Tuesday, September 4, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 203 (04.09.18)

ஆர்.எம். சிராஜுதீன், கோவை.

கேள்வி :

47 வயதில் பிறந்த மகன் வளர வளர செய்யும் பிரச்சினைகள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. அவனால் எத்தனையோ முறை அவமானப்பட வேண்டியதாகி விட்டது. படிப்பு சுமார்தான். பரீட்சை ஹாலில் 40 மார்க் அளவிற்கு தேர்வு எழுதி விட்டு தூங்கி விடுகிறான். எப்போது வேண்டுமானாலும் தூங்குகிறான். இவன் எதிர்காலம் என்ன ஆகும் என்று பயமாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சென்று இவனுக்காக பிரார்த்தனை செய்தாகி விட்டது. இவனது எதிர்காலம் பற்றி தயவு செய்து கூறுங்கள்.


பதில் :


ல கு ரா

22.9.2001
இரவு
11.30
கோவை

சுக்

செ கே

சந்

பு

சூ

(மிதுன லக்னம், விருச்சிக ராசி, 1ல் குரு, ராகு. 3ல் சுக், 4ல் சூரி, 5ல் புத, 6ல் சந், 7ல் செவ், கேது 22-9-2001 இரவு 11-30 கோவை)

ஏழரைச்சனி நடக்கும்போது வயதிற்கேற்ற பலன்கள் நடக்கும் என்பது விதி. அதன்படி பதினேழு வயது பையனுக்கு சோம்பல் அதிகமாக இருக்கும். தன்னை அறியாமலேயே அதிகமாக தூங்க வேண்டும் போலத்தான் இருக்கும். தூங்குவதும் உண்டு. மகனின் விருச்சிக ராசிக்கு ஜென்மச்சனி விலகி விட்டதால் இனிமேல் அவனது படிப்பில் முன்னேற்றம் இருக்கும்.
மகனைப் பற்றி அதிகமாக கவலைப்படும் அளவிற்கு ஜாதகத்தில் ஒன்றுமில்லை. மிதுன லக்னமாகி, லக்னத்திலேயே குரு அமர்ந்து, ஐந்தில் வர்கோத்தமம் பெற்றுள்ள லக்னாதிபதி புதனைப் பார்ப்பதாலும், அம்சத்தில் கிரகங்கள் நல்ல அமைப்பில் இருப்பதாலும், எதிர்காலத்தில் யோகதசைகள் வர இருப்பதாலும் 2020 முதல் மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.

சங்கீதா, நாவலூர்.

கேள்வி :

குழந்தை பாக்கியத்திற்காக வின் டிவியில் தாங்கள் கூறிய தட்சிணாமூர்த்தி வழிபாட்டின் மூலம் பயனடைந்தவர்களில் நானும் ஒருத்தி. தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். இது முதல் பிரசவம் என்பதால் உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ளவர்கள் அறிவுரை என்ற பெயரில் பல்வேறு கருத்துக்கள் கூறி மனதை குழப்புகின்றனர். எனக்கு சுகப்பிரசவமாக இருக்குமா? சில சமயம் பிரசவத்தின்போது இறந்து விடுவேனோ என்றுகூட தோன்றுகிறது. ஒரு பக்கம் குழந்தையை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் தேவையற்ற பயம் மனதில் குடிகொண்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி தங்களை நேரில் வந்து காண முடியாத நிலையில் இருக்கிறேன். அருள்கூர்ந்து தங்களின் பதில் மூலம் எனக்கு நிம்மதி அளியுங்கள் குருஜி.


பதில் : 



கு

சூ

பு சு

செ ரா

1.6.1988
இரவு
8.14
சென்னை

கே

ல சந் சனி

(தனுசு லக்னம், தனுசுராசி, 1ல் சந், சனி. 3ல் செவ், ராகு. 5ல் குரு, 6ல் சூரி. 7ல் புத, சுக், 9ல் கேது. 1-6-1988 இரவு 8-14 சென்னை)

ராகு,கேதுக்கள் தங்களோடு இணைந்த மற்றும் தங்களைப் பார்க்கும் கிரகத்தின் பலனைத் தருவார்கள் என்ற விதிப்படி ஐந்தாம் அதிபதி செவ்வாய், புத்திர காரகன் குரு இருவரது பார்வையைப் பெற்ற கேதுவின் புக்தியில் தாயாகப் போகிறாய் அம்மா.. வாழ்த்துகிறேன்.

உன் ராசிக்கு இப்போது ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதாலும், சனி உன் சொந்த நட்சத்திரமான மூலத்திலேயே சென்று கொண்டிருப்பதாலும் உன்னுடைய இப்போதைய சூழ்நிலைக்கேற்ப மனக்குழப்பங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரசவம் என்பதே ஒரு தாய்க்கு மறு பிறப்பு என்பதால் ஒரு வகையில் நீ நினைப்பது கூட சரிதான்.

