற்கு சூரிய தசையில் திருமணம் ஆன பிறகே யோகங்கள் செயல்பட ஆரம்பித்தன.

இவரது ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் ஏழாம் அதிபதி சுக்கிரன் எவ்வித பங்கமும் இன்றி தனித்து ஆட்சி பெற்று, இந்த ஜாதகத்தின் யோகாதிபதியாகிய குருவின் ஒன்பதாம் பார்வையைப்  பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏழாம் பாவகம் மிகுந்த சுபத்துவம் அடைந்தது. இரண்டு உன்னத சுபர்களின் மூலம் உயர்நிலை சுபத்தன்மை அடைந்த ஏழாம் பாவகத்தினால், திருமணத்திற்குப் பிறகு இவருக்கு யோகம் செயல்பட ஆரம்பித்தது. 

மனைவிக்கு நல்ல யோகம் இருக்கின்ற நிலையில், அவரது கணவருக்கும் இதே போன்ற அமைப்பு இருந்துதான் ஆக வேண்டும். நமது கலாச்சாரத்தின்படி கணவரும், மனைவியும், குழந்தைகளும் வேறுவேறாக இருந்தாலும் ஒரே உயிராக, ஒரே குடும்பமாகத்தான் கருதப்படுவார்கள். ஏனெனில் குடும்பத்தலைவன் பாதிக்கப்பட்டால் அந்தக் குடும்பமே பாதிக்கப்படும் என்பது கண்கூடு. 

கணவன் பாதிக்கப்படும்போது மனைவி பாதிக்கப்படுகிறாள். தந்தை பலவீனமாகும்போது குழந்தைகளும் நன்றாக இருக்க மாட்டார்கள். இந்த நிலையினால்தான் மனைவி மற்றும் ஒன்றுமறியா குழந்தைகளுக்கு அஷ்டம, ஏழரைச்சனி நடக்கும்போது குடும்பத்தலைவன் கடன், நோய் போன்றவைகளால் கஷ்டப்படுகிறான். நமது கலாச்சாரத்தின்படி குடும்பத்தினர்கள் அனைவருக்கும் ஒரேநேரத்தில்தான் நல்லவைகளோ, சாதகமற்றவைகளோ ஆரம்பிக்கும். 

ஜாதகம் எத்தனை யோகமாக இருந்தாலும் தசா,புக்தி அமைப்புகளே ஒரு  மனிதனின் உயர்வு, தாழ்வுகளை நிர்ணயிக்கின்றன. மேம்போக்காக ஒரு ஜாதகம் வலுவான அமைப்பில் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் ஜாதகர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், அது யோகத்தை தரக்கூடிய கிரகங்களின் தசை வராமல் இருப்பதால்தான் இருக்கும். ஒரு கிரகம் நல்லநிலையில் இருந்தாலும் அதன் தசை வராமல் போனால் ஜாதகருக்கு பயன் இல்லை. 

தசா,புக்தி அமைப்புகளே வாழ்க்கையில் செயல்களை நடத்தி நம்மை உயர்வுக்கோ, தாழ்வுக்கோ கொண்டு செல்கின்றன. உதாரண ஜாதகிக்கு விருச்சிகம் லக்னமாகி, பிறப்பு முதன் அவயோகரான சுக்கிரனின் திசை 19 வருடங்கள் வரை நடந்ததால் கல்லூரிப் பருவம் வரை இவர் ஒரு நடுத்தரமான வாழ்க்கைதான் வாழ முடிந்தது. 

பரிவர்த்தனை பெற்ற கர்மாதிபதியான சூரியனின் தசையில் இவரது திருமணம் நடந்த பிறகு இவருக்கு அதிர்ஷ்டம் செயல்பட ஆரம்பித்து, இவரது கணவர் தொழில் நிலைகளில் உச்சம் தொட ஆரம்பித்தார். 25 வயதிற்கு பிறகு ஆரம்பித்த சந்திர தசை முதல் இவர்களது வாழ்க்கையில் நற்பலன்கள் நடக்க ஆரம்பித்தன. இன்றுவரை அது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இறுதிவரை அது நீடிக்கும்.

தசா,புக்தி அமைப்புகளே ஒரு மனிதனுக்கு முக்கியம் எனும்போது, தசை நடத்தும் கிரகம் யோக நட்சத்திரங்களில் அமர்ந்திருப்பது அதைவிட முக்கியமான ஒன்று. சாரம் என்று சொல்லப்படும் தசாநாதன் அமரும் நட்சத்திரங்களின் வழியில்தான் ஒரு மனிதனுக்கு பலன்கள் நடக்கின்றன. 

ஒரு ஜாதகத்தில் 1,5,9 ஆகிய மூவர் மட்டுமே அதிர்ஷ்ட நிலையை நிர்ணயிக்கிறார்கள். இந்த மூவரும் நல்ல இடத்தில் அமர்ந்து, இவர்களின் நட்சத்திரங்களில் கிரகங்கள் அமர்ந்து தசை நடத்துமாயின், சந்தேகத்திற்கிடமின்றி யோக பலன்கள் நடக்கும். 

உதாரண யோக ஜாதகத்தில் சூரியன், புதன், ராகு ஆகிய மூவரும் யோகரான குருவின் நட்சத்திரத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அந்த குருவும், கேதுவும் தர்மகர்மாதிபதிகளில் ஒருவரான சூரியனின் நட்சத்திரத்தில் இருக்கிறார்கள். பிறந்ததிலிருந்து தசை நடத்திய சுக்கிரன் பாக்கியாதிபதி வளர்பிறை சந்திரனின் நட்சத்திரத்தில் இருக்கிறார். ஆக ஆறு கிரகங்கள் 5, 9, 10 க்குடையவர்களின் சாரத்தில் இருப்பதால் இது முதல்தர யோக ஜாதகமாகிறது.

இந்த ஜாதகிக்கு தற்போது ராகுதசை நடந்து கொண்டிருக்கிறது. ராகு, சுபரான குருவின் வீட்டில் அமர்ந்து, குருவின் பார்வையையும் பெற்றிருக்கிறார். ராகுதசை முடிந்தபிறகு இவருக்கு யோகரான குருவின் தசை நடக்க ஆரம்பிக்கும். வாழ்வின் முதுமைக் காலம்  முழுவதும் குருவின் தசை நீடிக்கும். 

இவரது அந்திம காலத்தில் வரும் சனிதசை மட்டுமே பிறப்பில் அமைந்த சுக்கிர தசை போல அவயோக தசையாக இருக்கும். கிரக மாலிகா யோகத்தின் மூலம் முதன்மை பெற்ற யோக ஜாதக அமைப்பு இது.

அடுத்த வெள்ளி தொடருவோம்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment