ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : +91 9768 99 8888
ஒரு மனிதனை பொய் சொல்ல வைப்பவர் சனி.
அவர் எப்படிப்பட்ட பொய்களைச் சொல்வார் என்பது சனியின் சுபத்துவ, சூட்சும வலுவையும், சனியுடன் இணையும் அல்லது தொடர்பு கொள்ளும் மற்ற கிரகங்களையும் பொருத்தது.
ஒவ்வொருவரும் தினமும் ஏதேனும் ஒருவகையில் எங்கும் பொய் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருவர் வியாபாரம் செய்கிறார் என்றால் சாதுர்யமாக பொய் சொல்லுகிறார் என்றுதான் அர்த்தம். அதேபோல மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் ஒருவர் கிட்டத்தட்ட ஏதேனும் ஒரு வகையில் பொய்யைச் சொல்லித்தான் அந்தப் பொருளை விற்கிறார்.
தொழிலுக்காகவும், சொந்த வாழ்க்கையிலும் ஏதேனும் ஒருவகையில் பொய் சொல்லும் நெருக்கடிக்கு ஒவ்வொருவரும் உள்ளாகிறோம். ஆனால் பொய் சொல்வதை நேரடியாக அங்கீகாரத்துடன் தொழிலாகச் செய்ய வைப்பவர் சனி.
ஒருவர் வழக்கறிஞராக வேண்டும் வேண்டுமெனில், அவரது ஜாதகத்தில் சட்டத்துறைக்கு காரகனான சனி சுபத்துவமாகி, முதன்மை வலுப் பெற்று, நீதித்துறைக்கு காரக கிரகமான குருவின் தொடர்போடு, ராசி அல்லது லக்னத்தின் இரண்டு, பத்தாம் பாவகங்களைத் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
சனி என்பவர் ஒரு வித்தியாசமான கிரகம். மனிதனுக்கு தேவையில்லாத அனைத்தையும் தருபவர் இவர்தான். கலக்கம் தரும் கடன், நோய், வழக்கு, எதிர்ப்பு போன்றவைகளை பாபத்துவம் பெற்ற சனி ஒருவருக்கு முழுமையாகத் தருவார். சுபத்துவம் பெற்ற சனி பொய்யைத் தொழிலாக செய்ய வைப்பார்.
வழக்கறிஞர் என்பவர் தனிப்பட்ட முறையில் உண்மை மட்டுமே பேசக் கூடிய மனிதராக இருக்கலாம். ஆனால் தொழிலிற்காக அவர் பொய் சொல்லித்தான் ஆக வேண்டும். தன்னுடைய கட்சிக்காரர் திருடனாகவும் கொலைகாரனாகவும் இருந்தாலும், அவன் திருடன்தான், கொலைகாரன்தான் என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், இவர் இதனைச் செய்யவில்லை என்று வாதாடி, பொய் சொல்லி அவனை தப்பிக்க வைக்கும் பணியையே ஒரு வழக்கறிஞர் செய்கிறார்.
ஒருவருக்கு பொய் சொல்ல விருப்பமில்லை என்றாலும் அதனை தொழிலுக்காக சொல்ல வைப்பவர் சுபத்துவ மற்றும் சூட்சும வலுப்பெற்ற சனி.
பாபத்துவம் பெற்று இரண்டாம் வீட்டோடு சனி தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவன் வாயில் வருவது அனைத்தும் மகா பொய்களாக இருக்கும். அவன் அண்டப்புளுகனாக, துளியும் மனசாட்சியின்றி அடுத்தவர்களை ஏமாற்றுவதே நோக்கம் கொண்டவனாக இருப்பான். இதில் நான் சொல்லும் சுபத்துவம், சூட்சும வலு ஆகியவற்றின் கூடுதல், குறைவிற்கு ஏற்ப பொய் சொல்லும் தன்மைகளிலும், காரணங்களிலும் மாற்றம் இருக்கும்.
வாக்குஸ்தானமான இரண்டாமிடம் மற்றும் தொழில் பாவகமான பத்தாம் வீட்டோடு சனி, மற்றும் குரு, சூரியன் ஆகியோர் தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவர் சட்டத்துறையில் பணியாற்றுவார்.. இதில் வக்கீலாவதற்குரிய முதன்மை கிரகமான சனி சுபத்துவமாக இருக்க வேண்டும்.