வயிற்றில் பிள்ளை இருக்கையில் ஒரு தாய் சந்தோஷங்களைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது. கிட்டத்தட்ட ஒரு முழுமை நிலைக்கு வந்து விட்ட உன் குழந்தை தன்னையறியாது உன் மன உணர்வுகளை கவனிக்கும் திறனோடுதான் இருக்கும். உலகின் மிகவும் பழமையான நமது சாஸ்திரங்கள் இதுபோன்ற நிலையை ஒரு தாய் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே அபிமன்யுவின் கதையை நமக்கு சொன்னது.

புறச்சூழல்கள் எதுவும் இந்த நேரத்தில் உன்னைப் பாதிக்க விடாதே. முடியாவிட்டாலும் மனதை எந்த நேரமும் சந்தோஷமாக வைத்துக் கொள். ஒருபோதும் எதிர்மறை எண்ணங்களை நினைக்காதே. தாயின் எண்ணம் மற்றும் கருவில் இருக்கும் நிலைகளுக்கு ஏற்பத்தான் ஒரு குழந்தையின் குணம் மற்றும் எதிர்காலம் அமைகிறது. உன் குழந்தை அதிர்ஷ்டசாலியாக எதையும் சமாளிக்கக் கூடிய வீரத்துடன் பிறக்க வேண்டும் என்றால் இந்தக் காலகட்டத்தில் நீ வலுக்கட்டாயமாகவாவது சந்தோஷமான மனநிலையில் இருந்துதான் ஆக வேண்டும்.

ஐந்தில் குரு வலிமையுடன் இருப்பதால் ஜாதகப்படி உனக்கு பிறக்கப் போகும் குழந்தை மிகுந்த யோகவானாக, தாயை என்றும் நேசித்துக் காப்பவனாக இருக்கும். அப்படிப்பட்ட குழந்தை பிறக்கும்போதே உனக்கு துன்பத்தை தர துளியும் வாய்ப்பில்லை. உன் பிரசவம் மிகவும் நல்லபடியாக முடியும் அம்மா. கவலைப்படாதே.

எம். தேவராஜ், திருச்செங்கோடு.

கேள்வி :

நடக்கும் ராகுதசை யோகம் தருமா? சினிமாத்துறையில் வெற்றி கிடைக்குமா? ஐந்தில் கேது உள்ளது என் குழந்தைகளைப் பாதிக்குமா? கடன் தொல்லை எப்போது விலகும்? அடுத்து வரும் குருதசை யோகம் செய்யுமா?

பதில் :


கே

கு

7.8.1976
மாலை
5.11
நாமக்கல்

சூ சனி

பு சு செ

ல சந்

ரா

(தனுசு லக்னம், தனுசு ராசி. 1ல் சந், 5ல் கேது, 6ல்குரு, 8ல் சூரி,சனி. 9ல் சுக், புத, செவ். 11ல் ராகு. 7-8-1976, மாலை 5-11 நாமக்கல்)

ஒரு கிரகம் ஒரு வீட்டில் இருந்தாலே அதன் நல்ல, கெட்ட பலன்களை தந்து விடாது. பலனைச் செய்வதற்கு அதன் தசை வர வேண்டும். ஐந்தில் ராகு இருப்பதுதான் கெடுதல். அப்போது கூட ராகுதசை வரவேண்டும். தீமை செய்யும் வலிமை குறைந்த கேது ஐந்தில் இருப்பது குழந்தைகளுக்கு கெடுதல் அல்ல.

தனுசு லக்னத்திற்கு சுக்கிரனும், சுக்கிரனின் வீட்டில், சுக்கிரனோடு தொடர்பில் இருக்கும் கிரகங்களும் நன்மை செய்யாது. நல்லதை தராது என்பதை விட ஆசை காட்டி மோசம் செய்யும். இந்த பலன் நடக்கக் கூடாது என்றால் சுக்கிரனை விட குரு வலிமையாக இருக்க வேண்டும்.

உங்கள் ஜாதகப்படி ராகு பதினொன்றில் இருந்தாலும் அது அவருக்கு சுய பலத்தை அளிக்கும் வீடு அல்ல. மேலும் அவர் சொந்த நட்சத்திரத்தில் இருப்பதும் நன்மை தராது. ராகுவிற்கு குருவின் பார்வை போன்ற சுபத் தொடர்புகளும் இல்லை. ராகு உங்களுக்கு கானல் நீரைத் தரும் அமைப்பில் இருப்பதால் அவரது காரகத்துவமான சினிமாவில் ஆசை காட்டி வாழ்க்கையை வீணடிக்கச் செய்வார். ஜென்மச் சனி நடந்து கொண்டிருப்பதால் இன்னும் மூன்று வருடங்களுக்கு கடன் தொல்லைகள் தீர வாய்ப்பில்லை, அடுத்து வரும் குருதசையும் சுக்கிரனின் ஆறாம் வீட்டில்தான் இருக்கிறது. நீங்கள் கடன் வாங்காமல் இருந்தால் சரிதான்.

1 comment :

  1. ஐயா 13.05.1996 ,10.45 PM , தனுசு லக்னம் , மீன ராசி ,10ல் ராகு நின்று அதனை சந்திரன்,கேது,சனி பார்வை பெற்றுள்ளது.எனக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. சென்றால் நல்லதா இல்லை இங்கே வேலை முயற்சி செய்யலாமா கூறுங்கள் ஐயா...?

    ReplyDelete