ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி
கைப்பேசி: 8681 99 8888
மகரம்:
சுக்கிரன் பத்தாமிடத்தில் வலுப்பெற்ற நிலையில் இருப்பதால் மகர ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் வரும் மாதம் இது. ஆனால் ஏழரைச் சனி நடப்பதால் அதை உபயோகப்படுத்திக் கொள்ள முடியாமல் வீணடிப்பீர்கள். உங்களின் கவனம் சிதறும் மாதம் இது. தேவையற்ற விஷயங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இளைஞர்கள் எதிர்காலத்திற்குரிய விஷயங்களை செய்யாமல் வயதுக்குரிய காதல் போன்ற விஷயங்களில் சக்தியை இழப்பீர்கள். எதிலும் அக்கறையுடன் இருக்க வேண்டிய மாதம் இது. எந்த ஒரு விஷயத்திலும் இது நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். காரணம் எதுவுமின்றி எதையாவது நினைத்து கலக்கமடைவீர்கள்.
ராசிநாதனுக்கு வீடு கொடுத்த குரு லாபத்தில் இருப்பதால் எதுவும் கைமீறிப் போகாமல் சமாளிப்பீர்கள்.. சிலருக்கு அலைச்சல்களும் எதிர்காலத்தை பற்றிய பயங்களும் இருக்கும். பெரியவர்களுக்கு காரியத்தடையும், சுற்றி உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்களும் உண்டு. பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும். விரயங்கள் வரும். சூதாட்டம், லாட்டரி சீட்டு போன்றவைகளை நம்ப வேண்டாம். தாயார் வழியில் செலவுகள் வரலாம். தாயாரின் உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். குருபகவான் லாபத்தில் இருப்பதால் பணப்பிரச்னைகள் எதுவும் வராது. வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபங்கள் இருக்கும்.
திருமணமாகாத மகர ராசிக்காரர்களுக்கு திருமணம் கைகூடி வரும் நேரம் இது. பொதுவாக மகரத்தினர் களையாக அழகாக இருப்பார்கள். அழகுணர்ச்சி மிக்கவர்கள் நீங்கள். நீண்ட நாட்களாக திருமணம் தாமதமாகி வருபவர்கள் இன்னும் ஒரு வருடத்தில் வாழ்க்கைத் துணையோடு இணைவீர்கள். சிலருக்கு ஆலய திருப்பணிகளில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நடுத்தரவயதை கடந்தவர்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண்அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதனால் சிக்கல்கள் வரலாம். சிலருக்கு இளைய சகோதர்களால் வீண் விரயங்களும் செலவுகளும் இருக்கும். வியாபாரிகள் மந்தமான ஒரு நிலையை சந்திப்பீர்கள்.
1,4,5,8,9,10,24,25 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம் தேதி அதிகாலை 1.16 முதல் 4-ம் தேதி அதிகாலை 4.26 வரையும் மாத இறுதியில் 29-ம் தேதி காலை 6.38 முதல் டிசம்பர் 1-ம் தேதி காலை 10.04 வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்க்கவும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.
No comments :
Post a Comment