குற்றங்களைக் குறிக்கும் இன்னொரு கிரகமான செவ்வாயின் தொடர்புகளை சனி அதிகமாக பெறும்போது, அவர் எந்நேரமும் குற்றவாளிகளுடன் இருக்கும் கிரிமினல் லாயராகவோ, சுபர்களான சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் சனியுடன் அதிகமாக தொடர்பு கொள்ளும்போது கிரிமினல் இல்லாமல் சிவில் வழக்குகளை மட்டும் கவனிக்கும் வக்கீலாகவோ இருப்பார்.
சனியின் சுபத்துவ, சூட்சும வலுவோடு, ஜாதகத்தின் இரண்டாம் அதிபதியும், அந்த பாவகமும், புதனும் வலுப்பெற்றிருக்கும் நிலையில் தனது வாதத் திறமையால் பிறரால் கவனிக்கப்படக்கூடிய வகையில் ஜாதகர் இருப்பார். இரண்டாம் அதிபதி வலுக் குறைந்திருக்கும் அமைப்பில் வாதத் திறமை குறைந்து எழுத்தில், ஆவண சமர்ப்பிப்புகளின் மூலம் வெற்றி பெறுபவராக இருப்பார்.
கருப்பு என்பது ஒரு நிறமல்ல. உண்மையில் ஒரு இடத்தில் நிறமில்லாத நிலையை மட்டுமே கருப்பு குறிக்கிறது. நிறம் என்பது ஒளியைப் பொருத்தது. ஒளியின் தன்மையைக் கொண்டே நிறங்கள் பிரித்துச் சொல்லப் படுகின்றன. ஒளி மிகவும் குறைந்த கிரகமான சனிக்கு (சனி ஒளி குறைந்த கிரகம்தான். ஒளி முழுவதும் அற்ற கிரகங்கள் ராகு-கேதுக்கள்.) கருப்புக்கு வெகுஅருகில் உள்ள கருநீல நிறம் சொல்லப்பட்டதன் காரணம் இதுவே. இதனால்தான் சனியின் இருட்டைக் குறிக்கும் நிறத்தில் வழக்கறிஞர்கள் மேலங்கி அணிகிறார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் ராசி, லக்னத்திற்கு 12-ல் சனி சுபத்துவமாக அமர்ந்து, தனது மூன்றாம் பார்வையால், வாக்குஸ்தானமான 2-ஆம் வீட்டையோ அல்லது ராசி லக்னத்திற்கு எட்டாம் பாவகத்தில் சுபத்துவ, சூட்சுமவலுவோடு அமர்ந்து இரண்டாம் பாவகத்தோடு தொடர்பு கொள்ளும் போதோ அல்லது வேறு எந்த வகையிலேனும் சுபத்துவம் பெற்று இரண்டு, பத்தாமிடங்களை சனி தொடர்பு கொள்ளும் நிலையில் ஒருவருக்கு வழக்கறிஞர் தொழில் அமையும்.
ஜாதகப்படி ஒருவரின் தொழிலைக் கணிப்பது மிகவும் கடினமான ஒன்று. இதற்கு மிகுந்த ஞானம் தேவைப்படும். தொழிலைக் குறிக்கும் பத்தாவது வீட்டோடு எந்தக் கிரகம் தொடர்பு கொள்கிறது என்பதை மிகமிக நுணுக்கமாக கணிக்க வேண்டியிருக்கும்.
மருத்துவத் துறைக்கு செவ்வாய், குரு, சூரியன் ஆகியோர் முதன்மை கிரகங்கள் என்று ஏற்கனவே நான் விளக்கியுள்ள நிலையில், சட்டத்துறைக்கு சனி, குரு, சூரியன் முதன்மை வகிப்பார்கள். எந்தத் துறையிலும் சிறப்பான அறிவோடு ஒருவரை இருக்க வைக்கும் புதனின் பலம் இவர்கள் மூவருக்குமான அஸ்திவாரமாக இருக்கும்.
சட்டத்துறையிலும் பல வகைகள் இருக்கின்றன ஒருவர் நீதிபதியாக இருக்கிறார், இன்னொருவர் வக்கீலாக இருக்கிறார். இருவருக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. பலவிதமான முரண்பாடுகளும் இந்த பதவிகளில் இருக்கின்றன. ஆனால் நீதிபதிக்கும், வழக்கறிஞருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை, இருவரும் சட்டம் படித்திருக்கிறார்கள் என்பதுதான். அந்த சட்டத்தை படிக்க வைப்பவர் சனி.
ஒருவர் வக்கீலாக பணியாற்றுவதற்கு சட்டத்துறைக்கு முதன்மை கிரகமான சனி, இரண்டாம் நிலை கிரகமான குரு, அடுத்து அரசு தொடர்பை குறிக்கும் சூரியன் ஆகியோர் சனி, குரு, சூரியன் என்ற சுபத் தொடர்பு வரிசைப்படி அமைந்திருக்க வேண்டும்.
சட்டத்துறைக்கு சனியே முதன்மைக் கிரகம் என்றாலும் நீதித்துறைக்கு குருவே முதன்மைக் கிரகமாவார். இங்கே சட்டம் என்பது பொதுவாக இருந்தாலும் சட்டமும், நீதியும் வேறு வேறாகத்தான் இருக்கும். ஒரு வக்கீலின் இறுதிக் கனவு நீதிபதியாக வேண்டும் என்பதாக இருந்தாலும், எல்லா வழக்கறிஞர்களும் நீதிபதியாக விரும்புவதில்லை.
நீதிபதியாகும் வாய்ப்பு வந்தும், வழக்கறிஞராக இருப்பதில் உள்ள வருமானம் நீதிபதி பதவியால் வராது என்பதால் அதனைத் தட்டிக் கழித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களது ஜாதகத்தில் குருவை விட சனியின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். ஒருவர் நீதிபதியாக வேண்டுமெனில் குரு வலுத்து, சனியுடன் தொடர்பு கொண்டு, ராசி, லக்னத்திற்கு பத்தாமிடத்தோடு குருவே முதன்மைத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும். இது போன்ற ஜாதக அமைப்பு கொண்டவர்கள் நீதிபதி ஆவார்கள்.
எந்த ஒரு துறையிலும் ஒருவர் வெற்றி பெற அவரின் லக்னம், லக்னாதிபதி நல்ல அமைப்பில் இருக்க வேண்டும். லக்னாதிபதி நேரடியாக வலுவிழந்த நிலையில் இருந்தால் நீச்ச பங்கம் போன்ற மறைமுக வலுக்களையாவது அடைய வேண்டும்.
லக்னம், லக்னாதிபதி இரண்டும் பலமில்லாத ஒருவர் வாழ்க்கையில் இலக்கின்றி அலைவார். அவரிடம் எதையும் சாதிக்க வேண்டும் என்கின்ற முனைப்பு இருக்காது. இப்படிப்பட்டவர் “வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்” எனும் கருத்தில், தன்னம்பிக்கையின்றி காலத்தை ஓட்டுவார்.
அதேபோல ஒருவர் எந்த லக்னம், ராசியில் பிறந்திருந்தாலும், ஜாதகத்தில் முதன்மை ஒளிக் கிரகங்களான சூரியனும், சந்திரனும் வலுவிழக்கவே கூடாது. சூரியன்தான் ஒருவருக்கு ஊக்கத்தைத் தருபவர். ஒரு மனிதன் முன்னேறுவதற்கு தேவையான விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் தருபவர் சூரியன் மட்டுமே. சந்திரன் இதற்கு உறுதுணையான மனோபலத்தை அருள்பவர்.
ஜோதிடத்தின் தலைவன் சூரியன் மட்டும்தான். சூரியன் சுபத்துவமாகி, அவருக்கு மிகவும் வலுத்தரும் திக்பலம் எனும் பத்தாமிடத்திற்கு அருகில் இருப்பவர்கள் அல்லது பத்தாமிடத்தை சூரியன் தொடர்பு கொண்டவர்கள் இளம் வயதில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் தங்களுடைய சொந்த முயற்சியைக் கொண்டு தன்னம்பிக்கையுடன் முன்னேறி, முன்னுக்கு வந்து விடுவார்கள். இதனால்தான் சூரியன் தொழில்காரகன் என்று குறிப்பிடப்படுகிறார்.
எந்த ஒரு தொழில் செய்வதற்கும், சூரியன் மற்றும் அவரது வீடான சிம்மத்தின் தயவு தேவை. ஒரு தொழிலை திறம்பட செய்வதற்கு மூன்று கிரகங்களின் சுப வலுக்கள் வேண்டும். இந்த மூன்றில் ஒன்றாக நிச்சயம் சூரியன் இருப்பார். தொழிலை லாபகரமாக நடத்துவதற்கும், ஆட்களை வேலை வாங்குவதற்கும் ஒருவருக்கு ஆளுமைத் திறன் வேண்டும். இந்த ஆளுமை எனும் தன்னம்பிக்கையை தருபவர் சூரியன்.
அதேபோல பாபிகளான சனி, செவ்வாய் ஆகியோர் லக்னாதிபதியாகவோ, ஐந்து, ஒன்பதாம் அதிபதிகளாகவோ அமைந்து, ஆட்சி, உச்சம் எனப்படும் நேர் வலுப் பெற்றிருக்கும் நிலையில், சுபர்களின் தொடர்புகளை இணைவு அல்லது பார்வை எனும் வகையில் நிச்சயமாக பெற்றிருக்க வேண்டும். சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் தனித்து சுபத்துவமோ, சூட்சுமவலுவோ இன்றி ஜாதகத்தில் வலுத்திருப்பது யோகத்தை தராது.
ஜாதகத்தில் லக்னம், ஐந்து, ஒன்பது ஆகிய மூன்று பாவகங்களும் சுபத்துவம் பெற்றிருந்தாலே ஒருவர் எந்த வகையிலும் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க கூடியவராகத்தான் இருப்பார். இவை மூன்றும்தான் ஒரு ஜாதகத்தின் மூல ஆதாரங்களாக சொல்லப்படுகின்றன. இந்த மூன்றும் வலுப் பெற்றிருக்கும் நிலையில் ஒருவருக்கு நிச்சயமாக வாழ்வில் குறைகள் இருக்காது.
அதேநேரத்தில் அவர் எந்தவிதத்தில் யோகங்களை அனுபவிப்பார் என்பதை இரண்டு, பத்தாமிடங்கள் குறிப்பிடுகின்றன. இதில் பத்தாமிடம் அவர் என்ன தொழில் செய்து பிழைப்பார் அல்லது தொழில் செய்யாமல் முன்னோர் சொத்தை வைத்து பிழைப்பு நடத்துவாரா அல்லது தானே சொந்தமாக எதையும் செய்வாரா என்பதைக் குறிப்பிடுகிறது.
இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், சிலர் எந்தத் தொழிலும் சரிவர செய்யாமல் தோற்றுப் போனாலும், முன்னோர் சொத்தின் மூலமாக யோகங்களை அனுபவிப்பதும், குந்தித் தின்றாலும் குறையாத அளவிற்கு பிறப்பின் மூலமாக பெரும் சொத்தை கொண்டிருப்பதும் 2, 10-ஆமிடங்கள் வலுப்பெறாத நிலையில், 1, 5, 9-ஆம் பாவகங்கள் நல்ல நிலையில் இருப்பதால்தான்.
தனிப்பட்ட தொழில் திறமைகள் இன்றி ஒருவர் முன்னோர் சொத்தை அனுபவித்து, அந்த சொத்தைக் கரைய வைத்தாலும், இறுதிக்காலம் வரை ஒருவர் யோகமாகவே வாழ்ந்து மறைவது இந்த 1, 5, 9-ம் பாவக சுபத்துவத்தால்தான்.
லக்ன, கோணாதிபதிகள் வலுவாக இருந்தாலும் இரண்டு, பத்தாம் பாவகங்கள் கூடுதலாக வலுப்பெற்றிருக்கும் நிலையில் மட்டுமே ஒருவர் தன்னுடைய சொந்த முயற்சியால் தொழிலில் முன்னேற முடியும். இதில் கூடுதலாக, ஒருவரை வேலை பார்த்து சம்பாதிக்க வைக்கும் ஆறாம் பாவகத்தின் சுபத்துவத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மேற்சொன்ன ஜாதக அமைப்பு கொண்டவரே முன்னோர்கள் அல்லது அவரது தந்தை ஒரு சொத்தினை அல்லது ஒரு தொழிலை கையில் கொடுத்திருந்தாலும் அதை மென்மேலும் பெருக்கி, வளர்ச்சியுறச் செய்பவராக இருப்பார். இரண்டு, பத்தாம் பாவகங்கள் வலிமை குறைந்திருக்கும் நிலையில் அவர் முன்னோர்களின் சொத்தை விரயம் செய்பவராக இருப்பார்.
இன்னும் சில விளக்கங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment